சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
(குறள் எண் -127 பால் – அறத்துப்பால், இயல் – இல்லறவியல், அதிகாரம்- அடக்கம் உடைமை)
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
—பேராசிரியர் சாலமன் பாப்பையா
தனக்கு அமைச்சர் பதவியளித்து கௌரவப்படுத்திய அதிபரைப்புகழ்ந்து போகுமிடமெல்லாம் `போற்றி போற்றி`என்று கூறுவது பல நாடுகளில் இயல்பு. அந்தத் தலைவரை இந்திரன், சந்திரன் என்று வானுயரப் புகழ்ந்து தமது காரியங்களைச் சாதித்துக் கொள்வது அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.
அப்படியான புகழ்ச்சி பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருக்கும். அது அந்த தலைவருக்கும் தெரியும். அதைத் தடுக்க மனமில்லாத அவர் அதை ரசித்து மகிழ்வார்.
இப்போதுஇலங்கையின் அமைச்சர் ஒருவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை `ஹிட்லருக்கு` ஒப்பிட்டுக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் பல்லாயிரக்கணக்கான யூதர்களை படுகொலை செய்தது உலக வரலாற்றில் அழிக்க முடியாத கருப்பு பக்கங்கள்.
பாசிசத்தின் வெளிப்பாடான அந்தப் படுகொலைகளின் தாக்கம் இன்றளவும் உலகில் உள்ளது.
தற்போதைய ஜனாதிபதியும் போர்க் காலத்தில் பாதுகாப்புச் செயலராகவும் இருந்த கோத்தாபய ராஜபக்ச மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீதும் பல முன்னாள் மற்றும் இந்நாள் இராணுவ அதிகாரிகள் மீதும் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோத்தாபய ராஜபக்ச ஜெர்மனியின் பாசிச சர்வாதிகாரி ஹிட்லரைப் போல மாறி நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென்று இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம கூறிய கருத்து கடுமையாக எதிர்மறை விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
கடந்த தங்கள்கிழமை கண்டியில் நடைபெற ஊடகச் சந்திப்பு ஒன்றில் திலும் அமுனுகம, ஜனாதிபதி ஹிட்லரைப் போல மாறுவார் என்று தானும் அவருக்கு வாக்களித்தவர்களும் எதிர்பார்த்திருப்பதாக உளறிக் கொட்டினார்.
அப்படியென்றால் கோத்தாபய ராஜபக்ச இன அழிப்பில் ஈடுபட வேண்டுமென்று அமைச்சரும், ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்களும் விரும்புகிறார்களா எனும் கேள்வியை தவிர்க்க முடியவில்லை. அல்லது ஹிட்லருக்கு நேர்ந்த கதி இப்போதைய ஜனாதிபதிக்கும் நேர வேண்டும் என்பது தான் அமைச்சரின் விருப்பமா? என்று சமூக ஊடகங்களில் மக்கள் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்புகின்றனர்.
ஆனால் இதுவரை அமைச்சரின் கருத்தை ஜனாதிபதி கண்டித்ததாகத் தெரியவில்லை. அப்படியென்றால் அந்தக் கருத்தை அவர் ஏற்கிறாரா? எனவும் மக்கள் கேட்கின்றனர்.
