வடமாகாணத்தில் நோய் பரவலைத் தடுக்கும் வகையில், சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று (27) காலை நடைபெற்றது. கூட்டம் நிறைவுற்ற பின்னர் பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பின்வரும் விடயங்களைத் பகிர்ந்து கொண்டார்.
நேற்றைய அறிக்கையின்படி கோவிட்19 பரம்பல் வடக்கில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்க அதிபர்களூடாக மீளாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே அதனை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளும் அவற்றை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்படியும் அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.
அத்துடன் வவுனியாவில் சௌபாக்கியா மற்றும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் நல்லமுறையிலேயே நடைபெற்று வருகின்றன. வீடமைப்பு திட்டங்கள் மற்றும் மக்களின் காணிப்பிரச்சினைகள், சுகாதாரத்துறை சார்ந்த விடயங்கள் போன்றன கூட்டத்தில் ஆராயப்பட்டது. சுகாதாரத்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடுகள் எமக்கு கிடைத்துள்ளது. மருத்துவ துறைசார்ந்த வெற்றிடங்களும் இங்கு இருக்கிறது. இவற்றை தீர்ப்பதற்காக தொடர்ந்து சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளேன்.
தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களை புனரமைப்பதற்காக 500 மில்லியன் வடமாகணத்துக்கு கிடைத்துள்ளது. அதனூடாக அவற்றை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அவவுனியா மாவட்டத்தின் பேராறு நீர்த்தேக்கத்தில் அதன் விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அத்துடன் செட்டிக்குளம், நெடுங்கேணியிலும் நீர்த்தேக்க திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலதிகமான நீர்தேங்கங்களை அமைப்பதற்கான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அடுத்தவாரமளவில் அந்த நிதி எமக்கு கிடைக்கும். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளை அமைப்பதற்கு 100 மில்லியனை ஒதுக்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது. விசேடமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளை மாகாணசபை நேரடியாகவே முன்னெடுக்கும் என்றார்.