தந்தை செல்வா நினைவு நாள் சிந்தனை
-நக்கீரன்
கோலாலம்பூர், ஏப்.26:
மலேசியா, பேராக் மாநிலத்தில் பிறந்த தந்தை செல்வநாயகம், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடியலுக்காக தன் வாழ்வைவே ஈகம் செய்தவர். அவருக்கு, ஏப்ரல் 26, நினைவு நாள்.
மலேசியா என்னும் மலையகத்தில் 1898-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிறந்தாலும் தன்னுடைய பூர்வீக நிலமான இலங்கை என்னும் மலையகத்திற்கேத் திரும்பி, அறிவியல் துறைசார் மாணவராக உருமாறி, ஆசிரியர் தொழிலையும் மேற்கொண்ட செல்வநாயகம் ஓர் அமைதியான வாழ்க்கையைத்தான் விரும்பினார்.
உயிருக்குப் போராடிய உடன்பிறந்தோரைக் காணக்கூட விடுமுறை அளிக்காத நிர்வாகத்தை எதிர்த்து ஆசிரியர் தொழிலைத் துறந்தது முதல் தடவை என்றால், அடுத்த தடவை, தமிழியப் பண்பாட்டு உடையணிந்து பணிக்குச் சென்றதால், சிங்கள நிருவாகம் கல்லூரி விரிவுரையாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது.
இப்படியாக, இலங்கையின் இயல்பான இன அடிப்படைவாதமும், பௌத்த மதப் போக்கும் செல்வநாயகத்தை மெல்ல மெல்ல அரசியல் பக்கமாக நகர்த்தின.
உள்ளத்தில் வீறுகொண்ட தந்தை செல்வா, அதன்பின்னர் சட்டம் பயின்று, ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுக்கவும் களமிறங்கவும் முனைந்தார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரு முறையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஆறு தடவையும் என காங்கேசன் துறை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக ஏறக்குறைய ஒரு தலைமுறைக் காலத்திற்கு ஜனநாயக அறவழியில் போராடினார்.
ஆனாலும், ஜனநாயகத்தை மதிக்காக, சிங்கள காடையர்களிடம் தந்தை செல்வா தோற்றுத்தான் போனார். அதன் பின்னர்தான், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் மரபுவழி இராணுவ நடவடிக்கையை எட்டியது.
ஈழத் தமிழ் மக்களால் ‘தந்தை செல்வா’ என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட இவர், தன் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் மனம்வெதும்பி சொன்னது இதுதான்; “இனி, தமிழன்னைதான் ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டும்”.
1977-ஆம் ஆண்டு இந்த நாளில் மறைந்த செல்வா அவர்களின் நினைவுடன், இன்றைய உலக அரசியல், தமிழர்களுக்கு எதிராக உள்ளது என்பதை பொதுவாக வரையறுத்தாலும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக உள்ளது என்பதையும் உள்ளத்தில் அசைபோட வேண்டி உள்ளது.
தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள், ரஷ்யா, பாகிஸ்தான், வளைகுடா நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளுடன் மொழி-கலாச்சார பின்புலம் கொண்ட ஸ்கேண்டினேவிய நாடுகள் கூட இன்றைய காலக்கட்டத்தில் இலங்கைக்கு வலிந்து தாமாகவே நேசக்கரம் நீட்டுகின்றன.
மன்னராட்சி காலத்தில்தான் இன அழிப்பு நடவடிக்கை வகைதொகையின்றி இடம்பெற்றது என்றால், தற்கால ஜனநாயக அரசியல் சூழலிலும் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான இன-மொழி ரீதியிலான ஒடுக்குமுறையை அப்பட்டமாக மேற்கொள்வதைப் பற்றி கொஞ்சமும் அக்கறைப்படாமல், அமெரிக்காவும் சீனாவும் ஏறக்குறைய மண்டியிடும் அளவுக்கு இலங்கையிடம் வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கின்றன.
உலகின் பாரம்பரியம் மிக்க தொன்மைப்புகழ் கொண்ட தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களை உலக அரசுகள் இந்த அளவிற்கு கிள்ளுக் கீரையாகக் கருதுவதற்கு இந்தியாதான் அடிப்படைக் காரணம்.
தமிழர்களுக்கு எதிராக அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் சமூக அளவில் வஞ்சகமாக காய் நகர்த்தும் புதுடில்லியின் போக்கு, காங்கிரஸ் ஆண்டாலும் பாஜக ஆண்டாலும் ஒரே விதமாகத்தான் இருக்கும்.
ஆங்கிலேயர்களின் ஒத்துழைப்புடன் மராத்திய சித்பவன பார்ப்பனரான பாலகங்காதர திலகர் போன்ற பார்ப்பனியக் கூட்டம் வடிவமைத்த ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற கட்டமைப்பு இருக்கும்வரை தமிழர்களுக்கு விடிவு என்பது எந்த வகையிலும் கிட்டப்போவதே இல்லை. இதை தமிழர்கள் முற்றும் உணர்ந்து தெளிவுபெறும் காலம்வரை இன்றைய நிலையே நீடிக்கும்.
