(மன்னார் நிருபர்)
(22-04-2021)
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தக்கவைத்து புதிய தவிசாளராக ரெலோவைச் சேர்ந்த கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினை பிரதிநித்துவப்படுத்தும் கனகையா தவராசா, கடந்த மூன்று வருடங்களாக கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவிவகித்தார்.
இந்நிலையில் கடந்த 18.03.2021 அன்று, அவர் தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
அந்தவகையில் குறித்த பிரதேசசபையின் புதிய தவிசாளருக்கான தேர்வு 22.04.2021அன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 09.04.2021 அன்று வெளியிடப்பட்ட, 2222/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியிலும் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையின் புதிய தவிசாளர் தேர்வு இடம்பெறுமென அறிவித்தல் வெளியாகியிருந்தது.
இதற்கமைவாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளரல் தலைமையில் இன்று புதிய தவிசாளரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவைச் சேர்ந்த கமலநாதன்-விஜிந்தன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் சற்றுமுன்னதாக தெரிவித்தார்.
24 உறுப்பினர்களை கொண்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் இன்றைய வாக்கெடுப்பில் இரு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில் 22 பேர் புதிய தவிசாளர் தெரிவில் பங்கேற்றிருந்தனர்.
புதிய தவிசாளருக்கான போட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கமலநாதன்-விஜிந்தனும் பொதுஜன பெரமுன சார்பில் அன்ரனி-ரங்கதுஷாரவும் போட்டியிட்டனர்.
அதையடுத்து புதிய தவிசாளர் தெரிவை பகிரங்க வாக்கெடுப்பின் மூலமாகவா அல்லது இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகவா நடத்துவது என்பது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.
14 வாக்குகள் பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவாகவும் 4 வாக்குகள் எதிராகவும் செலுத்தப்பட்டிருந்தன.
இதையடுத்து நடைபெற்ற புதிய தவிசாளருக்கான தெரிவில் 15 உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கமலநாதன்-விஜிந்தனுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
பொதுஜன பெரமுனவை சேர்ந்த 03 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒருவரும் என நால்வர் எதிராக வாக்களித்திருந்தனர்.
சுயேட்சை உறுப்பினர்கள் 2 பேர் மற்றும் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் என மூவர் நடுநிலை வகித்தனர்.
இதன் மூலம் 11 மேலதிக வாக்குகளால் கமலநாதன் – விஜிந்தன் பதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.