தீபச்செல்வன்
முன்னாள் விடுதலைப் புலிப் போராளியான எனது நண்பன் ஒருவன், சிங்கள இராணுவத்தின் வதைமுகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் நாட்டை விட்டு வெளியேறிக் கொள்வது என முடிவெடுத்தான். அவனிடம் அப்போது பெரிதாக எதுவுமில்லை. போர்க்களக் கடற்கரையின் ஓரமாக குண்டுபட்டு செத்துப் போன தன் தாயையும் தங்கையையும் மணலை கிளறி புதைத்துவிட்டான். அவன் தந்தை அப்போது நிலைகுலைந்ததுதான். அதன் பின்னர் அவர் திரும்பி வரவே இல்லை. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, பலரும் ஊர் திரும்பிய போதும் அவர் திரும்பியிருக்கவில்லை. இவன் சிறைவாசம் அனுபவித்து வந்தவுடன் சில மாதங்களாக தன் தந்தையை தேடிக் களைத்துப் போயிருந்தான்.
அவனிடம் இருந்தது ஒரு சிறிய நிலத்துண்டு மாத்திரம் தான். அதில் ஒரு குடிசையைக்கூட கட்டிக்கொள்ள அவன் மனம் ஒப்பவில்லை. பதிவுகள், காணிச் சான்றுகள் ஏதுமற்ற அந்த நிலத் துண்டை தவித்த முயல் அடிக்கும் கதையாய் வாங்கவும் சிலர் வந்துபோனார்கள். ஒரு நாள் பின் மாலைப் பொழுது, கிளிநொச்சி நகரத்தில் துவிச்சக்கர வண்டியில் என்னை விலத்திப் போன அந்த நண்பன், எனை அழைத்து தனது துவிச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு தான் நாளையே நாட்டை விட்டு போகப் போவதாக கூறினான். இந்த நாட்டை விட்டு வெளியேறுவதுதான் அவனுக்கு விடுதலைதரக்கூடியதா என எனக்குள் கேள்வி எழுந்தாலும் அதுவே அவனுக்கு மருந்தாகவும் இருக்கக் கூடும் என்றுதம் நினைத்துக் கொண்டேன்.
நான் ஒரு கணம் அதிர்ந்தேன். எனக்கும் நிலைகுலைவாக இருந்ததது. பள்ளிக்கூடம் வேண்டாம். படிப்புத் தேவையில்லை. பாவடைத் தாவணியின் பின்னே சுற்ற நேரமில்லை என்று விடுதலைப் போராட்டத்தில் இணைந்த என் நண்பனுக்கு இப்போது நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்ற தவிப்பு ஏன் ஏற்பட்டது. அவன் நேசித்த இந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்று ஏன் நினைத்துக் கொண்டான். நம் நகரத்தில் வசிப்பவன் ஒருவனை இழந்துவிடுகிறோம், அல்லது விலகியிருக்கப் போகிறோம் என்பது வருத்தம் தருவதுதான். இந்த மண்ணில் இருந்து ஏதோ ஒரு வித்தத்தில் நாம் மெல்ல மெல்ல துடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதே அச்சத்தை பெருக்குகிறது.
ஈழ நிலம், பல்வேறு துயரங்களின் குறீயீடாக இருக்கிறது. ஈழ நிலம், பல்வேறு குரல்களின் குறியீடாக இருக்கிறது. இந்த நிலத்தில் தம் புத்திரர்களை பறிகொடுத்த தாய்மார்களின் கண்ணீர் ஒரு பெருத்த நதியைப் போல் பாய்ந்து கொண்டிருக்கிறது. தம் புத்திரர்களைத் தேடி அலைகின்ற தாய்மாரின் வறண்ட தொண்டைக் குழிகள் நெருப்பின் பாலைவனமாக தகிக்கிறது. எங்கள் தெருக்களின் ஓரங்களில் கண்களுக்கு தென்படுகின்ற மெலிந்து ஒடிந்துபோன தாய்மார்களிடம் தம் புத்திரர்களை தேடும் நெடுங்கதைகள் இருக்கின்றன. கால்கள் தேய்ந்து, வீதியின் ஓரமாக சரிந்து கிடந்த தாயொருத்தியைக் கண்டபோது இருதயமே ஊதிப்பெருத்தது.
