வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை களமிறக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தீர்மானம் எடுப்பதில் செல்வாக்குச் செலுத்தவல்ல அரசியல் பிரமுகர் ஒருவருக்கும், நாகலிங்கம் வேதநாயகனுக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அவருடன் பேச்சுவார்த்தையை நடத்திய அரசியல் பிரமுகர், வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேவையாற்றியுள்ளமை, அந்தந்த மாவட்டங்கள் தொடர்பில் விரல் நுணியில் விபரங்களை கொண்டிருக்கின்றமை மற்றும் அனைத்து மாவட்ட மக்களிடத்தில் காணப்படுகின்ற நன்மதிப்பு ஆகியன தொடர்பில் எடுத்துக்கூறியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மேலும், வடக்கு மாகாண சபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தக்கவைப்பதாக இருந்தாலோ அல்லது தனித்து ஆட்சி அமைப்பதாக இருந்தாலோ இவ்வாறு துறைசார்ந்த ஒருவரே வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றும் குறித்த அரசியல் பிரமுகர் எடுத்துரைத்துள்ளார்.
இந்நிலையில், வேதநாயகன் தான் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கின்றார். அதேநேரம், வேதநாயகனின் தந்தையார் நாகலிங்கம் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக இருந்தமையும் அவருக்கு மேலதிக சாதக நிலைமையாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது.
துறைசார் நிபுணர்களைக் கொண்ட பொதுப்பட்டியல்
இதேவேளை, வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியப்பரப்பில் இம்முறை மும்முனைப் போட்டி ஏற்படுவதற்கான நிலைமைகள் அதிகமுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்கள் தனித்தனியாக களமிறங்குவதே தற்போதைய நிலைப்பாடாக உள்ளது. இவ்வாறான நிலையானது, கூட்டடிணி ஆட்சிக்கே பெரும்பாலும் வித்திடும் என்றும் சில சமயங்களில் முத்தரப்பிடையே காணப்படும்.
முரண்பாட்டால் ஆட்சியில் பங்காளிகளாக இருக்கும்,.பி.டி.பி. மற்றும் அங்கஜன் அணிக்கு கூட்டிணைந்தால் ஆட்சியை கைப்பற்றுவதற்கும் வழிவகுத்து விடும் ஆபத்தும் உள்ளதாக உணரப்படுகின்றது.
இந்நிலையில், கூட்டமைப்பு, முன்னணி, கூட்டணி ஆகிய மூன்று தரப்புக்களும் ஒன்றிணைந்து கட்சி சார்பான அரசியல் செயற்பாட்டாளர்களைத் தவிர்த்து துறைசார் நிபுணர்களை களமிறக்குவது தொடர்பில் முயற்சியொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியையும் மேற்படி அரசியல் பிரமுகரே முன்னெடுத்திருப்பதாக தகவல்கள் உள்ளன. இதன் முதற்கட்ட உத்தியோகப் பற்றற்ற பேச்சுவார்த்தையொன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் விக்னேஸ்வரன் தரப்புடனும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
இந்த முயற்சிகள் யாவும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் இடம்பெற்றிருக்கின்றன.
எனினும், தற்போதைய சூழலில், மாகாண சபைகளுக்கான தேர்தல் கிட்டிய தொலைவில் நடத்தப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்பதோடு தற்போதைய ஆளும் தரப்பு அரசியல் கூட்டணியான பொதுஜன பெரமுனவினுள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இருவேறு நிலைப்பாடுகள் இருப்பதாகவும் ‘உயர்மட்டம்’ மாகாண சபை தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.