(மன்னார் நிருபர்)
(06-05-2021)
மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று வருட காலமாக வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்று மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராக பதவியேற்கவுள்ள மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் ஜே.பிறட்லி மற்றும் மடு வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி யாழ்பாணம் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளராக இடம் மாற்றம் பெறவுள்ள சத்தியபாலன் ஆகியோரின் சேவை நலனை பாராட்டி பிரியாவிடை நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளாவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பதவி உயர்வு பெறவுள்ள ஜே.பிறட்லி மற்றும் இடமாற்றம் பெற்று செல்லவுள்ள .சத்திய பாலன் ஆகிய இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான கௌரவிப்புக்களும் வழங்கப்பட்டது.
குறித்த பிரியாவிடை நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.வசந்த குமார், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், உதவி திட்ட மிடல் பணிப்பாளர் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த வலய கல்வி பணிப்பாளர்களின் சேவை காலத்தில் மன்னார் மாவட்ட ரீதியில் காணப்பட்ட பல்வேறு நிர்வாக சிக்கல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் மாவட்ட ரீதியாக பின் தங்கிய கிராமங்களின் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டது.
அத்துடன் வலய ரீதியில் பூர்த்தி செய்யப்படாத பாட விதான ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு வேறு மாவட்ட ஆசிரியர்களின் இட மாற்றங்களில் திறம்பட்ட விதமாக செயற்பட்டமை குறிப்பிடதக்கது.




























