தீபச்செல்வன்
பெரும்பாலும் சட்டம் என்பது எளிய மக்களுக்கு மறுக்கப்பட்டு இருட்டனா ஒரு விசயமாகவே இருக்கிறது. ஆனாலும் இந்த உலகில் சட்டத்தின் பெயரில்தான் எல்லாத் தேசங்களிலும் ஆட்சி நடக்கிறது. ஒரு நாட்டில் நடக்கும் எல்லா செயற்பாடுகளையும் சட்டத்தின் பெயரில் நடப்பதாகவே ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாட்டுக்கு நாடு சட்டமும் ஜனநாயகமும் அங்கு நடக்கும் செயல்களும் வேறுபடுகின்றன. அப்படிப் பார்க்கையில் சட்டம் என்பது அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்த அதிகாரத்தை தொடர்வதற்கான பாதையாக வகுத்து வைத்திருக்கின்றனரா என்று வினாவத் தோன்றுகிறது.
சட்டத்தின் செயலை நீதி என்கிறோம். சட்டம் என்பது ஒரு சமூகத்தின் எல்லைகளுக்குள் ஆளுகை செய்வதற்கான ஏற்பாடகவும் வழிமுறையாகவும் கருதப்படுகிறது. ஆனாலும் மனித சமூகத்தின் ஒழுக்கம், நெறிமுறைகள், விழுமியங்கள், நம்பிக்கைகள் என்பவற்றின் அடிப்படையில்தான் சட்டம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக பொதுசன மக்களுக்காக தொண்மை சமூகத்தில் வகுக்கப்பட்ட அறமே சட்டமாகிறது. சமூக அறம், கருணையோடு சொல்லும் விசயங்களை சட்டம் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்கிறது. இங்கே மிரட்டல் என்பது ஆளுபவர்களின் அதிகார யுக்தியாகவும் மாறுகிறது.
உயிர்கள்மீதான கருணைதான் அறத்தின் பிரதான நாடி. நம் சக மனிதர்களை நேசிப்பதையும் உயிரினங்களை நேசிப்பதையும் இப் பிரபஞ்சத்தை நேசிப்பதையும் நாம் அறத்தின் வழி கற்றுக் கொள்கிறோம். இந்த விடயங்கள் உருக்குலைகின்ற போதே சட்டம் ஒரு கடுமையான அணுகுமுறையைச் செய்கிறது. நீதி என்ற வினை தேவைப்படுகின்றது. அது மனித சமூகத்திற்குப் பொதுவாயிருக்க வேண்டும். ஆனால் சட்டம் தோன்றிய காலத்திலேயே அது வகுப்பு வேறுபாடுகளினாலும் ஆதிக்க தன்மைகளினாலும் தோன்றியது எனப்படுகிறது. அறத்தில் இருந்து சட்டம் நழுவுகின்ற தருணங்கள் இவையே. அறத்தில் வலியுறுத்தப்படுகின்ற கருணை சட்டத்தின் செயலினால் கேள்விக்கும் உள்ளாகிறது.
ஈழத் தீவில் அந்நியர்களின் வருகையின் முன்பாக நம்மிடம் இருந்தது பாரம்பரிய அறங்களின் வழியாக இருந்த நியமங்கள்தான். அதன்பாற்பட்ட நீதி. இந்த இலங்கை நாட்டின் ஆட்சி அதிகார முறைகளில் அதிக தாக்கம் செலுத்திய பிரித்தானியர்கள், தமக்கு சாதகமாகவும் இலங்கையின் பூர்வீகக் குடிகளுக்கு எதிராகவுமே சட்டத்தை இயற்றியிருந்தனர். சட்டம் என்பது பொதுவாக சரியானது என்றோ, நீதியானது என்றோ நாம் கருதினால் அன்றைக்கு பிரித்தானியர்கள் இலங்கையில் பிரகடனப்படுத்தியிருந்த சட்டங்களும் அதன் செயல்களாக நடைமுறையில் இருந்த நீதியும் சரியென ஆகிவிடும்.
அப்படியெனில் சட்டம் என்பது எப்போதுமே எளியவர்களுக்கு எதிரானமாக இருக்கிறது. எளியவர்களுக்கு எதிரான ஆயுதமாக பிரயோகிக்கப்படுகிறது. சட்டம் மனித சமூகம் எதிர்பார்க்கின்ற நெறிமுறைகளுக்கும் ஒழுக்க விதிகளுக்கும் அமைவதாக உருவாக்கப்பட்டு, அதன் மெய்யான அர்ததத்தில் பிரயோகிக்கப்பட்டால் நிச்சயமாக மேற்கண்ட நிலை ஏற்படாது. இலங்கைத் தீவில் சட்டம் என்பது மிகத் தெளிவாக சிறுபான்மை இனமான ஈழத் தமிழர்களுக்கு எதிராக கையாளப்படுகின்றது. ஈழத் தமிழ் இனத்தை திருகுவதற்கு பெரும் வெளிகளை இச் சட்டம் வழங்குகிறது என்பதுதான் மிகவும் பெருத்த அதிர்ச்சியை தரும் வகையான நிலவரமாகும்.
யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் அண்மையில் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். மாநகர சபையில் சில பணிகளை முன்னெடுப்பதற்கான காவல்படையை உருவாக்கியபோது, அதன் சீருடை புலிகளின் காவல்துறை சீருடைக்கு ஒப்பானது என கூறப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். அது மாத்திரமின்றி வடக்கு கிழக்கில் அண்மைய நாட்களில் பல இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்வதாக கூறியே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் சிறைகளில் பல நூறு இளைஞர்கள் சிறையிருக்கும் நிலையில் இப்போது புதிய தலைமுறையினரையும் சிறையில் அடைக்கும் வேலைகளை செய்கிறது சிங்கள அரசு.
தமிழர்களை சிறையில் அடைக்காதே என்ற குரலும்கூட ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஒரு கோரிக்கைதான். அந்த கோரிக்கையும் நாற்பது வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. அந்த கோரிக்கையை முன்வைத்த ஈழத் தமிழ் இனத்தை மீண்டும் சிறையில் அடைப்பதையே பதிலாகவும் சட்டமாகவும் நீதியாகவும் செய்கிறது இலங்கை அரசு. இலங்கை சிறைகளில் வாடுகின்ற பல நூறு இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளாக நம் இனம் பெரும் போராட்டம் செய்கின்றது. சிறையில் உள்ள பிள்ளைகளை தேடியே சில தாய்மார்கள் தமது உயிரை துறந்துவிட்டனர். கணவரைத் தேடிப் போராடியே சில மனைவியரும் மாண்டு போய்விட்டனர்.
இப்போது இலங்கை சிறைகளில் மேலும் தமிழர்களை அடைத்து, சிறைச்சாலைகளை பெருப்பிக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் மாத்திரம், கடந்த சுதந்திரதினம் வரையில் கிளிநொச்சியில் 18 இளைஞர்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது 29 வரையான இளைஞர்கள் அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அவர்களில் பெரும்பாலனவர்கள் மிகவும் இளைய வயதினர். தாமுண்டு, தமது குடும்பம் உண்டு என இருப்பவர்களே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காரணம் ஏதும் இல்லாத நிலையில், சட்டத்தின் பெயரால் இவர்களை பயங்கரவாதிகள் என கைது செய்து சிறையில் அடைத்துள்ள அரசு, நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தாமல் விசாரணையும் இல்லாமல், தீர்ப்பும் இல்லாமல் சிறை வைத்திருக்கிறது. இதுவே இலங்கையில் ஈழத் தமிழ் மக்கள்மீதான சட்டமும் நீதியுமாக இருக்கிறது. யாழ் மிருசுவிலில் எட்டு தமிழ் அப்பாவிகளை படுகொலை செய்த குற்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, சுனில் ரத்நாயக்காவுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்படுவதே ஸ்ரீலங்காவின் நீதி எனும் வினையாகும்.
இதே சட்டமும் நீதியுமே இலங்கைத் தீவில் ஒன்றரை இலட்சம் மக்களை இனப்படுகொலை செய்தது. இனவழிப்புக்கான போருக்கு மனிதாபிமானப் போர் என பெயர் சூட்டிய நாட்டில் சட்டத்திற்கும் நீதிக்கும் என்ன பெயரை சூட்டுவது? ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது சட்டத்தின் அடிப்படையாக இருந்த கருணை தொடர்பான அறம் என்ன செய்து கொண்டிருந்தது? ஸ்ரீலங்காவின் நீதி செத்துவிட்டது என்பதைதான் உணர்த்திக் கொண்டிருந்தார்களா? அல்லது சிங்களவர்களின் உயிர்களுக்கு மாத்திரம்தான் ஸ்ரீலங்காவின் நீதியில் மதிப்பு இருக்கிறதா? ஈழத் தமிழ் மக்களின் உயிர்களுக்கு எந்த மதிப்புமே இல்லையா?
நாயை கொலை செய்யக்கூடாது, உடும்பை கொன்று உண்ணக்கூடாது, மான், மரை முதலிய காட்டு விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்றெல்லாம் சட்டம் இடுகிற நாட்டில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டமையை தடுக்க எந்த சட்டமும் இல்லையே? இன்றைக்கும் அதே பௌத்த சிங்களப் பேரினவாத்தின் கருவியாக மாறிவிட்ட ஸ்ரீலங்கா சட்டம், ஈழத் தமிழ் இனத்தின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பத்தியை எழுதுவதையும் நாளை அந்த சட்டம் குற்றம் என்று கூறி, இதன் எழுத்தாளரையும் சிறையில் அடைக்கக்கூடும். ஈழத் தமிழராக இன்னும் இந்த மண்ணில் வாழ்வதையும்கூட குற்றம் என்று ஸ்ரீலங்கா சட்டம் தீர்ப்பிடலாம். ஸ்ரீலங்காவின் பிழைத்துப்போன சட்டமும் அதன் நீதியும் தான் இப்போது யுத்தமின்றி, கத்தியின்றி, ஈழத் தமிழ் இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.