மன்னார் நிருபர்
(23-04-2021)
தலைமன்னார் பியர் பகுதியில் அண்மையில் இடம் பெற்ற புகையிரத விபத்தில் பாதிக்கப்பட மாணவர்களுக்கு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கனடா வாழ் புலம் பெயர் நண்பர்கள் அமைப்பின் நிதி உதவியில் கற்றல் உபகரணங்கள் மற்றும் மருத்துவ தேவைக்கான நிதி உதவிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடா நண்பர்கள் அமைப்பின் மன்னார் இணைப்பாளர் ஜூட் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் தலைமன்னார் பியர் பாடசாலையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் வலயகல்வி பணிப்பாளர் பிறட்லி ,மன்னார் வலய கல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் பா.ஞானராஜ், பொறியியலாளர் ரொபட் பீரிஸ்,பாடசாலை அதிபர் மற்றும் விபத்தில் காயமடைந்த மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த அமைப்பின் ஊடாக விபத்தில் பாதிக்கப்பட மாணவர்களுக்கு அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் , பாதணிகள் பாடசாலை சீருடைகள் உற்பட அவர்களின் மருத்துவ உதவிக்கு என ஒரு தொகை நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான உதவிகள் மேற்படி பாதிக்கப்பட மாணவர்கள் மற்றும் காயமடைந்த ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.