தீபச்செல்வன்
நம் சமூகத்தில் எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நமக்கான நீதிக்காக யாரோ ஒருவர் வருவார் என்றும் ஒரு மீட்பர் வந்து நமக்கு நீதியை தருவார் என்றும் நாம் நம்புவதுண்டு. தெய்வங்கள்மீது கூட நம்பிக்கையை சுமத்திவிட்டு இருப்போம். சிலநேரங்களில் சமூக நீதிக்காகவும் இன நீதிக்காகவும் கூட இப்படி இருந்துவிடுவதுண்டு. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதிகள் தலை விரித்தாடிய போது தலைவர் பிரபாகரனும் யாரோ ஒரு மீட்பர் வருவார் என இருந்துவிடவில்லை. மண்ணையும் மக்களையும் மீட்கவும் அவர்களின் உரிமையை நிலைநாட்டவும் அவரே முயன்றார். அதனால் அவர் ஈழத் தமிழினத்தின் நிகரற்ற போராளியாக மீட்பராகவே ஆனார்.
வரலாறு நமக்கு இதைத்தான் கற்றுத் தருகின்றது. சமயங்களின் வரலாறுகளிலும் தெய்வங்களின் அதிசயங்களிலும் இலக்கியங்களிலும்கூட அந்த முயற்சியைதான் நாம் முக்கியமான ஆயுதமாக கற்றுக் கொள்ள வேண்டும். இயக்கமும் முயற்சியும் இல்லாதவர்களுக்கு இந்தப் பூமியில் எதுவும் இல்லை. அவர்களுக்கு இந்தப் பூமி பாரமாக இருக்கும். வாழ்க்கைகூட பாரமாகத்தான் இருக்கும். அதே சமயத்தில் இயக்கமும் முயற்சியும் நிறைந்த செயற்பாட்டு மனிதர்கள் இந்த பூமியை அழகுபடுத்துகிறார்கள். அவர்கள் முன்னுதாரணம் கொண்ட மனிதர்களாக நம் முன்னால் இருந்து கொண்டே இருப்பார்கள். சொல்லுக்கு முதல் செயல் என்ற தலைவர் பிரபாகரனின் மொழியும் இதைதான் சொல்கிறது.
ஒரு காலத்தில், அதாவது 2009 இனப்படுகொலை முடிந்த தருவாயில், போர்க்குற்றம், இனப்படுகொலை குறித்து பேசிய போது ஈழத்தில் உள்ளவர்களில் சிலர்கூட நம்பிக்கை கொள்ளவில்லை. இனி இதுவெல்லாம் சாத்தியமா என்றுதான் பேசினார்கள். அன்றைக்கு ஈழத்திற்கு வெளியில் தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும்தான் ஈழ இனப்படுகொலை குறித்து அதிகம் பேசப்பட்டது. அதுவே மிகவும் நியாயமானதும்கூட. ஏனெனில் ஈழ நிலம் குரலற்று இருக்கின்ற சமயங்களில் எல்லாம் அதன் குரலாகவும் உயிராகவும் இருப்பது தமிழகமும் புலம்பெயர் தேசமும்தான்.
இதன் முக்கிய வெளிப்பாட்டு அம்சமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், பின்னதாக ஈழத்தில் வடக்கு மாகாண சபையில் இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதையும் அதற்கான நீதியை சர்வதேச விசாரணை வாயிலாக வழங்க வேண்டும் என்பதையும் புலம்பெயர் தேச மக்கள் பல்வேறு வகையிலான போராட்டங்கள் வாயிலாக எடுத்துரைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சர்வதேச உண்மை மற்றும் நீதிககான செயற்திட்ட அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கையின் இன்றைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் இனப்படுகொலை சார்ந்த குற்றங்கள் தொடர்பான 50 பக்க ஆவணம் ஒன்றை பிரிட்டன் வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்துக்கு சமர்பித்துள்ளார். உரிய சட்ட வழிமுறைகளின் அடிப்படையில், நிறைவான ஆதாரங்களுடன் அவர் வழங்கியுள்ள ஆவணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறப்படுகிறது.
