தமிழ் மொழியின் இலக்கிய வளம் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். அதற்கு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன், அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.
தமிழ் இருக்கை அமைப்பு (Tamil Chair Inc). ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைப்பதை தன் முதல் இலக்காகக் கைகொண்டது இந்த அமைப்பு. அதற்கு, 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆதார நிதியாகப் பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டியது அவசியம்.
தமிழ் இருக்கை அமைப்பின் முதன்மை இயக்குநர்களான மருத்துவர் விஜய் ஜானகிராமன், மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம் ஆகிய இருவரும் தலா அரை மில்லியன் டொலர்களைத் தொடக்க நன்கொடையாக வழங்கி ஹவார்ட் தமிழ் இருக்கை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தனர்.
ஹவார்ட் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, 5 இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் கனடா நாட்டின் புகழ்பெற்ற ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
அதற்குத் தேவைப்படும் 3 மில்லியன் டொலர்கள் நிதியைத் திரட்டித் தற்போது தன்னுடைய இரண்டாம் இலக்கிலும் வெற்றியடைந்துவிட்டது கனடியத் தமிழ்ச் சமூகம். இந்த முயற்சியானது, தமிழ் இருக்கை அமைப்பும், கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து எடுத்த கூட்டுச் செயல்திட்டமாகும்.
இந்த முயற்சிக்கு கனடா, இலங்கை மட்டுமல்லாது, உலகத்தின் பல பாகங்களில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து நன்கொடைகள் வியப்பூட்டும் வகையில் வந்து குவிந்தன.
4000 உலகத் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும், ஊர்ச் சங்கங்களும், முதியோரும் சிறுவர் சிறுமியரும் மாணவ மாணவியர் கூட ஆர்வத்தோடு பங்குபெற்று ரொறன்ரோ தமிழ் இருக்கையின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள்.
தற்போது, தந்தை செல்வா அறக்கட்டளை வழங்கிய 2.5 இலட்ச டாலர்கள், தமிழக அரசு வழங்கிய 1 கோடி ரூபாய், திமுக வழங்கிய 10 இலட்சம் ரூபாய் ஆகியன, ரொறன்ரோ தமிழ் இருக்கை அமைக்கத் தேவைப்படும் ஆதார நிதி இலக்கை எட்ட வேண்டிய இறுதிக்கட்டத்தில் இணைந்துகொள்ள, மூன்று மில்லியன் கனடிய டாலர்களை துரிதமாக திரட்ட உதவின.
தமிழர்களுக்கும் தமிழுக்கும் முக்கியத்துவம் அளித்து ‘தமிழ் மரபுத் திங்கள்’ எனத் தை மாதத்தைக் கனடா அரசாங்கமே கொண்டாடி வருகிறது. அந்நாட்டினுடைய உயரிய பல்கலைக்கழகமான ரொறன்ரோவில் தமிழுக்கு இருக்கை அமையவிருப்பது கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபுரோ வளாகத்தின் தலைவர் விஸ்டம் டெட்டி, இந்த முயற்சியில் தமிழ்ச் சமூகம் ஒன்றாக இணைந்து அர்ப்பணிப்புடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு வென்று காட்டியிருப்பதை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் என்பதையும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் நன்கு கவனித்து பெருமை கொள்ள வேண்டும்.