ஆகஸ்டு மாதம் 8ம் தேதி. 2005. காலை 8.30 மணி.
பிரேசில் நாட்டின் ஃபோர்ட்டலிசா நகரத்தில் இருக்கும் மத்திய புலனாய்வு துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. வங்கியில் கொள்ளை நடந்திருப்பதாக ஒரு தகவல். அதிகாரிகளை அத்தகவல் பெரிதாக உலுக்கவில்லை. வங்கி திறப்பதற்கே இன்னும் நேரம் இருக்கும் காலைப்பொழுதில் கொள்ளை என்பது பெரிய செய்தியாக அவர்களுக்கு இருக்கவில்லை. ஆர்வமில்லாமல் அதிகாரிகள் கிளம்பினார்கள். வங்கிக்கு வந்த பிறகுதான் தெரிந்தது, அது வழக்கமான திருட்டாகவோ கொள்ளையாகவோ இல்லை. தொலைபேசி அழைப்பு அதிகாரிகளுக்கு வந்தது திங்கட்கிழமை . ஆனால் அதற்கு முதல் வார இறுதியிலேயே வங்கிக்குள் கொள்ளையர்கள் புகுந்திருக்கின்றனர். எந்தவித அலாரமும் தட்டுப்படாதபடி தெளிவாக செயல்பட்டிருக்கின்றனர். வாரத்தின் இறுதி வேலைநாள் அன்று வங்கியில் கஜானா நிரம்பியிருந்தது. எல்லாம் புத்தம் புது நோட்டுகள். மக்களின் புழக்கத்துக்காக கொடுக்கப்படவென வங்கிங்கு வந்து சேர்ந்திருந்தன. பழைய நோட்டுகளும் தனியாக இருந்தது. பழைய நோட்டுகளின் அளவுக்கு ஈடாக புது நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வந்திருந்தன. இரண்டு நோட்டுகளும் வாரத்தின் இறுதி நாளில் வங்கியில் இருந்தன.
வங்கிக்குள் புகுந்தவர்கள் தெளிவாக இருந்தார்கள். பழைய நோட்டுகளை மட்டுமே கொள்ளையடித்தார்கள். பழைய நோட்டுகள் மாற்றப்பட்டுவிடும் என்பதால் வங்கி அதிகாரிகளும் அவற்றின் வரிசை எண்களை குறித்து வைக்கவில்லை. ஆகவே அந்த பழைய நோட்டுகள் எங்கு புழங்குகின்றன என தேடிக் கண்டுபிடிக்கவும் முடியாது. மொத்தமாக 224 கோடி ரூபாய் அளவுக்கான பணம் கொள்ளை போயிருந்தது. உலகின் பெரிய கொள்ளைகளில் ஒன்றாக அந்த கொள்ளை இருந்தது. வங்கிக்குள் நுழைந்து கஜானாவை கொள்ளையடிக்க 80 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை வெட்டப்பட்டிருந்தது. சுரங்கப்பாதை என்றாலும் அது சாதாரணமான சுரங்கப்பாதை இல்லை. உள்ளேயே மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. மரப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன. கம்பிகளுக்கு ஊடாக சிமெண்ட் கொட்டப்பட்டு கட்டப்பட்டிருந்த கான்க்ரீட்டை துளைத்து இவை எல்லாமும் நடந்திருந்தது. எந்தவித உயிர்ச்சேதமும் இல்லாமல் தெளிவாக திட்டமிடப்பட்டு நிதானமாக வேலை செய்து கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. ஆச்சர்யங்கள் இத்தோடு முடிந்துவிடவில்லை.
