வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் அச்சுவேலி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான பொதுச்சந்தைக் கட்டடம் நாளை திங்கட்கிழமை (10) காலை 10 மணிக்கு இணைய நேரலையில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
பிரதேச சபையின் சபை நிதியில் 10 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு கடந்த வருடம் குறித்த அடிக்கல் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணக்கையினருடன் நாட்டிவைக்கப்பட்டது.
தற்போது தனியார் கட்டிடம் ஒன்றில் சந்தை நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. எனினும் குறித்த தனியாரின் கட்டிடமும் தற்போதைய சுகாதார நிலைமைகளுக்கு ஏற்பாடு உடையதல்ல என பொது சுகாதார அதிகாரி பணிமனையினால் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பிரதேச சபையினால் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம் அவசர அவசரமாக திறந்துவைக்கப்படுகின்றது. புதிய கட்டிடம் திறந்துவைக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேலும் சமூக இடைவெளியுடன் சந்தையினை நடாத்திச்செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத் திறப்புவிழா குறித்து தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில், வலிகாமம் கிழக்குப் பிரதேசம் 18 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். இந் நிலையில் அச்சுவேலிச் சந்தையே பிரதான சந்தையாகவுள்ளது. எனவே மிகவும் விமர்சையாக பலரும் அழைக்கப்பட்டு திறப்புவிழா மேற்கொள்ளப்படவேண்டும் எனவே விரும்பியிருந்தோம். எனினும் தற்போதைய சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு எவரும் நேரில் அழைக்கப்படாது இணைய வழி திறப்பு விழாவாக சந்தை திறந்துவைக்கப்படுகின்றது. இவ் அசௌகரியங்களை சகலரும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
zசந்தைத்திறப்பு விழா நேரலையில் பிரதேச சபையின் முகப்புத்தகம் மற்றும் ஏனைய இணையவழி முறைமைகளின் ஊடாகவும் அரசியல் தலைமைகள், பிரதேச சபையின் உறுப்பினர்கள், அதிகாரிகள், சிவில் அமைப்புக்கள், சனசமூகநிலையங்கள், சந்தை வியாபாரிகள், பிரதேச மக்கள் என யாவரும் பங்குகொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.