07-05-2021 கதிரோட்டம்
யார் தந்தை? யார் தனயன்? என்ற கேள்விகள் வாராந்தம் இந்த பக்கத்தைப் படிப்பவர்களுக்கு தோன்றலாம். நேரடியாகவே கதிரோட்டத்திற்குள் செல்வோம் அன்பர்களே!.
ஈழத் தமிழர்கள், தங்கள் தாய்த் தமிழகம் என்று பாசத்தோடு அழைத்து மகிழ்கின்ற தமிழ்நாட்டின் சட்ட சபைக்கான தேர்தல் நடந்து முடிந்து இன்று புதிய முதல்வராக முதற் தடவையாக கலைஞர் அவர்களின் மகன் ‘தளபதி’ ஸ்டாலின் அவர்கள் பதவியேற்கின்றார்.
இதுவரையிலும் இங்கு படித்த சில வசனங்களிலிருந்து யார் அந்த ‘தந்தை’ யார் அவரது ‘தனயன்’ என்பது ஒரளவிற்கு புரிந்திருக்க வேண்டும். இந்த வாரத் தலையகத்திற்கு இந்த தலைப்பு மிகவும் பொறுத்தமானது என்பதே எமது கருத்து.
2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் வலிகள் வடுக்கள், இழப்புக்கள் அழிவுகள் அனைத்தையும் கடந்து, நாட்கள் ஓடிக்கொண்டிருக்கையில் எமது பிரதம ஆசிரியர் தமிழ்நாட்டுக்கு மற்றுமொரு பயணத்தை மேற்கொண்டார். வருடத்திற்கு குறைந்தது இரண்டு தடவைகளாவது அங்கு பயணிப்பது அவருக்கு பத்திரிகைக்கும் அவசியமான ஒன்றாக இருந்ததால் அந்த பயணமும் அவரைச் சென்னைக்கு அழைத்துச் சென்றது.
வழமைபோல ஏற்கெனவே திட்டமிட்ட சந்திப்புக்கள், நேர்காணல்கள், கலந்துரையாடல்கள் என நாட்கள் நகர்ந்து செல்கையில் ‘தமிழக அரசியல்’ என்னும் வாரச் சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினர் ஒருவர் எமது ஆசிரியரை பேட்டி காண விரும்புவதாக சென்னை நண்பர் ஒருவர் தெரிவித்தார். அதற்கான நேரம் தீர்மானிக்கப்பெற்று, இளைஞரான அந்த ஆசிரியர் குழு உறுப்பினர் எமது ஆசிரியரைச் சந்தித்தார்.
இருவரும், முதற் தடவையாக சந்தித்த மரியாதையின் நிமித்தம் உரையாடலை நடத்திய பின்னர் சில கேள்விகளின் பின்னர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக பேட்டி காண வந்த அன்பர் திடீரென ஒரு கேள்வியை முன்வைத்தார்.
அதுவரையும் எமது ஆசிரியரின் கனடிய பத்திரிகைத் துறைப் பயணம், கலை இலக்கிய முயற்சிகள் மற்றும் ஈழத் தமிழர் அரசியல் என்ற பகுதிக்கு கேள்விகளை கேட்ட அவர், 2009 இறுதிப் போர் அல்லது இனப்படுகொலைகள் விடயமாகவும் கேள்விகளை முன்வைத்திருந்தார்.
அப்போது கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்னையில உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இனப்படுகொலைகள் இடம்பெற்றபோது அதில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பான கேள்வியும் அடங்கியிருந்தது. அதற்கு ஆசிரியர் அளித்த பதில்தான் இந்த ‘திடீர்க் கேள்வியை” அந்த சஞ்சிகை சார்பில் பேட்டி காணவந்த அன்பருக்கு கேட்கத் தூண்டியதோ, என்னவோ?
அதுவரையிலும் கலைஞர் கருணாநிதி அவர்கள் பற்றி எதுவுமே இடம்பெறாத வகையில் சென்றுகொண்டிருந்த அந்த பேட்டியின் இடையில் அவர் கேட்கின்றார்.
“கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது ஈழத் தமிழர்களுக்கு அதிகளவில் கோபம் இருக்குமே? என்றார் கொஞ்சம் பதட்டமான மனநிலையோடு. ஆனால் அதற்கு எவ்வித தாமாதமோ அன்றி தயக்கமோ இன்றி, எமது ஆசிரியர் “ஆமாம்! நிச்சயமாக அவர் மீது கோபம் இருக்கின்றது” என்று பதிலளித்தார். அதைக் கேட்டு விட்டு மேலும் வேகம் நிறைந்தவராக அடுத்த கேள்வியைப் போட்டார் எமது ஆசிரியரை நோக்கி.