வங்கியின் கஜானாவை சென்றடைந்த சுரங்கத்தின் மறுமுனை வங்கியிலிருந்து ஒரு கட்டடம் தள்ளி இருந்தது. சில நாட்களுக்கு முன்புதான் அக்கட்டடம் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. வாடகைக்கு வந்தவர்கள் புதிதாக செயற்கை புல் தொழில் தொடங்கவிருப்பதாக சொல்லி அக்கட்டடத்துக்கு வந்தனர். செயற்கை புல் தயாரிப்பு நிறுவனத்துக்கு என்ற பெயரில் கட்டடத்தை வாடகைக்கு எடுத்திருந்தனர். திங்கட்கிழமை காலைவரை அவர்கள் செயற்கைப்புல் தயாரிக்க வந்ததாக அப்பகுதியை சேர்ந்தோர் அனைவரும் நினைத்திருந்தனர். தொழிலை விளம்பரப்படுத்தவென இலவச தொப்பிகள் விநியோகித்திருக்கின்றனர். விளம்பர நோட்டீஸ்களை கொடுத்திருக்கின்றனர். எவருக்கும் துளி கூட சந்தேகம் ஏற்படவில்லை. தப்பும்போதுகூட வாடகைக்கு எடுத்திருந்த கட்டட அறை முழுமையையும் வெள்ளை பவுடரை கொட்டி சென்றிருந்தனர். வெள்ளை பவுடர் கொட்டினால் ரேகைகளை கண்டுபிடிப்பது கடினம். கொள்ளையர்களை பற்றி மொத்தமாக கிடைத்தது ஒரே ஒரு துப்பு மட்டும்தான். சுரங்கம் தோண்டப்பட்ட கட்டடத்தில் குடிவருவதற்காக கொடுத்த அடையாள அட்டை மட்டும்தான் துப்பு. அந்த அடையாள அட்டையில் இருந்த பெயர் ‘பவுலோ செர்ஜியோ டி சோஸா’. மூன்று மாதங்களுக்கு முன்னரே வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த கட்டடம்.
13 அடி ஆழம். வங்கி கஜானாவை சென்றடைய ஒரு 256 அடி சுரங்கம். சுரங்கம் தோண்டப்படுவது தெரியாமலிருக்க போலியாக ஒரு நிறுவனம். பூமத்திய ரேகைக்கு அருகே இருக்கும் பிரேசில் வெப்பம் நிறைந்த நகரம். இரவு நேரங்களில் சுரங்கம் தோண்டப்பட்ட ஆழத்தில் சராசரியாக நூறு டிகிரி வெப்பம் இருக்கும். அந்த வெப்பத்தை சமாளிக்கவென தோண்டப்பட்ட சுரங்கத்தில் குளிர்சாதன வசதி. சரியான கணிப்புடன், நவீன தொழில் நுட்ப உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது.
கொள்ளையர்கள் நடத்திய போலி நிறுவனம்தான் செயற்கை புல் உற்பத்தி செய்யும் நிறுவனம் அல்லவா? பல முறை அக்கட்டடத்திலிருந்து மண் ட்ரக்குகளில் வெளியேற்றப்பட்டிருக்கிறது. புல் வளர்ப்பதற்கும் அதற்கு பயன்படுத்துவதற்குமான மண்ணாக இருக்கலாம் என சுலபமாக பிறரால் கருதப்பட்டது. மேலும் கட்டடத்தில் வசித்தபோது அண்டை வீட்டார் எவருக்கும் சந்தேகம் வரவில்லை. விசாரணையில் அக்கட்டடத்தில் தொழில் நடத்திய கொள்ளையர் அனைவரும் நல்ல சுபாவம் படைத்தவர்களாகவே அண்டை வீட்டார் கூறினர். இனிமையாக பழகினார்கள் என்றனர். வாரத்தின் இறுதிநாளில் வங்கி விடுமுறை. கஜானாவுக்கு கொள்ளையர்கள் நுழைந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட மூன்றரை டன் எடையுள்ள நோட்டுகளை சுரங்கத்தின் வழியாக வெளியே கொண்டு சென்றிருக்கின்றனர். ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ. மொத்தமாக 28 பேர் கொள்ளையில் பங்கேற்றிருந்தனர். அவசர அவசரமாக காலையில் எழுந்து ஓடிய புலனாய்வு அதிகாரிகளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. கையிலிருந்த துப்புகள் ஒரு பெயரும் ஓர் அடையாள அட்டையும் மட்டும்தான். அவற்றை கொண்டு மட்டும் குற்றவாளிகளை எவ்வளவு சீக்கிரம் நெருங்கிட முடியும் என்கிற கேள்வியும் இருந்தது.
