கனடா உதயனுக்காக தீபச்செல்வன்
ஈழ இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் உறவுகள் தெருத்தெருவாக போராடி வருகிறார்கள். போர் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகின்றன என்றால், அவர்கள் தெருக்களில் இருந்து போராடத் துவங்கி பன்னிரண்டு வருடங்கள் ஆகின்றன. போரில்காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளை தேடிப் போராடியே இந்த உறவுகளும் காணாமல் போய்விடுகின்ற கதைகளும் நடக்கின்றன. இன்றைக்கு ஊடக வெளிச்சத்தில் தெரியாமலே இவர்களின் கதைகள் தொடர்கின்றன.அண்மையில்கூட கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிக்கும் உண்மைக்குமானஒரு அடையாளப் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.
அப்போது அருகில் ஒரு புதிய கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. தமிழ்க்குரல் ஊடகநிறுவனர் தனபாலசிங்கம் சுதாகரன் அவர்கள் என்னை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். எனக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. இன்றைய ஜனாதிபதிகோத்தபாய ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர், கிளிநொச்சியில் மாத்திரம் 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் ஆயிரக் கணக்கானோர் நிறைகளில் வாடுகின்ற நிலையில், இப்போதுஇருப்பவர்களையும் சிறையில் அடைகின்ற வேலைகளில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஈடுபடுகின்றார்.
நாங்கள் ஏற்கனே சிறையில் வாடுகின்ற தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுப்போராடிக் கொண்டிருக்கின்ற தருணங்களில், இன்னும் புதிய இளைஞர்களும் அரசியல் கைதிகளாகமாற்றப்படுகின்ற கொடுமையை என்னவென்பது? அங்கே சந்தித்த மனிதர்கள் மனதை அதிரச் செய்தார்கள். மிகுந்த உருக்கத்தை தருகின்ற கதைகள் அவர்களுடயவை. ஒரு பச்சைக் குழந்தை தன் தந்தையின் விடுதலைக்காக அந்த தகரக் கூடத்தில் இருந்து போராடுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளின் முன்னர்அக் குழந்தை கருவில் இருந்த போது அதன் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பச்சைக் குழந்தை என்ன பாவம் செய்தது என்று மனம் அந்தரித்தது. இப்படி18 கிளிநொச்சியை சேர்ந்த 18 இளைஞர்கள் காரணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில்பெரும்பாலானவர்கள் அண்மைய காலங்களில் திருமணமானவர்கள். தமது குடும்பம், குழந்தை என்றுதம் தனிப்பட்ட வாழ்க்கையை கவனித்து வருபவர்கள். அத்துடன் அவர்களுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 2009இல் சிறுவர்களாக இருந்த அவர்கள் ஈழத் தமிழ் இனத்தில் பிறந்ததைத் தவிர எந்தப் பாவத்தையும் செய்துவிடவில்லை என்பது அவர்கள் குடும்பத்தைப்பார்க்கும் போது நன்றாகவே தெரிகிறது.
எங்கள் இனத்தின்மீதான பாரபட்சம் என்பது இப்போது இன்னுமின்னும் அதிகரித்துச்செல்லுகிறது. தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர், முதலில்செய்த நற்காரியங்களில் ஒன்று மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நயாக்கா விடுதலை செய்யப்பட்டமை.யாழ்ப்பாணம் மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு எட்டுத் தமிழ் அப்பாவி மக்களை படுகொலை செய்தவர்என்ற குற்றச்சாட்டில் அது நிரூபிக்கப்பட்டு, மரணை தண்டனை பெற்ற ஆயுள் கைதியான சுனில்ரத்நாயக்கா விடுவிக்கப்பட்டமை, ஈழத் தமிழ் மக்களை இந்த தீவில் படுகொலை செய்வது என்பதுகுற்றமல்ல என்பதை அறிவிக்கும் ஒரு நிகழ்வே ஆகும்.
