உலகியல் வாழ்வினை உயிர்ப்பிக்கும் மூலமந்திரமாக இருக்க வேண்டிய ஒரு தலைப்புக்கு, நியாயம் செய்யும் விதமாக அமைந்த புனைகதை வடிவமிது.
அத்துடன் நிஜங்களின் கோரமுகத்தினை தன் கருப்பொருளாயும் கொண்டிருக்கிறது. இடையிடையே சோர்வடைந்தாலும், இலக்கினை மறந்துவிடாத அஞ்சலோட்ட அணிபோல ‘விழுதல் என்பது எழுகையே’ என்னும் நாவலின் படைப்பாளிகள் தமது வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றி உள்ளனர் என்றே கூறலாம். பல்வேறு இணையத் தளங்களிலும், தமிழ் எழுத்தாளர் இணைய அகம் என்ற முகநூலிலும் 2014 இல் வாரத்திற்கு ஒருமுறை தொடராக இந்நாவல் முதலில் எழுதப்பட்டது.
நெல்லியடி ‘பரணி’ அச்சகத்தினால் 2020 மார்கழி மாதம் வெளியிடப்பட்ட இப்படைப்பு தலைப்புக்கேற்ற முகப்புடன் அமைந்திருப்பது மிகச் சிறப்பு. நாவல்களை ஆழ்ந்து வாசித்த அனுபவம் பல உண்டு. ஆனால் நாவலுக்கான முன்னுரையே ஆழ்ந்து வாசிக்கும்படி அமைந்து, நாவலை முழுமையாக வாசித்ததற்கான உணர்வுகளைத் தரும் அனுபவம் அருமையானது . மையக்கருத்தையும், பாத்திரப் படைப்புகளின் பல்பரிமாணத் தன்மையினையும், இறுதி முடிவுகளையும் தமது நுண்மையான கூர்நோக்கினால் ஆய்வு செய்த பேராசிரியர் வ. மகேஸ்வரன் அவர்களுக்கு முதல் பாராட்டு உரித்தாகட்டும்.
தமது கடமையைச் செவ்வனே செய்யும் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. அடுத்து, இவ்வகையான முயற்சி ஒன்றினை ஒப்பேற்ற வேண்டும் என்ற தனதொரு கனவினை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உறங்க விடாது கட்டிக் காத்து, இன்று தன் கண்முன்னே காணும் பேறு பெற்றவரும், அனைவருக்குமான நன்றியுரையை தந்திருப்பவருமான எழுத்தாளர், நாடகக் கலைஞர், கட்டுரையாளர் என பன்முக ஆளுமைகள் கொண்ட ஏலையா திரு. க. முருகதாசன் அவர்களும் பாராட்டுக்கு உரியவர். தாயகத்தில் தொடரும் இனப்பிரச்சனை எண்ணற்ற இன்னல்களையும், பேரழிவுகளையும் எமக்கு அளித்திருந்தாலும், உலகெங்கும் பறந்த தமிழர்களினால் பரந்திருக்கும் தமிழ்மொழியும், புலம்பெயர் தமிழ் சமூகத்தினரால் மேற்கொள்ளப்படும் கலைசார் முயற்சிகளும் அதன் ஒரு வரமாகவே இன்று தோற்றம் பெற்றுள்ளன.
அவ்வாறான ஒரு முயற்சியில் பத்து நாடுகளைச் சேர்ந்த இருபத்தாறு தமிழ் எழுத்தாளர்கள் இணைந்து எழுதியதே இந்நாவல். பூகோளமெங்கும் சிதறிப் பரந்திருந்தும், எழுத்து எனும் மாபெரும் சக்தியின் வாயிலாக இணைந்து, எமது அவல சரித்திரத்தின் மிகமுக்கிய கூறான அகதி வாழ்வினை ஆவணமாக்கியிருக்கும் இத்தமிழ் எழுத்தாளர்களுக்கான
நன்றியைத் தெரிவிப்பது எமது கடமை.
ஆனால் தாயகத்தில் பல்வேறு காரணிகளால் ஒப்பேற முடியாது போன தமிழினத்தின் ஒற்றுமையின்மையே தமிழர்களின் இன்றைய நிலைக்குக் காரணம் என்ற உண்மையின் தரிசனம் மனதை உறுத்தவும் தவறவில்லை. இதன் அடிப்படையில் இனப்பிரச்சனையின் ஓர் அங்கமாகவே வளர்ந்த காட்டிக் கொடுப்புகளினாலும், அரச பயங்கரவாதத்தாலும் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில், மருத்துவப் படிப்பைத் தொடரமுடியாது புலம்பெயரும் அகதி இளைஞனின் கனத்த மனதுடன் ஆரம்பிக்கிறது கதை.
புதியதேசத்தில் அவன் அனுபவிக்கும் துயரங்களில் அதிகம் மனதை வருத்தியது அகதிகள் மேல் அந்நாட்டவர் கொண்டிருந்த இளக்காரமான நோக்கு. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததை ஒத்து, மொழியறியா தேசத்தில் உறைபனியின் பாதிப்பை விடக் கொடியது
அவர்கள் அனுபவித்த மனத்துயரம். கதையின் ஆரம்ப அத்தியாயங்களில் கூறப்பட்டிருக்கும் இந்த உணர்வுகள் மிகுந்த மனவலி தருவன. புலம்பெயர்ந்த பல உறவுகள் இவ்வாறான
அனுபவங்களைக் கூறக் கேட்டிருந்தாலும், இப்புனைவில் அவை ஆழமான உணர்வைத் தரும் விதமாக எழுத்து வடிவம் கொண்டிருக்கின்றன. காலப்போக்கில் எதையும் எதிர்கொள்ளும்
மனப்பக்குவத்தை ஒரு அகதி அடையக் கூடும்.
