கடந்த பல ஆண்டுகளாக இலங்கைக்கு அந்நியச் செலவாணியை ஏற்படுத்தித் தரும் உற்பத்திப் பொருட்கள் தேயிலை, இறப்பர், கோப்பி, எலம் கறுவா என்று நாம் எமது பாடப்புத்தகங்களில் படித்திருக்கின்றோம். எனினும் இந்த இறப்பர் என்பது பல்வேறு வகையான உற்பத்திப் பொருட்களின் தயாரிப்புக்கு பெரும்பங்கு வகிக்கின்றது. ரயர், கைக்கவசம், மருத்துவதுறைசார் உற்பத்திப் பொருட்கள், வீட்டுப்பாவனை உற்பத்திப் பொருட்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் இறப்பராலான எல்லாப் பொருட்களும் இறப்பர் மரத்தினால் பெறப்படும் இறப்பர் பால் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இலங்கையில் மலைநாட்டைப் பொறுத்தவரையில் பெருந்தோட்டத்தொழில் என்பது வெறுமனே தேயிலை தோட்டங்களை மட்டுமே பலர் அறிந்ததாகும்.ஆனால் இலங்கையில் தேயிலையோடு இறப்பர் பெருந்தோட்டச் செய்கையும் பெருமளவில் காணப்படுகின்றது. அந்த வகையில், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெரும்பாலானோரின் சீவனோபாயமாகத் திகழ்வதே இறப்பர் தொழிற்றுறை என்பதை மறுக்க முடியாது.
இன்றைய இலங்கையைப் பொறுத்தவரையில், இறப்பராலான பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கின்றதே ஒழிய, ஒருபோதும் அது குறைவடைவதில்லை. இவ்வாறு, இலங்கையில் முக்கிய ஏற்றுமதி மற்றும் பெருந்தோட்டச் செய்கையாக உள்ள இறப்பர் இரத்தினபுரி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட பகுதியில் இறப்பர் தோட்டங்கள் காணப்படுகின்றன.இவ்வாறான இறப்பர் பெருந்தோட்டச் செய்கையில் பொதுவாக மக்கள் அறிந்திராத சுவாரசியமான பல முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன.
நன்கு காய்ந்த அல்லது இளங்கன்றான இறப்பர் மரங்களிலிருந்து இறப்பர் பால் எடுக்கப்படுவதில்லை. மாறாக, சாதாரணமாக வளர்ந்த இறப்பர் மரத்திலிருந்தே பால் பெறப்படுகின்றது.
ஒரு இறப்பர் மரத்தில் நாளொன்றுக்கு ஒருமுறை மாத்திரமே இறப்பர்பால் எடுக்கப்படுகின்றது. சில சமயங்களில் மரம் கொண்டுள்ள பால் அளவினைப் பொறுத்து இரண்டாம் முறையும் பால் சேகரிக்கப்படும்.
இறப்பர் மரத்தில் கத்தியால் வெட்டிக் கீறல் செய்து, சுமார் ஒன்று அல்லது இரண்டு மணிநேர இடைவெளிக்குப் பின்னர் சிரட்டையில் நிரம்பிய இறப்பர் பால் ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றப்பட்டுச் சேகரிக்கப்படும். இவ்வாறு பாத்திரத்துக்குள் ஊற்றப்படும் இறப்பர் பால் அதிகளவு செறிவு கொண்டதாகக் காணப்படும்.
மிகுதியாகத் தேங்காய் சிரட்டையில் படிந்திருக்கின்ற இறப்பர் பாலானது, சில மணி நேரங்களில் காய்ந்து இறப்பர் போன்ற தன்மையை அடையும். இதனைத் தோட்டப்புறங்களில் ‘ஒட்டுப் பால்’ என்ற பெயர் கொண்டு அழைப்பர்.
இறப்பர் பால் செறிவு அதிகம் என்பதால், அது மிக சீக்கிரமாக உறையும் கட்டத்தை அடைந்து விடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு சில தொழிலாளர்கள், குறிப்பிட்ட அளவு சோடியத்தினை இறப்பர் பாலில் கலந்து விடுகின்றனர். இதன் மூலமாக பால் உறைவது கட்டுப்படுத்தப்படுகின்றது.
சேகரிக்கப்பட்ட இறப்பர் பாலானது, குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுவரப்பட்டு, நீர்மானி (மெட்றோ அடர்த்தி மானி) கொண்டு அதன் அடர்த்தி அளவிடப்பட்டு பின்னர் இறப்பர் பால் சேகரிக்கும் குறித்த தோட்டத்துக்கு உரித்தான ‘ட்ராக்டர் தாங்கியினுள்’ சேகரிக்கப்பட்டு அந்த தோட்டத்தின் இறப்பர் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
அங்கிருந்து இறப்பர் பாலானது உறைய வைக்கப்பட்டு, இறப்பராக வெளிவர, அவை இலங்கை முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு இறப்பராலான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
காலைப் பொழுதுகளிலேயே அதிலிருந்து அதிகம் பால் சுரக்கப்படுவதால் தொழிலாளர்கள் அதிகாலை ஆறு மணிக்கே தங்களது வேலையை ஆரம்பித்து விடுவர். அதிகாலையில் ஆரம்பிக்கும் வேலையை நண்பகலாகும்போது அவர்கள் நிறைவுக்குக் கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று, இறப்பர் பாலானது பெரும்பாலும் கோடை காலத்திலேயே அதிகம் பால் தருகின்றது. மாரி காலத்தில் இறப்பர் மரங்களில் பால் சுரப்பது குறைவாகவே காணப்படும். இதனால் அக்காலப்பகுதியில் இரத்தினபுரி உட்பட இறப்பர் பெருந்தோட்டங்கள் உள்ள அனைத்து இடங்களிலும் இறப்பர் பால் உற்பத்தி மந்தமாவதோடு, தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைவடைவதால் அவர்களின் சீவனோபாயத்திலும் வீழ்ச்சியை சந்திக்க நேர்கின்றது.