சிலர் சொல்லுகிறார்கள், அந்த மண்ணில் போர் முடிந்துவிட்டது. எல்லாமே தீர்ந்துவிட்டதென. ஆனால் இங்கே துயரத்தின் நெருப்பு இன்னமும் தணியவில்லை. அது ஒரு அடர்ந்த வனத்தை மெல்ல மெல்ல எரியூட்டுவது போல் பரவிக் கொண்டிருக்கிறது. சிங்கள அரசும் சொல்கிறது இப்போது தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என. சில காலத்தில் இப்போது இலங்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் தமிழர்களும் இல்லை என்று சொல்லக்கூடும். வீதிகளை செப்பனிடுவதும் காப்பெற் இட்டு விரைவுச் சாலைகள் ஆக்குவதும், பாலங்களை அமைப்பதும், அழிக்கப்பட்ட கட்டடங்களை சீமெந்தால் பூசி மீள் நிர்மாணிப்பதையும் செய்து விட்டால் எல்லாக் காயங்களும் மறைந்துவிடும் என்று பாசாங்கு செய்கிறது சிங்கள அரசு.
அத்துடன் போரில் எவரும் கொல்லப்படவில்லை என்று சில வேளை சொல்லுகின்றது சிங்கள அரசாங்கம். இப்போது அரசுக்கு எதிராகவும் அன்றைக்கு இனவழிப்புப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் நின்ற முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா, போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை பல வருடங்களுக்குப் பிறகு ஏற்றுக் கொண்டுள்ளார். இதுவொரு முக்கியமான வாக்குமூலம். சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவே இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் போரில் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது பலருடைய உதடுகளில் ஒரு வாசகம் உச்சரிக்கப்படுவதை பார்கிறேன். “பேசாமல் இந்தப் போரிலேயே செத்துப் போயிருக்கலாம்..” ஆனால் இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி தேவை என்பதற்காகவும் ஈழ நிலம் போராடிக் கொண்டிருக்கிறது. அந்த நீதி கிடைத்திருந்தால் மேற்படி வார்த்தைகள் நம் சனங்களிடமிருந்து வந்திருக்காது. ஆனால் இப்போது எங்களுக்கு பிரமாண்ட வீதிகள் வேண்டாம். மேம்பாலங்களும் வேண்டாம். மிகப் பெரிய மாடிக் கட்டிடங்கள் வேண்டாம். எங்கள் காயங்களை ஆற்றுவதற்கு நீதி தேவைப்படுகிறது. நீதிதான் இப்போது மருந்து.
கொல்லப்பட்டவர்கள் பாக்கியசாலிகள் என நம் சனங்கள் சொல்கிறார்கள். இங்கே இன்னொரு கொடுமை துவங்குகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போல அபாக்கியசாலிகள் வேறு யாருமில்லை. போரில் கொல்லப்பட்டவர்களை சில சமங்களில், சில கணங்களில் மறந்தும் இருந்து விடுகிறோம். போரில் கணவனை இழந்த ஒரு பெண் இன்னொரு துணையை தேடிக் கொண்டு தன் குழந்தைக்கான வாழ்க்கையை வேறு விதமாக மாற்றிக் கொள்கிறாள். போரில் தன் பிள்ளையை பலி கொடுத்த தாய், அதற்கு கிரியைகளை செய்துவிட்டு தன் மனசை ஆற்றிக் கிடக்கிறாள்.
ஆனால் பிள்ளையை காணாமல் ஆக்கப்படுவதற்கு கொடுத்த தாய் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்கிறாள். பிள்ளை இருக்கிறானா? இல்லையா என்று தெரியாத பெருந்தவிப்பு அது. தன் வீட்டுப் படலைச் சத்தம் கேட்கும் ஒவ்வொரு கணத்திலும் நம்பி எழுந்து ஏமாந்து துடிப் போகிற அவளுக்கு கிடைத்திருப்பது பெரும்வாதை. இந்த அரசு இனவழிப்புப் போரில், இனப்படுகொலை வாயிலாக ஈழத் தமிழ் இனத்தை பெரும் வாதைக்கு உட்படுத்தியது என்றால், காணாமல் ஆக்கப்படுவதன் வாயிலாக அதனை பன்பமடங்கு வாதைக்குள் தள்ளியிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
அந்த வாதை மெல்ல மெல்ல நம் நிலத்தைக் கொன்றபடியிருக்கிறது. தாய்மார்களை, பிள்ளைகளை, மனைவியரை அது மெல்ல மெல்ல அழித்துக் கொண்டிருக்கிறது. ஆனந்த சுதாகர் என்ற தமிழ் அரசியல் கைதியைத் தேடித் தேடியே அவரது மனைவி தன் உயிரை துறந்துகொண்டாள். தேடலும் துயரமும் அவளை நோய்மையில் தள்ளியது. உயிருடன் இருக்கும் வரையில் பார்க்க முடியாதுபோன அவள் கணவன், அவள் அதற்காய் உயிர் துறந்து கிடந்த தருணத்தில் அந்து பார்ப்பது எவ்வளவு துயரத்தின் கோரம்?
