ஸ்காபுறோவில் சில இடங்களில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் திடீரென மாகாண அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது குறித்து ஏமாற்றம் அடைந்ததாக தெரிவிப்பு
ரொரொன்ரோ பெரும்பாகத்தைச் சேர்ந்தவர்களான 5 மத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாரியோ முதல்வருக்கு அவசரக் கடிதம் ஒன்றை நேற்றை திகதியிட்டு எழுதியுள்ளனர். மேற்படி அவசரக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ள ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதி உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, ஸ்காபுறோ வடக்கு உறுப்பினர் சோன் சென், ஸ்காபுறோ கில்ட்வுட் உறுப்பினர் ஜோன் மெக்கே, ஸ்காபுறோ ஏஜின்கோர்ட் உறுப்பினர் ஜீன் யிப் மற்றும் ஸ்காபுறோ மத்திய தொகுதி உறுப்பினர் ஸல்மா ஸாஹிட் ஆகிய ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களே இந்த அவசரக் கடிதத்தை எழுதியுள்ளனர்.
பல விபரங்கள் அடங்கிய இந்த கடிதத்தில் தாங்கள் ஐவரும் இந்ததடுப்பூசி நிலையங்கள் திடீரென மூடப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், ஸ்காபறோ சுகாதார வலையமைப்பின் சென்ரினரி வளாகத்திலும் ஸ்காபறோ சென்றனியல் கல்லூரியின் புறோகிறஸ் வளாகத்திலும் இயங்கிவந்த தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் திடீரென நிறுத்தப்பட்டமை ஸ்காபுறோ மக்களின் உடல் நலனுக்கு ஒரு பாரதூரமான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும், அத்துடன் அதிக தேவை உ ள்ளோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயத்தில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக உணர்வதாகவும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் தெரிவித்துள்ளார்கள்.
மேற்படி கடிதத்தில் , கனடிய அரசு எவ்வாறு ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரத் தேவைகளைக் கவனித்து செயற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ள இந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏப்ரல் மாதம் 14ம் திகதிய நிலவரப்படி கனேடிய அரசியடம் இருந்து ஒன்றாரியோ மாகாண அரசு மொத்தமாக 4,809,595 கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுள்ள விபரங்கள் தங்களுக்கு கிட்டியுள்ளதாகவும், இவ்வாறான சாதகமான நிலையிருந்தும், ஒன்றாரியோ அரசு மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தாத நிலையில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை திடீரென மூடியது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
கோவிட் – நோய்த்தொற்று பரவும் இடங்களில் ஸ்காபுறோவில் பல இடங்கள் ஆபத்தான இடங்கள் என்று சுகாதாரப் பகுதியினரால் அடையாளம் இடப்பட்டு விசேட ஏற்பாடுகள் செய்யப்படுகின்ற நிலையில் ஒன்றாரியோ அரசாங்கம் இவ்வாறாக தடுப்பூசி போடும் நிலையங்களை திடீரென மூடியமை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எனவே மத்திய அரசானது தொடர்ந்து ஒன்றாரியோ அரசாங்கத்திற்கு போதிய ஆதரவை தருவதற்கு தயாராக இருக்கின்றபோது, மூடப்பட்டுள்ள தடுப்பூசி போடும் மையங்களை மீண்டும் உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் படியும் அவர்கள் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களை வேண்டியுள்ளனர்.