சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லுண்டாய் புதிய குடியிருப்பைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய 05 குடும்பங்களுக்கு குடி நீரை சேமித்து வைப்பதற்கான பிளாஸ்டிக் நீர் கொள்கலங்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லுண்டாய் புதிய குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் குடி நீர் தேவைக்கு வலி தென்மேற்கு பிரதேச சபையினால் தண்ணீர் பவுசர்கள் மூலம் ஒன்று விட்ட ஒரு நாளைக்கு வழங்கி வருகின்ற நீரை சேமித்து வைப்பதற்கு நீர் கொள்கலங்கள் இல்லாது பெண் தலைமத்துவ குடும்பங்கள் மற்றும் சிறுவர்களை உடைய பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
அவர்கள் குடி நீரை சேமித்து வைப்பதற்கான பிளாஸ்டிக் நீர் கொள்கலங்களை தந்துதவுமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் ரூபா 33,000 பெறுமதியில் 500L கொள்ளளவுடைய பிளாஸ்டிக் கொள்கலங்கள் 05 குடும்பங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.