ஆனந்த சுதாரகனுக்கு இரண்டு குழந்தைகள். அவர்கள் எந்தப் பாவமும் அறியாதவர்கள். தம் தாயை நோய்மைக்கு பலி கொடுத்து, நடத் தருவில் அந்தரித்து நின்றபோது ஸ்ரீங்கள அரசை நோக்கி, தம் தந்தையரை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்கள். இறுதிவரையில் அரசு கண்திறக்கவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் எட்டு அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்த குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்காவை இன்றைய இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச, பொதுமன்னிப்பு அளித்து விடுவித்தார். இலங்கையின் நீதி இப்படியாகத்தான் இருக்கிறது. அது தமிழர்களுக்கு ஒரு விதமாகவும் சிங்களவர்களுக்கு இன்னொரு விதமாகவும்தான் இருக்கிறது.
இப்போது சிங்கள அரசாங்கம், இன்றைய தமிழ் இளைஞர்களை கைது செய்கின்ற படலத்தை துவங்கியுள்ளது. வடக்கு கிழக்கில் காரணம் ஏதுமின்றி கைது செய்யப்படுகின்ற இளைஞர்களின் பெற்றோர்களிடம் எழுத்துமூலமாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ‘விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றத்தில் உங்கள் பிள்ளையை கைது செய்கிறோம்’ என்று அறிவிக்கிறார்கள். தினக்கூலி வேலைகளுக்குச் சென்று தம் குழந்தைகளுக்கு பால்மா வாங்கி வருவதுதான் விடுதலைப் புலிகளை மீள உருவாக்குகின்ற நடவடிக்கையா? அண்மையில் கிளிநொச்சியில் ஒரு போராட்டத்தில் பிறந்து சில மாதங்களேயான ஒரு பச்சைக் குழந்தை தன் தந்தையின் விடுதலைக்காக வெயிலில் தவம் கிடக்கிறது.
இல்லாத விடுதலைப் புலிகளுக்காக ஏன் இந்தக் கைதுகள்? தமிழ் மக்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்களின் வாழ்க்கையை குலைப்பதற்காகவே இந்தக் கைதுகள் நடக்கின்றனவா? ஏற்கனவே பல நூறு இளைஞர்கள் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற போராட்டம் நெருப்பாய் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடியே எம் தாய்மார் அலைகின்றனர். இன்னுமின்னும் துயரம் இந்த நிலத்தில் பெருகுகிறது. இந்த நிலையில் எஞ்சியிருப்பவர்களையும் சிறையில் அடைத்து, இந்த நிலத்திதிலிருந்து நம்மை துடைக்கிறது சிங்கள அரசு. இந்த மண்ணில் எந்தக் காரணத்தையாவது சொல்லி, எவரும் சிறையில் அடைக்கப்படலாம். இல்லாமல் ஆக்கப்படலாம். அழிக்கப்படலாம். ஏன் இந்தப் பத்தியை நான் எழுதுவதனாலும் பயங்கரவாதி எனப்படலாம்.
மிகச் சமீபத்தில், என் பாடசாலைக்கு வயல்வெளி வழியே செல்லுகின்ற ஒரு வீதியின் ஊடாக பயணம் செய்து கொண்டிருந்தேன். நாட்டை விட்டு வெளியேறிய என் நண்பன், விதைநெல்லை அள்ளி உழுத நிலத்தில் வீசிக் கொண்டிருந்தான். உக்ரேனை தாண்டிச் சென்றுவிட்ட பிறகு, இந்த மண்ணை விட்டு இனியும் கடந்தால் உயிர் பிரிந்துவிடுமோ என அஞ்சி நாட்டிற்கே திரும்பிவிட்டேன் என்றான். இந்த மண்ணை விட்டு வாழவும் முடியாது, இந்த மண்ணில் நாம் வீழ்ந்துவிடவும் முடியாது என்பதைதான் என் போராளி நண்பனின் முகத்தில் படித்துக் கொண்டேன்.