“ அப்படியானால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள் உங்கள் ஈழத் தமிழ் மக்கள்?
இவ்வாறான கேள்விகள் தன்னிடம் கேட்கப்படும் என்று முன்னரே அறிந்திருக்காத நிலையில் எவ்வித தயாரிப்பும் இன்றி எமது ஆசிரியர் அதற்கு நிதானமாக பதிலளித்தார்.
அதற்குக் காரணம் இருந்தது. அவரும் ஈழத் தமிழர்களில் ஒருவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழர் அரசியலை அவதானித்தும் அதில் பங்கெடுத்தும் வந்தவர் அவர். எவ்வித தயக்கமோ தாமதமோ இன்றி அதற்கு பதிலாளித்தார். அப்போது கருணாநிதி அவர்கள் உயிரோடு இருந்தும், அவரால் இனிமேல் ஈழத்தமிழருக்கு நன்மை எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை என்பதையும் கலைஞருக்கு அடுத்ததாக வரிசையில் இருப்பவர் யார் என்பதையும் மனதில் தீர்மானித்த வண்ணம் தைரியமாகவும் உறுதியாகவும் பதிலளித்தார் எமது ஆசிரியர்.
‘தந்தை செய்த தவறுக்கு தனயனே பிராயச்சித்தம் ஆற்ற வேண்டும்” என்றார் எமது ஆசிரியர். தொடர்ந்து தன்னிடம் கேள்வி கேட்டவரின் முகத்தை ஒரு தடவை கூர்ந்து கவனித்தார். தனது பதில்கள் அவருக்கு நன்கு பிடித்துப் போயின என்று அவரது முகம் பதிலளித்தது.
சில நாட்களின் பின்னர் எமது ஆசிரியர் கனடா திரும்பினார். இருவாரங்கள் கடந்து அந்த பேட்டி முழுமையாக வார இதழில் பிரசுரமாகியிருந்ததோடு மட்டுமல்ல, அட்டைப் படத்திலும் அந்தப் பேட்டியின் தலைப்பாக “ தந்தை செய்த தவறுக்கு தனயன் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்” என தடித்த எழுத்துக்களில் காணப்பட்டது. அந்தப் பேட்டி பின்னர் எமது பத்திரிகையிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டிருந்தது.
இன்றைய கதிரோட்டத்தின் தலைப்பாக தந்தை-தனயன் விளங்கும் அதே நாளில் சென்னையில் கலைஞர் கருணாநிதி அவர்களின் தனயன் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கின்றார் தனது அமைச்சர்கள் சகிதம்.
ஆனால் அன்று சென்னையில் இடம்பெற்ற ஒரு பேட்டியின் போது, அந்த சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினரும் எமது ஆசிரியரும் கலந்துரையாடிய பல விடயங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளன. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் கீழ் நிலைக்குள்ளாகி வாடுகின்றார்கள், வருந்துகின்றார்கள். ஆனால் போரினால் எவ்விதமாக பாதிக்கப்படாதவர்களும் அரசியல்வாதிகளும் பாதிப்படைந்த மக்களுக்கு கை தராமல் அவர்கள் பெயரால் அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள். இது இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் தொடர்கின்றது.
தமிழக சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்று திமுக வெற்றி வாகை சூடிய பின்னர், தமிழ்நாட்டில் திமுக வோடு கூட்டணி அமைத்தவர்கள் தங்கள் எதிர்காலம் என்னவாகப் போகின்றது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைந்தது வெறும் நான்கு உறுப்பினர்களைப் பெறுவதற்காக மட்டும் தானா? என்று யோசித்த வண்ணம் உள்ளார்களாம்.
ஆனாலும் காங்கிரஸ்-திமுக கூட்டணியி;;ன் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவற்றை இலங்கையில் மாவை சேனாதிராஜா, மனோ கணேசன் போன்றவர்கள் மறந்தது போன்று அரசியல் செய்ய நினைத்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை மறந்து போகமாட்டார்கள்.
ஆனால் தமிழ்நாட்டின் புதிய முதல்வரின் அடுத்த நடவடிக்கைகளை உலகெங்கும் வாழும் தமிழர்கள் காண்பதற்கு காத்திருக்கின்றார்கள்.