23-04-2021 கதிரோட்டம்
இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வாழ்க்கை என்பது ஒரு பிரச்சனையாகவே உள்ளது. வடக்கு கிழக்கு மக்கள், இஸ்லாமியர்கள், சிங்கள மக்கள், தோட்டத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினர்களுக்கும் வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதை நாம் காண்கின்றோம்.
மேல் தட்டு மக்கள் மற்றும் நடுத்தர வர்த்தகத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் போன்றோர், எவ்வகையான தங்கள் பிரச்சனைகளையும் சமாளித்துச் செல்லும் வாய்ப்புக்கள் அவர்களுக்கு உள்ளன. ஆனால் அடித்தட்டு மக்கள் என்ன செய்வார்கள். முக்கியமாக வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னர் அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கும் இலட்சக் கணக்கான மக்கள் உள்ளார்கள். அவர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவல்ல அரசு சார்ந்த அதிகாரிகள் பலர் இருக்கின்றார்கள். ஆனால் அந்த பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புக்களோடு வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினர்களாக்கிய எமது தமிழ் பேசும் எம்பிக்கள் பற்றிய பல கேள்விகளே இந்த வாரத்தின் கதிரோட்டத்தின் முக்கிய விடயங்களாக எமக்கு தோன்றுகின்றன.
தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி ஏனைய சிறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இலங்கைப் பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் கூட எமது மக்களுக்காக என்ன செய்கின்றார்கள் என்பதே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கேள்வியாக உள்ளது இவர்களுள் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவோ அன்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பியோ, இவர்கள் கூட விதி விலக்காக இருக்க முடியாது.
கடந்த பொதுத் தேர்தல் நடந்து முடிந்து பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்ட ஆரம்ப நாட்களில், ‘புதிய துடைப்பம் நன்றாக சுத்தம் செய்யும்’ என்ற கூற்றுக்கு ஏற்ப பல தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘சத்தம்’ எழுப்பினார்கள். ஆனால் நாளடைவில் இலங்கைப் பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரல் மற்றும் எதிர்பாராத சம்பவங்களினால் நாடே திசை மாறிக்கிடக்கின்றது. தென்னிலங்கையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களே கிளர்ச்சி செய்யும் அளவிற்கு அங்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியின் பிரதிபலிப்புக்கள் வெடித்துக் கிளம்பிய வண்ண்ம் உள்ளன. முக்கியமாக “ சீனாவின் துறைமுக நகரம்”; என்னும் விடயம் அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையே ஜனாதிபதியையும் பிரதமரையும் பார்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு பிரச்சனைகள் தோன்றியுள்ளன.
இவ்வாறான இடர்கள் நிறைந்த இந்த நேரத்தில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நாளாந்த கடமைகளாக எமது மக்களுக்கு எவ்வகையான சேவைகளை ஆற்றுகின்றார்கள் என்பதை கவனிக்க வேண்டிய பொறுப்பு அங்குள்ள சமூகத் தலைவர்களுக்கு உள்ளது. குறிப்பாக சிவில் சமூகத்தின் தலைவர்களாக அங்கு தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் சேவையாளர்கள் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக குரல் கொடுப்பதைப் போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன பணியாற்றுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் என்பதையே நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இதற்கு காரணங்கள் இருக்கின்றன. தமிழ் மக்களின் தலைவர்களாக இன்றிலிருந்து நாற்பது வருடங்களுக்கு முன்னர் இருந்தவர்களில் உடுவில் தொகுதி தர்மலிங்கம் அவர்கள் முக்கியமானவர். அவர் தமிழ்த் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒருவராக இருந்தாலும் “உலக மக்களே ஒன்று படுங்கள்” என்ற சோசலிச கருத்துக்களையும் ஏற்றக் கொண்டவராக இருந்தார். அவரது புதல்வர் சித்தார்த்தன் தமிழ் இளைஞர்களின் தீவிரவாதப் போராட்டத்தின் தன்னை இணைத்துக் கொண்டவர். தமிழ் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த போது ஒரு விடுதலை இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு எத்தனையோ வருடங்கள் ஆயுதப் போராடமும் அது சார்ந்த அரசியலும் இணைந்த அரசியலில் செயற்பட்டார். அந்த நேரத்தில் தர்மலிங்கம் எம்பி யின் மகன் என்ற காரணத்தால் அவர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டார்.
தற்போது பல ஆண்டுகளாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக உள்ள சித்தார்த்தன் அவர்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ள அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் அனுபவித்து வருகின்றார். துன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த மக்களின் பிரச்சனைகள் பற்றி பேசாமல், அண்மையில் தெரிவித்த ஒரு கருத்து தொடர்பாக தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் அவர் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் ஒன்று இடம்பெறுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை அவர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார் அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
தற்போதைய அரசாங்கமானது மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்வதற்கான அறிகுறிகளே பெரும்பாலும் காணப்படுகின்றன. எல்லை நிர்ணயக் குழுவை ஏற்படுத்தி மாகாணசபை தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. என்று தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்.
“மாகாண சபையை பொருத்தவரை அரசியல் பேசும் இடமல்ல, அதிகாரிகளுடன் இணைந்து அபிவிருத்திகளை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடிய சபை. இதனை நன்கு செயற்படக்கூடிய ஆளுமை அரசியல் அறிவு அதிகாரிகளுடன் அன்னியோன்னியமாக நடந்து கொள்ளக் கூடிய ஆற்றல் உள்ள ஒருவர் தேவை” என்றும் வலியுறுத்தியுள்ள அவர், இன்னொரு பக்கத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உயர் அரச நிர்வாக அதிகாரியாக இருந்த ஒரு தகுதியான ஒருவரின் பெயர் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் என்ற வகையில் பிரஸ்த்தாபிக்கப்படுவதை மறுதலிக்கின்றார். மாகாண சபையை நடத்துவதற்கு ஒரு அரசியல்வாதி தேவையில்லை என்றால் அவர் ஏன் மாவை சேனாதிராஜாவின் பெயரை கொண்டு வரவேண்டும். தற்போது வடக்கில் பேசு பொருளாக உள்ள நிர்வாகத் திறமை கொண்ட ஒருவரை தமிழ் மக்களின் பிரதிநிதியாக நிறுத்துவதன் மூலம் அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால் நல்ல ஒரு முதலமைச்சரை எமது மக்களுக்காகப் பெற்றுவிடலாம் அல்லவா? இன்னொரு பக்கத்தில் இத்தனை வருட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ‘மாவை’ அவர்கள் மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற குரலாக சித்தார்த்தன் செயற்படலாம் அல்லவா?
கடந்த தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று விரும்புவது, மறுபக்கத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பார் என்று பத்திரிகைகளுக்கு அறிக்கை எழுதிக் கொடுப்பது, மாகாண சபையின் நிர்வாகத்தில் அரசியல் தேவையில்லை எனற கருத்தை வெளியிடுவது போன்ற விடயங்களை இவர் கவனிக்காமல் வடக்கில் வாழ்க்கையின் அடிமட்டத்தில் உள்ள முன்னாள் போராளிகள், போரினால் பாதிக்க மக்கள் மற்றும் விதவைத் தாய்மார் ஆகியோரின் நலன்களை சித்தார்த்தன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனிக்க வேண்டும் என்ற வேண்டுகொளை இவ்வார கதிரோட்டம் மூலம் நாம் பதிவு செய்ய விரும்புகின்றோம்.