ஆனால் ஆரம்பகால மனநிலை என்பது பெற்றவரின் கையைவிட்டு வழிதவறிய சிறு குழந்தையை ஒத்தது. ஆரம்ப அத்தியாயங்கள் இவ்வுணர்வினை வாசகனுக்கு சிறப்பாகக் கடத்துகின்றன.
நாவலின் நடுப்பகுதியில் மகேந்தி ஊடாகச் சொல்லப்படும், நாடுகளுக்கு இடையிலான சட்டபூர்வமற்ற எல்லைதாண்டும் பயண அனுபவங்கள் எத்தனை பயங்கரமானவை. மயிர்க்கூச்செறிய வைப்பவை. புலம்பெயர்ந்தவர்கள் சுமந்து செல்லும் கடன்சுமைகள், குடும்பப் பொறுப்புகள், காதல் வலிகள், ஏமாற்றங்கள், வஞ்சிக்கப்படுதல் என்பன ஒரு பொதுமைப் பண்பாகவே காணக் கிடைக்கின்றன.
அகதியாய் புலம் பெயர்ந்தவர்களிடம் மனிதநேயம் இன்னும் மறைந்து போய்விடவில்லை என்பது ஆறுதல் தரும் போக்கு. தவம் அண்ணா, டேவிட் அங்கிள் பானுஅக்கா,முதியவர், நண்பன் சாந்தன், விவேக் குடும்பம் என நீளும் பட்டியலிலுக்கு எதிர்மாறாக முரளி,சிவம் போன்றவர்களின் வஞ்சகப்போக்கு மனித இயல்புகளின்வக்கிரங்களாகவே கொள்ளப்பட வேண்டும்.
மாற்றங்களின் சூத்திரதாரிகளான பேராசிரியர் குமாரவேல், பேராசிரியை மங்கையற்கரசி போன்றவர்களின் பாத்திரப் படைப்புகள் மிகச் செம்மையாக செதுக்கப் பட்டுள்ளன. சட்டபூர்வமற்ற புலம்பெயர் பயணங்களில் முகவர்களால் வஞ்சிக்கப்படும் பெண்களின் அவலமும், மணவாழ்வில் துரோகம் இழைக்கப்பட்ட பெண்களின் கண்ணீரும் கிளைக்கதைகளாக சொல்லப் பட்டிருக்கின்றன.
இதுவும் யுத்தசூழ்நிலை தந்த அவலங்களில் ஒன்று. பொதுவாக இயல்பான மொழிநடையிலும், யதார்த்த போக்கிலும் புனைவு கூறப்பட்டிருந்தாலும் இடையிடையே சற்று மாறுபட்ட நாடகீய போக்கு தென்படுவதும், கடந்த கால நினைவுகளை மீட்டல் என்ற வகையில் மீளவும் பழைய கதையைச் சொல்லல் என்பதும் சற்றே சலிப்பைத் தந்தாலும் ஒப்பீட்டளவில் புறக்கணிக்கக் கூடியவைதான். இவ்வாறான கூட்டுப் புனைவுகளில் ஒரே எழுத்து நடையை எதிர்பார்த்தல் நியாயமும் ஆகாது.
இலட்சியங்களை நோக்கிய எண்ண ஒருமைப்பாட்டுடன் உள்ளவர்கள் சொந்தநாட்டில் வாழ்ந்தாலும், அன்றி இன்னல்கள் நிறைந்த பிறதேச வாழ்வைக் கொணடாலும் தமது இலக்குகளை அவர்கள் அடைந்தே தீருவார்கள். இந்த நாவல் புலம்பெயர் அகதிகளின் துன்பங்களை மட்டும் கூறவில்லை. அகதிகளின் கனவுகள் நனவாவதையும் கூறிநிற்பது உந்துசக்தியைத் தரும் நேர்மறை சிந்தனைகளுடன் அமைந்துள்ளது.
மருத்துவப் படிப்பை கைவிட்டு வெவ்வேறு நாடுகளுக்குப் புலம்பெயரும் காதலர்களான சீலனும் கலாவும் இணைந்தார்களா, வாழ்வில் வெற்றி கண்டார்களா என்ற இறுதி முடிவு நான்கு எழுத்தாளர்களினால் எழுதப்பட்டு இருந்தாலும் மனதில் தங்கியவை இறுதி இரண்டுமே. நம்பிக்கையின் ஔிக்கீற்றுகளை இரண்டுமே கொண்டிருக்கின்றன.
வெற்றியாளர்களாக தாயக முன்னேற்றத்தில் தமது பங்களிப்பை நல்க நாடு திரும்புதல் என்னும் கொள்கை ரீதியான முடிவு சீரிய சிந்தனைகளை விதைக்கின்றது. எனினும் எமது தாயகம் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய பாதுகாப்பான நிலையை இன்னும் அடையவில்லை என்பது இம்முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவாகவே இருக்கும். அவ்வாறே ஆயினும், ‘விழுதல் என்பது எழுகையே’ என மீண்டும் மீண்டும் நிரூபிக்க வல்லவர்கள்தான் இந்த இளம் தலைமுறையினர். நம்பிக்கையே வாழ்க்கை.
இந்நாவலில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் சர்வாதிகாரி கிட்லர் சொன்னதாகச் சொல்லப்பட்ட பாதை இல்லை என்று நிற்காதே நீ நடந்தால் அதுவே பாதையாகும் என்ற வார்த்தை இந்நாவலின் போக்கினை முனைப்புறுதி கொள்ள வைத்திருக்கின்றது