சராசரியாக ஒரு இறப்பர் தோட்டத் தொழிலாளி நாளொன்றுக்கு 20 தொடக்கம் 22 லீற்றருக்கும் குறையாமல் இறப்பர் பால் சேகரிக்க வேண்டும். 20 லீற்றர் இறப்பர் பாலைச் சேகரிப்பதற்கு ஒரு தொழிலாளி 250 தொடக்கம் 300 மரங்களை வெட்ட வேண்டி இருக்கும்.
தினந்தோறும் தனது குடும்ப வாழ்க்கையை நடாத்தச் சிரமப்படுகின்ற தோட்டத் தொழிலாளிகள் இறப்பர் தோட்டங்களிலும் பல பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். அட்டைக் கடியும், நுளம்புக் கடியும் பெரும் போராட்டமாகக் காணப்படுவதோடு, விஷப்பாம்புக்களின் தீண்டல்களும் தொழிலாளர்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகக் காணப்படுகின்றது. இது, இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டுமல்ல இறப்பர் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற சகல இடங்களிலும் நடந்தேறுகின்ற விடயம் ஆகும்.
இறப்பர் செய்கை வருடம் ஒன்றுக்கு சுமார் 1.3 பில்லியன் ரூபா (2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) இலாபத்தை தருகின்ற பெருந்தோட்டச் செய்கையாக விளங்குகின்றது. இது, 2025 ஆம் ஆண்டாகும்போது சுமார் 4.4 பில்லியன் ரூபாவை எட்டக்கூடும் என்பது இலங்கை இறப்பர் ஆராய்ச்சித் திணைக்களத்தின் எதிர்வு கூறலாகும்.
ஆனால், இந்த ஆதாயங்கள் எவையும் உழைக்கும் மக்களைச் சென்றடைவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
இரத்தினபுரி மாவட்டத்தின் இறப்பர் செய்கையின் இன்றைய நிலையை நோக்கினால், ஒரு காலகட்டத்தில் இறப்பர் பால் நிரம்பி வழிந்த சிரட்டைகளில் இன்று அரைவாசி நிரம்புவதே கடினமாகக் காணப்படுகிறது. இறப்பர் தோட்டங்களில் இறப்பர் மரங்கள் கவனிப்பாரற்றுக் காணப்படுதல், போதிய உரங்கள் இல்லாமை மற்றும் காலநிலை மாற்றத்தால் மரங்கள் அழிவடைய நேரிடுகின்றமை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
மேலும், தற்காலத்தில் இறப்பர் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளப் பிரச்சினையும் இந்தத் தொழிலாளர்களின் வீழ்ச்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
இரத்தினபுரி நகரை அண்மித்த சில பகுதிகளில் இறப்பர் மரங்கள் அழிக்கப்படுவதும் இன்று காணக்கூடியதாக உள்ளது. இறப்பர் மரங்கள் நிரம்பிய காடுகளாக இருந்த ஒரு சில பகுதிகள் இன்று தனியார் துறையினரால் அழிக்கப்பட்டுக் குடியிருப்புக்கள் அமைப்பதற்குரிய நிலங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இறப்பரால் சூழப்பட்டிருந்த இடங்கள் சம தரைகளாக்கப்பட்டதால் வெப்பநிலை இப்பிரதேசங்களில் அதிகரித்துள்ளதோடு, பயிர்களின் வளர்ச்சியிலும் அது தாக்கம் செலுத்தக் காரணமாக இருக்கின்றது. இது, இரத்தினபுரியைப் பொறுத்தவரையில் இறப்பர் பெருந்தோட்டச் செய்கையின் பெருவீழ்ச்சியாகக் கருதப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் பெருந்தோட்டச் செய்கையாகவும், பலரின் சீவனோபாயமாகவும் இருக்கும் இறப்பர் செய்கை குறித்து அக்கறை செலுத்த வேண்டிய கடப்பாடு பலருக்குண்டு. ஆனால், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலையறிந்த இவர்களில் பலர் இந்த மக்களை மறந்தே போய் விட்டனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது. குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தொழிலாளர்களின் குடும்பங்களிலிருந்து பிறந்து வளர்ந்தாலும் அவர்கள் தற்போது அரசியல் பதவிகளில் மாத்திரமே அக்கறை கொண்டு கவனம் செலுத்தி வருவதால் தொழிலாளர்கள் நலன்களைக் கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகின்றது. இந்த நிலை மாற வேண்டும். இலங்கையில் இறப்பர் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் நலன் கவனிக்கப்பட வேண்டும்.
சந்திரமோகன் நிரோஷன்