அமைச்சர் சொன்ன சர்ச்சைக்குரிய கருத்து இது தான்:
“கோத்தாபய ராஜபக்ச அரச தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் ஸ்ரீலங்காவில் ஓரளவிற்கு சர்வாதிகார ஆட்சி நடக்கலாம் என்று மக்களும் அதேபோல மகாநாயக்க தேரர்களும் கருத்து வெளியிட்டு வந்திருந்தார்கள். அரச தலைவராக கோத்தாபய ராஜபக்ச ஆட்சியேற்று ஹிட்லரைப் போல மாறினாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலையில் மக்கள் தற்போது அரசாங்கம் மீது அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் அவர் ஹிட்லரைப் போல மாறவில்லை என்பதே எனது கருத்தாகும். அவருக்கு வாக்களித்த 69 இலட்ச மக்கள் அவர் ஹிட்லரைப் போல ஓரளவுக்கேனும் செயற்பட வேண்டும் என எதிர்பார்த்த போதிலும் அவர் அப்படி செய்யவில்லை என்பதால் மக்கள் இன்று அதிருப்தியடைந்திருக்கின்றனர். ஜனாதிபதி ஒருமுறையாவது ஹிட்லரைப் போலச் செயற்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் பொறுப்பற்ற சர்ச்சைக்குரிய இந்தக் கருத்தை இலங்கைக்கான ஜெர்மனியத் தூதர் ஹோல்கர் சியூபர்ட் நறுக்கென்று டிவிட்டரில் கண்டித்துள்ளார்.
அடால்ப் ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கான முன்னுதாரணமாக இருக்க முடியாது என அவர் தனது டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.
“ஒரு ஹிட்லர்” இன்று இலங்கைக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுவதை நான் கேள்வியுற்றேன்.மில்லியன் கணக்கான உயிரிழப்புகள் மற்றும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மனித துன்பங்களுக்கும் விரக்திக்கும் அடோல்ப் ஹிட்லரே காரணம் என்ற விஷயத்தை நினைவூட்டுகிறேன்.நிச்சயமாக எந்தஅரசியல்வாதிக்கும் அவர் முன்மாதிரி இல்லை.” என்று தனது டிவிட்டர் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
I‘m hearing claims that “a Hitler“ could be beneficial to Sri Lanka today. Let me remind those voices that Adolf Hitler was responsible for human suffering and despair beyond imagination, with millions of deaths. Definitely no role model for any politician!
— Ambassador Holger Seubert (@GermanAmbColo) April 13, 2021
அவரது டிவீட் மிகவும் அர்த்தம் பொதிந்தது. அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் “ மில்லியன் கணக்கான உயிரிழப்புகள் மற்றும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மனித துன்பங்களும் விரக்திகளும்“. தூதர் சியூபர்ட் மிகவும் நாசூக்காக அதேவேளை மிகவும் அழுத்தமாக- போர்க் காலத்தில் நடைபெற்ற விஷயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது கருத்துக்கு பரந்துபட்ட ஆதரவு கிடைத்துள்ளது. அவரது டிவீட்டை ஏராளமானவர்கள் மீண்டும் டிவீட் செய்துள்ளனர்.
தூதர் சியூபர்ட்டின் ட்விட்டர் கருத்தைவரவேற்றுள்ள, இலங்கைக்கான கனேடியத் தூதர் டேவிட் மெக்கினன், “எனது ஜெர்மனிய சகாவின் வார்த்தைகள் புத்திசாலித்தனமானவை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதி ஹிட்லராக இருக்க விரும்பவில்லை, ஆனால் அவர் ஒரு ஹிட்லராக மாற தள்ளப்படலாம் என்று எச்சரித்திருந்தார்.
‘கண்டிப்பான‘ கோத்தாபய
தான் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றி காலத்தில் நிலவிய வன்முறை ஆட்சியைப் பேணுவதற்கான தனது தயார்நிலையை ஜனாதிபதி இந்த வருடஆரம்பத்தில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
“தங்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தேவையில்லை என்றும், பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்சவே தமக்கு வேண்டும் எனவும் சில பௌத்த பிக்குகள் என்னிடம் கூறுகின்றனர், என்னால்அதனைச் செய்ய முடியும்“ என்று ஜனாதிபதி அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதாவது அடக்கி ஒடுக்கி எந்தளவுக்கும் அழிவுகளை எதிர்கொண்டு நினைத்ததை தன்னால் சாதித்துக்காட்ட முடியும் என்று அவர் தெளிவாகவே கூறியிருந்தார். நாட்டின் ஜனாதிபதியாக தான் இருந்தாலும், தனக்குள் பாதுகாப்புச் செயலர் இன்னும் இருக்கிறார் என்பதே அவர்விடுத்த செய்தி.
