ரொறன்ரோ தமிழ் இருக்கைச் செயற்றிட்டத்தைச் செயற்படுத்துவதற்கான $3,000,000 என்ற முழுத் தொகையை மேற்படி அமைப்பு எட்டிவிட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளதை அறிந்து நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.
மேத் திங்கள் 2018, கனடாவில் முதலாவது தமிழ் இருக்கையை நிறுவுவதற்காக, கனடியத் தமிழர் பேரவையும், தமிழ் இருக்கை அமைப்பும் இணைந்து, ரொறன்ரோ பல்கலைக்கழகத்தோடு ஓர் உடன்படிக்கையை மேற்கொண்டது. கோவிட்-19 என்ற உலகளாவிய பெருந்தொற்றால் துவண்டுவிடாது, தமிழ் சமூகமும், ஆர்வலர்களும் இணைந்து கனடிய மண்ணிலே வரலாற்று அருஞ்செயலை ஆற்றியுள்ளார்கள்.
இந்த வரலாற்றுச் செயற்றிட்டமானது ஈழத்தமிழரின் தலைவராக விளங்கிய தந்தை செல்வா என்று அழைக்கப்படும் சா. ஜே. வே செல்வநாயகம் அவர்களின் 44ஆவது நினைவுநாளில் எட்டப்பட்டுள்ளது என்பதும் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை பெருந்தன்மையுடன் வழங்கிய நிதிக்கொடையால் எட்டப்பட்டுள்ளது என்றும் கனடிய தமிழர் பேரவையின் தலைவரும் இந்த ரொரன்ரோ தமிழ் இருக்கைக் குழுவின் தீவிரமான செயற்பாட்டாளராக விளங்கிய திரு சிவன் இளங்கோ தெரிவித்துள்ளமை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் உணர்வை மேலும் அனுபவிக்க தூண்டும் என்பதே உண்மை.