யஸ்மின் சூக்கா அவர்கள், கடந்த பத்தாண்டுகளாக இலங்கை நிலவரம் தொடர்பாக தன்னுடைய அவதானத்தை செலுத்தி வருகின்றார். அத்துடன் இலங்கை அரச படைகள் இழைத்த மிகப் பெரும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றார். ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்து வருகின்ற யஸ்மின் சூக்கா, உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் இனங்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற மனித உரிமைப் போராளி. அத்துடன் நடு நிலையாகவும் ஆதாரபூர்வமாகவும் இவர் உலகில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர் என்பதும் இவர்மீதான பொது மதிப்பீடாகும்.
இந்த நிலையில், யஸ்மின் சூக்கா முன் வைத்துள்ள ஆவணம், சவேந்திர சில்வா 06 ஜுலை 2020 இல் உருவாக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் உலகளாவிய மனித உரிமைகள் தடை பொறிமுறையின் கீழ் ஏன் கண்டிக்கப்பட வேண்டும்? என நியாயபூர்வமாக வாதிடுகின்றது. இலங்கையின் வடக்கில் 2009 இல் இடம்பெற்ற சிவில் போரின் இறுதிக் கட்டத்தின்போது 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்தபோது சவேந்திர சில்வா வாழ்வுரிமை உட்பட பாரிய மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதில் அவரது பங்கு குறித்தும் இந்த ஆவணம் ஆதாரங்களை சமர்பிப்பு செய்துள்ளது.
அத்துடன் அது பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறப்பட்ட இடங்களில் அரசால் மேற்கொள்ளப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் உணவுக்காக வரிசையில் நின்றவர்கள் மீதான எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதலில் உயிர்தப்பிய தமிழர்களின் கொடுமை நிறைந்த நேரில்கண்ட சாட்சி வாக்குமூலத்திலிருந்து இந்தச் சமர்ப்பிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளில் வாழுகின்ற இனப்படுகொலையின் சாட்சியங்களின் அடிப்படையில் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டிருப்பதும் இதன் இன்னொரு முக்கிய அம்சமாகும்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 41ஆவது கூட்டத் தொடரில் நிறவேற்றப்பட்ட இலங்கை குறித்த 41/1 என்ற தீர்மானம், சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை பரிந்துரை செய்யும் என ஈழத் தமிழ் மக்களும் சர்வதே மனித உரிமை செயற்பாட்டாளர்களும் எதிர்பார்த்திருந்த சமயத்தில், மீண்டும் ஸ்ரீலங்கா அரசுக்கு கால அவகாசத்தையும் உள்ளக விசாரணையை நடத்தும் வாய்ப்பையும் பிரித்தானியா தலைமையிலான நாடுகள் கொண்டுவந்த தீர்தானம் வழங்கியுள்ளது. ஸ்ரீலங்காவை மயிலறகால் தடவும் இந்த தீர்மானத்தைக்கூட, தமது நாட்டுக்கு எதிரான சதி என்றும் சர்வதேச தலையீடு என்றும் ஸ்ரீலங்கா அரசு சொல்லி வருகின்றது.
இதனால் இன்னொரு ஆபத்தையும் ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் தீர்மானம் நிறைவேறி ஈரம் காய்வதற்கு முன்னரே, தமிழ் மக்கள் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளையும் ஈழத் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கும் ஐ.நா தீர்மானம் மீண்டும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதையே இப்போதுகூட உணர்ந்து கொள்ளலாம்.
நாம் இப்போது செய்ய வேண்டியது, உலகம் எங்கும் வாழ்கின்ற ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் இனப்படுகொலையின் சாட்சிகளாக மாற வேண்டும். குறிப்பாக, புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற மக்கள், தாம் ஏன் தமது நிலத்தை விட்டு குடி பெயர்ந்து அகதிகளானோம் என்ற கதையை வாக்குமூலங்களாக சாட்சியங்களாக அளித்தாலே அவையே இனப்படுகொலைக்கான பெரும் ஆதாரங்கள் ஆகும். இனப்படுகொலைக்கான நீதியில்தான் எஞ்சிய ஈழத் தமிழ் இனத்தின் விடுதலையும் அமைதியும் வாழ்வும் உரிமையும் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்காக நாம் பல்வேறு அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் கடந்தும் செயற்பட வேண்டும். போராட வேண்டும். மெய்யாகவே போராடாத எந்த இனமும் விடுதலையை பெறுவதில்லை.