கனடாவில் கியுபெக் மாகாணத்தில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு இரத்தம் உறைதல் பிரச்சனை பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நான்கு வகையான தடுப்பூசி வகைகளில் , அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வகை செலுத்தப்பட்ட ஒருவருக்கே இந்த கனடாவில் அரிதான ஆனால் ஆபத்து நிறைந்த இரத்த உறைதல் பிரச்கனை முதல் முறையாக காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.
கியூபெக்கின் சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சு மாகாணத்தில் ஒருவருக்கு குறித்த இரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது.
ஆனால், பாதிக்கப்பட்ட நபரின் வயது அல்லது ஆணா பெண்ணா என்ற விபரங்கள் உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே, கியூபெக் சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே குறித்த நபர் ஒரு பெண்ணாக அடையாளம் காட்டினார்.
மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட அவர், தற்போது நலமாக இருப்பதாகவும், உரிய சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த விடயத்தை கியூபெக் மாகாணம் மிக நுணுக்கமாக கண்காணித்து வருவதாகவும், ஒவ்வாமை உள்ளிட்ட எந்த பக்கவிளைவுகள் தொடர்பிலும் மாகாணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்ட பெண் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர் என்ற மேலதிக விபரம் தற்போது வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கிப்படுகின்றது