பெத்த பிக்குகளின் ஆசிர்வாதம்
இந்த ஹிட்லர் விஷயம் ஒன்றும் இன்று திடீரென்று உதித்த கருத்து அல்ல. அமைதி,சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைப் போதித்து,அதன்படி நடந்து நல்வழி காட்ட வேண்டிய பௌத்த குருமாரே இப்படிக் கூறுவது புத்த பகவானையே வருத்தமடையச் செய்யக் கூடும். புத்தபிரானின் கருத்துக்கள்,உபதேசங்கள் மற்றும் அறிவுரைகளை வாசித்திருப்பவர்கள் `ஹிட்லர் கருத்தை`அவர் கண்டிப்பாக ஏற்க மாட்டார் என்பதில் உடன்படுவார்கள்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வெண்டருவே உபாலி தேரர், கடந்த 2018ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பிறந்தநாள் விழாவில், இலங்கையின் அடுத்த நிர்வாகத் தலைவராக கோத்தாபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ஒரு ஹிட்லராகி, நாட்டில் முறையான நிர்வாகத்தைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
“நீங்கள் ஒரு ஹிட்லர் என்று அழைக்கப்படுகிறீர்கள். எனவே அவர்கள் அழைப்பது போல் இறுதியாக ஒரு ஹிட்லராக மாறியாவது இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை மகா சங்கம் உங்களுக்கு நினைவூட்டுகிறது” என்று வெண்டருவே உபாலி தேரர் தெரிவித்த விடயம் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
”இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியாவது இதைச் சரி செய்யுமாறு நான் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.” என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வலியுறுத்தியிருந்தார்.
வண. பௌத்த குருமார் எந்தளவுக்கு ஹிட்லரை அறிந்திருந்தனர் அல்லது அறியாமலிருந்தனர் என்பதற்கு இதை இவரின் கருத்தை ஒரு எடுத்தௌக்காட்டாகப் பார்க்கலாம்.
அதியுயர் பௌத்த பீடம் ஒன்றின் தலைவர் ஒருவர் மூன்றாண்டுகளுக்கு முன்னர் கூறியதை இப்போது நினைவு கூர்ந்து அமைச்சர் இப்போது `ஹிட்லர்` கருத்தைக் கூறியுள்ளாரா?
ஆட்சிக்கு வந்த புதிதில் தான் ஒரு வித்தியாசமான ஜனாதிபதி என்று கோத்தாபய காட்ட முயன்றார். பாரம்பரியமாக சிங்கள அரசியல் தலைவர்கள் அணியும் `பாலாமணி` உடையைத் தவிர்த்து கால்சராயும், சட்டையும், கோட்டும் சூட்டும் அணிந்து காட்சியளித்தார். தான் அனைவருக்குமான ஜனாதிபதி என்றும், அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாவலராக இருப்பேன் என்றெல்லாம் தேர்தலின் போதும் அதற்கு பின்னரும் கூறி வந்தார். அவரது நடை, உடை , பாவனையில் சிறிது வித்தியாசத்தைக் காண முடிந்தது. இவர் சற்று மாற்றி யோசிக்கக் கூடியவர் என்று அனைவரையும் எண்ண வைத்தது.
ஆனால் காலப் போக்கில் அது நீர்த்துப் போயிற்று. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று நாளாந்தம் கூறி வரும் ஆட்சியாளர்கள், புத்த பகவான் காட்டிய அகிம்சை பாதையில் செல்வார்களா அல்லது ஹிட்லர் காட்டிய அழிவுப் பாதையில் செல்வார்களா என்பதைக் காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது பாதகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் கீழ் பாதுகாப்பு படையினர் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க, கடந்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கீகாரம் அளித்திருந்ததை யாவரும் அறிவர்.