இறுதியில் என்ன நேர்ந்தது கொள்ளையர்களுக்கு?
அக்டோபர் 9, 2005
ரியோ நகரத்தின் மேற்கே 200 மைல்களுக்கு அப்பாலிருந்த சாலையில் ஓர் உடல் கிடந்தது. தோட்டாக்களால் சல்லடையாக்கப்பட்டிருந்தது உடல். இறந்தவரின் பெயர் லூயிஸ் ஃபெர்னாண்டோ ரிபெய்ரோ. இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த வங்கிக் கொள்ளைக்கு தலைமை தாங்கிய நபர். 26 வயதான நபர். ஒரு தோட்டா செலவின்றி நிகழ்த்தப்பட்ட கொள்ளை. பணம் கைக்கு வந்த பிறகு தோட்டாக்களை தேடி அடைந்திருக்கிறது.
துப்பு துலங்கியது
ஆகஸ்ட் மாதத்தில் கொள்ளை நடத்தப்பட்டபிறகு காவல்துறை விசாரணையில் இறங்கியது. வங்கியும் தன் விசாரணையை தொடங்கியது. முதல் முக்கியமான துப்பு ஒன்று கிடைத்தது. வங்கிக்குள் இருந்த கேமிரா, அலாரம் எதுவும் கொள்ளை நடந்தபோது செயல்படவில்லை. வங்கிக்குள்ளிருந்து யாரோ கொள்ளையருக்கு உதவியிருந்தார்கள். கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு அருகே இருந்தவர்கள் எவரும் துளையிடும் சத்தம் எதையும் கேட்டிருக்கவில்லை. நகரத்தின் சத்தத்தில் துளையிடும் சத்தம் கேட்காமல் போயிருக்கலாம். வங்கியில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தபோது, கொள்ளையர்கள் நகரத்திலேயே இல்லை. 11 கார்களில் பணம் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். கொள்ளை நடந்த அடுத்த நாளில் பிரேசிலின் இன்னொரு பகுதியில் ஒருவர் பத்து கார்களை விலைக்கு வாங்கினார். அந்த பத்து கார்களுக்கான பணத்தையும் சுடச்சுட ரொக்கமாக கொடுத்தார். இத்தனைக்கும் கார்கள் விற்கப்பட்ட பகுதி பணக்காரர்கள் வசித்தப் பகுதி கிடையாது. காவலர்களுக்கு மூக்கு வியர்த்தது. கார்களை கொண்டு சென்ற ஒரு ட்ரெய்லர் லாரியை காவல்துறையினர் மடக்கினர்.
ட்ரெயிலரில் இருந்த கார்களில் கத்தை கத்தையாக பழைய நோட்டுகள். நான்கு பேரை காவல்துறை கைது செய்தது. கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் கொள்ளை பணம் மீட்கப்பட்டது. உலகின் பெரும் வங்கிக் கொள்ளைகளில் இடம் பிடித்த கொள்ளையின் முடிச்சுகள் அவிழத் தொடங்கின. ட்ரெய்லர் லாரியில் பிடிபட்டவர்கள் திட்டத்துக்கான காரணகர்த்தாக்கள் இருந்த திசைகளை சுட்டிக்காட்டினர். கொள்ளையர்கள் தாங்கள் சென்ற தடம் அனைத்தையும் அழிக்க வேண்டிய தேவை எழுந்தது. ஒரு வங்கிக் கொள்ளையாக நிற்க வேண்டிய சம்பவம் துப்பாக்கியை தேடும் நிலை ஏற்பட்டது.
கொள்ளையடிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே வங்கிக்கு அருகே இருக்கும் இடத்தில் குடிவந்துவிட்டனர் “எங்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. வந்திருந்தால் முதல் வேலையாக நாங்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்திருப்போம்!” என்கிறார் கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு அருகே இருந்த ஓட்டலின் உரிமையாளர் மார்கோஸ், கொள்ளையர்கள் எல்லாருக்கும் புனைப்பெயர்கள் வழங்கப்பட்டிருந்தன. தலைமையில் இருந்தவனுக்கு பெயர் பிக் பாஸ். அர்மடில்லோ என்பது ஒருவனின் பெயர். ஜெர்மன் எனவும் ஒரு பெயர். எவருக்கும் எவரை பற்றியும் தனித்தகவல் தெரிந்துவிடக்கூடாது என கொள்ளையர்கள் திட்டமிட்டிருந்தனர். கொள்ளையர்களில் தலைமைக்கு அடுத்து முக்கியப் பொறுப்பில் இருந்தவனுக்கு இளைய ஃபெர்னான்டோ என அர்த்தம் தொனிக்கும் ‘யங்’ ஃபெர்னாண்டோ என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
அவன்தான் ரியோ நகரத்துக்கு அப்பாலிருந்த சாலை ஒன்றில் தோட்டாக்களால் துளைக்கப்பட்டு இறந்து கிடந்தான். அவனின் குடும்ப உறுப்பினர்கள் வந்து உடலை அடையாளம் காட்டினர். வங்கிக் கொள்ளை நடந்தவுடனே வேறு நகரத்துக்கு லூயிஸ் ஃபெர்னாண்டோ தப்பிச் சென்றுவிட்டான். அங்கேயே தலைமறைவாக இருந்தவன் தலைப்புச்செய்திகளுக்கு வந்தது அவன் இறந்த பிறகுதான். ஆனால் அதற்கு முன் அவன் கடத்தப்பட்டிருந்தான். லூயிஸ் ஃபெர்னாண்டோவின் குடும்பத்தினர் அவன் அக்டோபர் 7ம் தேதியே கடத்தப்பட்டு விட்டதாக கூறினர். அவனை விடுவிக்க 63 கோடி ரூபாய் பணம் கேட்கப்பட்டிருக்கிறது. குடும்பத்தினர் காவல்துறையின் உதவியை நாடவில்லை. அவர்களே சென்று அப்பணத்தையும் கடத்தியவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கடத்தியவர்கள் லூயிஸ் ஃபெர்னாண்டோவை விடுவிக்கவில்லை. பணத்தை வாங்கி விட்டு, அவர் வந்துவிடுவார் என சொல்லிச் சென்றிருக்கிறார்கள். பிறகு ஃபெர்னாண்டோ சாலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 36 பேர் கொள்ளைக்கு துணை போனதாக கண்டுபிடிக்கப்பட்டது.. அதில் 26 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். மொத்தமாக 133 குற்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொள்ளை நடந்து முடிந்த ஒரு வருடத்திற்குள் ஆறு கடத்தல் சம்பவங்கள் நடத்தப்பட்டன. எல்லா சம்பவங்களும் லூயிஸ் ஃபெர்னாண்டோவின் சம்பவங்கள் போல நடந்திருந்தன. கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களில் பணம் கேட்டு மிரட்டப்பட்டு, பின் அவர்களும் பணத்தை கொடுத்திருக்கின்றனர். கடத்தப்பட்டவர்கள் வீடு திரும்பியிருக்கின்றனர்.
2006ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட இவாந்த்ரோ ஹொஸேவின் உயிரற்ற உடலும் கண்டெடுக்கப்பட்டது. இந்த நாள் வரையை கொள்ளையர்களை தேடும் படலம் நடந்து கொண்டே இருக்கிறது. மொத்தமாக இதுவரை 140 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டிருக்கிறது. பணம் இதுக்கு மேல் கண்டுபிடிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்கிற காலகட்டத்தை நெருங்கிவிட்டோம். இத்தனை ஆண்டுகளில் பணத்தின் பெரும்பகுதி செலவழிக்கப் பட்டிருக்கலாம். வங்கிகள் கருந்துளைகளை போன்றவை. நம்மை விழுங்கவும் கூடியவை. கருந்துளைகளை பற்றி தெரிந்து கொள்ளவில்லை எனில் நமக்குதான் ஆபத்து. இனிமையாக பழகும் அந்த அண்டை வீட்டுக்காரனான பவுலோ செர்ஜியோ இன்னும் காவல்துறையிடம் பிடிபடவில்லை. அவன் இன்னும் எங்கோ இவ்வுலகில் இனிமையான புன்னகையுடன் உலவிக் கொண்டிருக்கிறான்.