ஈழத் தமிழ் மக்களின் விடுதலை முழக்கம் 2009 மே மாதத்தில் இருந்து முள்ளி வாய்க்காலில் விக்கி நிற்கிறது. அதன் பிறகு, ஐநா மன்றம் பல கட்டங்களில் பேசிப் பேசி.., பேசிப் பேசி.., பேசிக் கொண்டே இருக்கிறது.
அந்த சொத்தை அமைப்பு மகளிர் தினம், தந்தையர் தினம் என்பதைப்போல யுனெஸ்கோ மூலம் ‘கருவாட்டு நாள்’, ‘ஊறுகாய் தினம்’ என்றெல்லாம் ‘தின’ங்களை அறிவிக்கத்தான் பொறுத்தமானது.
சிங்கள இனவெறி அரசாங்கத்தால் காணாமல் செய்யப்பட்டோரின் குடும்ப உறவினர் கதறி கண்ணீர் விடுவதும் மனமொடிந்து வாடிக் கிடப்பதும் ஐநா மன்றத்தின் காதுகளுக்கு எட்டவில்லை; கடந்த ஒரு மாமாங்க காலமாக கண்ணிலும் படவில்லை.
2013-14 காலக் கட்டத்தில் சிரியாவில் பேரளவில் மனித அவலம் ஏற்பட்டபோது மட்டும் ஐநா மன்றத்தின் பாதுகாப்புக் குழு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டது. அதைப்போல, பாலஸ்தீனத்திலோ மேற்குக் கரையிலோ அங்குவாழ் மக்கள் பாதிக்கப்பட்டால், ஓடோடி குரல் கொடுக்கத் தெரிகின்ற இந்த ஐநா மன்றத்திற்கு, தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டால் மட்டும் கண்களும் காதுகளும் செயலிழந்து போகின்றன. அதேவேளை, தமிழர்கள் பிரிவினைவாதிகள் என்று இலங்கை பௌத்த பேரினவாத அரசு சொல்லும் பச்சைப் பொய்யை செவிமடுக்க மட்டும் முடிகிறது.
அண்மையில்கூட, ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தமிழர் பக்கம் நின்று ஆதரிப்பதற்குப் பதிலாக, புது டில்லி குள்ளநரித்தனமாக ஒதுங்கிக் கொண்டது. அந்தத் தீர்மானத்தில்கூட, இன அழிப்பு, தமிழர் பாதிப்பு பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.
இலங்கையில் நல்லிணக்க, சமத்துவ, சகவாழ்வுச் சூழலை வேண்டித்தான் அந்தத் தீர்மானம் வரையறுக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றியோ அதற்கான தீர்வு, பரிகாரம் குறித்தோ ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. அதாவது, நடந்தது நடந்து விட்டது; தமிழர்கள் இனிமேல் பார்த்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாக சுட்டுவதாகத்தான் ஐநா-வின் பாதுகாப்பு மன்றம் வரைந்த அந்தத் தீர்மானம் அமைந்திருந்தது. இதைக்கூட ஏற்க இந்திய அரசு தயாராக இல்லை.
சிங்களர்கள் இயல்பாகவே இந்தியாவிற்கு எதிரான மனநிலையைக் கொண்டவர்கள். ராஜீவ் காந்தியை சிங்கள் சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் அடிக்கத் துணிந்ததும் சீனாவை எப்பொழுதும் அண்டிக் கிடப்பதும் அந்த வகையில்தான்.
‘உனக்குப் பக்கத்தில் நான்தான் இருக்கிறேன்; பார்த்து நடந்து கொள்’ என்று இலங்கையை எச்சரிக்கும் திராணி இந்தியாவிடம் இல்லை. மாறாக, அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு, ‘நாங்களும் உனக்கு உதவுகிறோம்; உனக்கு தமிழர்கள்தானே பிரச்சினை; அதை நீ எப்படி வேண்டுமென்றாலும் சமாளித்துக் கொள். நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். தேவைப்பட்டால், அதற்கு மறைமுகமாக நாங்களும் உனக்கு உதவுகிறோம். அதனால், நீ சீனாவிடம் அதிகமாக வைத்துக் கொள்ள வேண்டாம்’ என்று பச்சையாக கேட்டுக் கொண்டு அணி வகுத்து நிற்கின்றன.
அமெரிக்காவின் தேவை, இலங்கைக்கு அருகே சீனாவுக்கு எதிராக கடற்தளம் அமைக்க வேண்டும். இந்தியாவின் எதிர்பார்ப்பு, அமெரிக்காவுடன் சேர்த்து கொண்டு சீனாவுக்கு ஆப்பறைய வேண்டும் என்பது; அத்துடன், தமிழர்களும் அழிய வேண்டும் என்ற உள்ளர்ந்த எண்ணம்.