அதேவேளை தமிழ் மக்களை படுகொலை செய்த சுனில் ரத்நாயக்கா முன்னர் ஒருபோது பேசுகையில்,தமிழ் மக்களை படுகொலை செய்வது குற்றமல்ல என்றும் அது வீரம் என்றும் கூறியிருந்தார்.அதுவே ஸ்ரீலங்காவின் நீதியாகவும் இருக்கிறது என்பதையே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அதே சமயத்தில், ஆனந்த சுதாகரன் என்ற தமிழ் அரசியல் கைதியின் கதையையும் நாம் அவ்வளவுவேகமாக மறந்திருக்க மாட்டோம். அவர் மனைவி எட்டு ஆண்டுகளாக கணவனுக்காக போராடியே மாண்டுபோனார். இந்த நிலையில் உயிருடன் போராடிய தன் மனைவியின் இறுதிக் கிரிகைக்காக ஆனந்த சுதாகரன்அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரின் ஒரு மகள் தஞ்சம் புக இடமின்றி, ஆதரவின்றி அந்த நிலையில் இருந்த காட்சியையும்பிஞ்சு மகன் கொள்ளிக் குடம் சுமந்து தாயிற்கு இறுதிக் கிரிகை செய்த நடந்த கோலத்தையும் நாம் மறந்துவிடவே முடியாது. அத்துடன் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய அந்தக்குழந்தைகளின் காட்சிகூட இந்த தீவில் ஈழத் தமிழர்களின் நிலையை ஈழக் குழந்தைகளின் நிலையைஉலகிற்கு எடுத்துரைக்கும் காட்சிதான். ஆனாலும் என்ன நடந்தது. அப்போது, மண்டெலா என்றும்காந்தி என்றும் புழகப்பட்ட மைத்திரிபபால சிறிசேனவிடம் தம் தந்தையை விடுவிக்குமாறு அந்தக்குழந்தைகள் உருகி உருகிக் கோரிக்கை விடுத்திருந்தனர். விடுவிக்கிறேன் என்று சொல்லிஏமாற்றி இன்றுவரை அந்தக் குழந்தைகள் அநாதராகவே இருக்கின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் – சிங்கள இராணுவக் குற்றவாளிகளின் விவகாரம்இந்த தீவில் எப்படி அணுகப்படுகின்றது என்பதற்கு இந்த இரண்டு கதைகளுமே போதும். இந்த இரண்டு உண்மைகளுமே இந்த தீவில் உள்ள ஒடுக்குமுறையையும் பாரபட்சத்தையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடுகின்ற பல குடும்பங்களின் அகப் புற சிதைவுகள்நமக்கு அதிகம் தெரிவதில்லை. ஊடகங்களிலும் வருவதில்லை. அவர்களைத் தேடித் தேடியே உறவுகள்அழிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த தீவில் பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் மீள் வாழ்வுக்கும் சிங்கள தேசத்தின்நல்லிணக்க எண்ணப்பாட்டுக்குமாக அவர்களை விடுதலை செய்ய சிங்கள ஆட்சியாளர்கள் யாரும்தயாரில்லை. அதேநேரம் சிங்கள மக்களுக்கும் அரசியல் கைதிகளை பற்றி பிழையான செய்திகளையும் தோற்றங்களையும் உருவாக்கி அவர்களை சிறையில் அடைத்து தமது அரசியலை செய்யவே மாறி மாறிஆளுகின்ற சிங்கள தேசிய கட்சிகள் முனைகின்றன. இந்த அரசியல் ஆட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் காலமும் வாழ்க்கையும் கழிகிறது. அத்துடன் இந்த துயரில் அவர்களின் குடும்பங்களும்கரைகின்றன.
இந்தப் பிரச்சினையை முடித்து வைக்க வேண்டிய நேரத்தில், இன்றைய ஜனாதிபதி கோத்தபாயராஜபக்ச தமிழ் இன இளைஞர்களை இன்னும் சிறையில் அடைக்கத் துடிக்கின்றார். வடக்கு கிழக்குதமிழர் தாயகத்தில் மொத்தமாக 29இற்கும் அதிகமான இளைஞர்கள் காரணமின்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஐ.நாவின் மனித உரிமைப் பேரவை உள்ளக விசாரணைக்கு பரிந்துரை செய்கிறது. ஆனால் இங்கே இந்த இளைஞர்கள் நீதிமன்றங்களின் முன்னால் நிறுத்தப்படாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.புலிகளுக்கு உதவினார்கள் என்று பொய் காரணம் சொல்லி, இவர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இல்லாத புலிகளுக்கு எப்படி உதவ முடியும்?
கடந்த காலத்தில் சுமந்திரன் போன்றவர்கள், புலிகளால் தனக்கு அச்சுறுத்தல், தனக்குபுலிகள் குண்டு வைக்கப் போகிறார்கள் என்று சொல்லி அப்பாவிகளை சிறையில் தள்ளியமையின்தொடர் விளைவே இது. தமிழ் மக்களை காப்பாற்றுவார்கள், அல்லது அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி வாக்களித்த சுமந்திரன் இந்த இளைஞர்களை சிறையில் தள்ளுவதற்குகாரணமானவர் என்பதும் இங்கே கசப்பான உண்மைதான். மணிவண்ணனுக்காக திரள்கின்ற சுமந்திரன்கள், இப்படியான அப்பாவிகளையும் மீட்டெடுக்க ஏன் முயலவில்லை?
உண்மையில் இந்த இளைஞர்கள் மாத்திரமல்ல, இவர்களுக்காக போராடுகின்ற அன்னையர்கள்மாத்திரமல்ல, ஒட்டுமொத்த ஈழத் தமிழ் இனமும் சிறையில் தான் வாடுகின்றது. ஈழம் என்ற தேசமே சிறையில் தான் இருக்கிறது. இதிலிருந்து எப்படி மீள்வது என்பதை குறித்து செயலூக்கமாகவும்அறிவுபூர்வமாகவும் சிந்திக்க வேண்டிய கடமைதான் நம் முன்னால் உள்ளது.
கனடா உதயனுக்காக தீபச்செல்வன்