பல்கலைக் கழக மாணவர்களின் மன உறுதியினாலும், உழைப்பாலும் உலகெங்கும் உள்ள உறவுகளின் ஆதரவாலும் உறுதியாய் நிற்கின்றது நாம் இழந்தவர்களின் தூபி”
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பலரது மூர்க்கத்தனமான செயற்பாட்டால் அழித்தொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. என்ற செய்தி எமது யாழ் மண்ணிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. நிர்வாகத்தினருக்கு நெருக்குவாரத்தை கொடுத்தவர்களுள் பல அரசியல்வாதிகளும் இருந்தார்கள் என்பதும் உண்மை.
இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் உணர்வோடு குதித்தனர்.
மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம், கடந்த ஜனவரி 11ஆம் திகதி காலை துணைவேந்தர் அவர்களது தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தாயகத்திலும் வெளிநாடுகளிலிருந்தும் கிடைத்த பலவழிகளிலான ஆதரவோடும் பல்கலைக் கழக மாணவர்களின் உணர்வு கலந்த தீவிர செயற்பாட்டோடும் தொடர்ச்சியாக இடம் பெற்ற நினைவுத் தூபி கட்டுமானப் பணிகள் நிறைவுக்கு வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை தினம் திறந்து வைக்கப்பட்டது.
அதேவேளை இன்றைய தினம் தூபி திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் மாணவர்களோடு திட்டமிட்டு திறப்பு விழாவை நடத்தவிருந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு துணைவேந்தர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , தொடர்ந்து வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றமையால் அவர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது