இன்று மே 6, 2021 ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தினால் தமிழ் இன அழிப்பு கல்வி வாரச் சட்ட மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம், ஒவ்வொரு ஆண்டும், மே 18 ஆம் தேதியுடன் முடிவடையும் ஏழு நாள் காலம் தமிழ் இன அழிப்பு கல்வி வாரமாக அறிவிக்கப்படும். அந்த காலகட்டத்தில், அனைத்து ஒன்ராரியோ மக்களும் தமிழ் கனடியர்களின் வரலாற்றை அறிய வாய்ப்பு கிடைக்கும். இந்த சட்ட மசோதா உயிரிழந்த மக்களிற்கான மரியாதையை வழங்குவது மட்டுமல்லாமல், வாழ்வு முழுவதும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் எம் மக்களுக்கான ஒரு நம்பிக்கையை கொடுத்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கின்றது.
தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிப்பதன் மூலம், மனித இனத்திற்கு எதிரான இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தமிழ் இனப்படுகொலை மற்றும் பிற இனப்படுகொலைகள் குறித்த விழிப்புணர்வைப் பேணுவதோடு, இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான எங்கள் கூட்டு முயற்சியையையும் உறுதிப்படுத்துகின்றது.
இந்த மசோதாவை மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் அறிமுகப்படுத்தியபோது, தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து சமூகமாக மாகாண அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள், மற்றும் கட்சி உறுப்பினர்களை ஆதரவாக ஒன்று திரட்டியிருந்தோம். இந்த ஆதரவை உறுதிப்படுத்தும் முயற்சியில் கனேடியத் தமிழர் தேசிய அவை (NCCT), கனேடியத் தமிழ் இளையோர் (CTYA) மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு (TYO) ஒருங்கிணைந்து இந்த வேலத்திட்டத்தை வழிநடத்தியது. எங்கள் தொடர்ச்சியான கூட்டு முயற்சியில் கனடாத் தமிழ்க் கல்லூரி (CTA), அறிவகம் கனடா (ARIVAHAM CANADA), மிஸ்ஸிசாகா தமிழ் ஒன்றியம் (MTA), பிராம்டன் தமிழ் ஒன்றியம்(BTA), மார்க்கம் தமிழ் ஒன்றியம்(MTO), ஸ்காபரோ தமிழ் ஒன்றியம்(STA), ஆட்டாவா தமிழ் ஒன்றியம் (OTA), மற்றும் க்யூபெக் தமிழ் ஒன்றியம் (QTDA), மேலும் பல தனிநபர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த முயற்சியில் பங்கேற்றனர்.
இனப்படுகொலையாளிகள், இனப்படுகொலையை மறுப்பவர்கள் மற்றும் தனிப்பட்ட லாபம் கருதி நிற்பவர்களிடம் இருந்து தொடர்ச்சியான எதிர்ப்பு இருந்தும், மேலும் சிறீலங்கா அரசின் கடுமையான எதிர்ப்பைக் கடந்தும் இந்த சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா என்பது ஒன்ராறியோ அரசாங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்றும் எமது சமூகத்தினதும் ஒரு கூட்டு முயற்சியாகும். ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் இந்த சட்ட மசோதா நிறைவேறுவதற்கு முழு ஆதரவையும் வழங்கிய ஒன்ராரியோ பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி!
கனடிய தமிழர் தேசிய அவை (NCCT)