உலகில் வாழ்க்கைத்தரம், சமூக நீதி, பெண்கள் உரிமை என பல்வேறு விடயங்களில் சிறந்து விளங்கும் நாடுகளில் கனடா முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமது கனடா முதலிடத்தை அடைவதற்கு காரணங்கள் பல உள்ளன என்று சொல்லப்படுகின்ற இந்த நேரத்தில்,.சிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்தையே பின்னுக்குத் தள்ளி கனடா…முதலிடத்தைப் பிடித்துள்ளது என்ற செய்தி கனடியர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், முதல் முறையாக கனடா அந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் பல இணைந்து ஆய்வு மேற்கொண்டு வெளியிடும் இந்த பட்டியலை தயாரிப்பதில், கொரோனாவால் உலகமே சுழற்றியடிக்கப்பட்ட நிலையிலும், அதையும் தாங்கி, தாண்டி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் தொழில்நுட்பம் இவற்றுடன், பிரச்சினை ஏற்படும் நேரத்தில் எப்படி சீக்கிரம் அதை சமாளித்து எழுவது என்பது முதலான பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் அனைத்து பிரச்சினைகளையும் மேற்கொண்டு கனடா 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே முதலிடத்தில் இருந்த சுவிட்சர்லாந்தை 4ஆவது இடத்துக்குத் தள்ளி பட்டியலில் கனடா முதலிடம் பிடிக்க, ஜப்பான் இரண்டாவது இடத்தையும், ஜேர்மனி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
அவுஸ்திரேலியா 5ஆவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது, அமெரிக்கா 7ஆவது இடத்திலிருந்து முன்னேறி 6ஆவது இடத்துக்கு வந்துள்ளது.