கனடா ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலை வாரம் சட்டம் (BILL104) ஏகமனதாக நிறைவேறியது அறிந்து ஒரு தமிழனாக மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து இவ்வுலகம் ஒரு நம்பிக்கையற்ற சூழலையே நம் தமிழினத்திற்கு தந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் இது ஒரு பெருத்த ஆறுதலை தருகிறது.
கனடாவில் ஒன்ராறியோவில் பாடசாலை கற்கை திட்டத்தில் மே 11-17 வரையான நாட்களை ஈழத்தில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலையை அனைத்து ஒன்ராறியோ மாணவர்களும் கற்பதற்கான கற்கை நெறி திட்டத்தில் கொண்டுவருவதற்கான சட்ட வரைவு (Bill104) ஏற்கனவே இருமுறை ஏகமனதாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும் இரு வாசிப்புகளிலும் ஒன்ராறியோ சட்ட மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது மூன்றாவது வாசிப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் “எங்கள் வீட்டுப் பிள்ளை” என கனடா வாழ் தமிழ் மக்களால் அன்போடு கொண்டாடப்படும் “இனக்காப்பு போராளி” அன்புத் தம்பி விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டு வரப்பட்டு இப்பொழுது சட்டமாக்கப்பட்டுள்ளது.
பெருநம்பிக்கையோடு நின்று உழைத்த அன்புத் தம்பி விஜய் தணிகாசலம் அவர்களுக்கும் ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் அவர்களுக்கும் ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள், கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), கனேடியர் தமிழ் இளையோர் (CTYA), தமிழ் இளையோர் அமைப்பு (TYO) ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த வேலைத்திட்டத்தை செயல்படுத்த மேற்கண்ட இவர்களின் கூட்டு முயற்சியோடு இணைந்து நின்று பணியாற்றிய கனடாத் தமிழ்க்கல்லூரி (CTA), அறிவகம் கனடா (ARIVAKAM CANADA), மிஸ்ஸிசாகா தமிழ் ஒன்றியம் (MTA), பிராம்டன் தமிழ் ஒன்றியம் (BTA), மார்க்கம் தமிழ் ஒன்றியம் (MTO), ஸ்காபரோ தமிழ் ஒன்றியம் (STA) ஆட்டாவா தமிழ் ஒன்றியம் (OTA), கியூபெக் தமிழ் ஒன்றியம் (QTDA), மற்றும் இந்த உன்னதமான முயற்சியில் பங்கு கொண்டு தனது முகத்தைக் கூட வெளிக்காட்டாமல் உழைத்த தனிநபர்கள், தன்னார்வளர்கள் மற்றும் தமிழ் பெருந்தகையீர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் மனம் நெகிழ்ந்த நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகெங்கிலும் கிட்டாத ஒரு வெற்றி தமிழருக்கு அதுவும் கனடிய மண்ணில் ஒரு அங்கீகாரமாக, தமிழின விடுதலைப் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக கிட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இவ்வறிய முயற்சியினை இறுக பற்றிக்கொண்டு இனி அடுத்தடுத்த ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை கையிலெடுக்க வேண்டும். அத்துமீறி சிதைத்தக் கூட்டமே ஒற்றுமையாக நிற்கின்ற பொழுது அறம் சுமந்து போராடிய நாம் சிந்தாமல் சிதறாமல் ஓர்மையுடன், ஓரணியில் நின்று நெருப்பாக போராட வேண்டும். நிரந்தரமான வெற்றி காண வேண்டும்.
ஒன்றாக நிற்போம். அறுந்து போகாத நம்பிக்கையோடு தொடர்ந்து போராடுவோம். வெல்வோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.