சீனாவிற்கோ இலங்கைக்கு அருகில் கடற்படைத் தளம் அமைத்துக் கொண்டு, அமெரிக்காவிற்கு சவால் விடுவதுடன், இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்கும் நிலை வந்தால், இலங்கை கடற்படைத் தளத்தில் இருந்து தென்னிந்தியாவைத் தாக்க வேண்டும் என்பது குறிக்கோள்.
இலங்கை, சீனா ஆகிய நாடுகளின் உள்ளக்கிடக்கையை அறியாமல், தமிழர்களை தலையெடுக்க விடாமல் செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் மூர்க்கத்தனமாக செயல்படும் இந்திய அரசின் முட்டாள்தனத்திற்குரிய விளைவை, புதுடில்லி ஒரு கட்டத்தில் எதிர்கொள்ளத்தான் போகிறது.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் போரை நடத்தியவர்களே புதுடில்லி சூத்திரதாரிகள்தான். புதுடில்லியில், தமிழர்களுக்கு எதிரான கொள்கை வகுப்புக் குழுவில் மலையாளிகளுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. மலேசியாவில்கூட, இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் மலேசியர்களாக, மலேசிய மலையாளிகள்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் தேசத் தந்தையும் முதல் பிரதமருமான துங்கு அப்துல் இரகுமான், நாடு விடுதலை அடைந்தபின், இலங்கைக்கு(அப்போது அந்த நாட்டின் பெயர் சிலோன்) அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, அந்த நாட்டில் அடிவைத்த பின் முதல் நிகழ்ச்சி செய்தியாளர்களைச் சந்தித்ததுதான்.
அப்பொழுது துங்கு சொன்னார், “மலாயாவைவிட(அப்போது மலேசியாவின் பெயர் அதுதான்) சிலோன் ஐம்பது ஆண்டுகள் முன்னே சென்று கொண்டிருக்கிறது” என்றார். ஆனால், இன்றைய நிலை, அப்படியே தலைகீழாக உள்ளது.
ஒரு நாட்டின் ஜனநாயக அரசியலுடன் மதவாதமும் இனவெறியும் இரண்டறக் கலந்ததால் அங்கு சமூக அமைதியும் அரசியல் நிலைத்தன்மையும் நிலைக்காது என்பதற்கு, உலக அரங்கில் எத்தனையோ நாடுகள் சான்றாக இன்றளவும் விளங்குகின்றன. இதற்கு பாக்கிஸ்தானையும் இலங்கையையும் முதன்மை சான்றாகக் கொள்ளலாம்.
மலேசியாவிற்கு முன்னமே விடுதலையைப் பெற்ற அந்த நாட்டில், தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து சுமூகமாகவே வாழ விரும்பினர். ஆனால், பொல்லாங்கு மனங்கொண்ட சிங்களத் தலைவர்கள், குறிப்பாக பௌத்த மதவாதிகள் எங்கும் எதிலும் சிங்கள மயமாகவே இருக்க வேண்டும் என்று குரலெழுப்பியதுடன், தமிழர்களுக்கு எதிராக அனைத்து மட்டங்களிலும் செயல்பட்டனர்; செயல்படுகின்றனர்.
தொழில், வர்த்தகம், கல்வி, அரச வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் தமிழர்களுக்கு நெருக்கடியையும் நெருக்குதலையும் கொடுத்தனர். இதனால், தமிழர்கள் தங்களில் உரிமை வாழ்வுக்காக குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் எழுந்தது.
அந்த வகையில், ஈழத் தமிழ் மக்களின் சக வாழ்விற்காகவும் சம உரிமைக்குகாகவும் போராடிப் போராடி, குறிப்பாக சிங்கள அரசியல்வாதி-களைவிட புத்த பிக்குகளுடன் மல்லுக்கு நின்றே களைத்துப் போனார் தந்தை செல்வா.
தமிழர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் மரபு வழிப்பட்ட விடுதலைப் போர் தொடங்குமுன், தந்தை செல்வாதான் ஜனநாயக முறைப்படி, அரசியல் தருமப்படி போராட்டம் நடத்தினார். 1960-ஆம் ஆண்டுகளின்போது ஒரு முறை, சிலோன் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன் தந்தை செல்வா உண்ணாவிரதம் இருந்தபொழுது, புத்த பிக்குகள் நாடாளுமன்ற கட்டத்தின் மேல் தளத்திலிருந்து சிறுநீரைக் கழித்தனர். இப்படிப்பட்ட காடையர்களிடம், ஜனநாயக நடைமுறை எடுபடுமா?
காலம் இப்படியே போகாது. பன்னாட்டு அரசியலின் போக்கு தமிழர் பக்கம், குறிப்பாக, ஈழத் தமிழ் நிலத்தின்பால் திரும்பும் ஒரு கட்டம் வாய்க்காமலாப் போகும். காலம் அதற்கான கட்டளையை வகுக்கும். பொறுத்திருப்போம்!!.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24