இலங்கையில் இபலோகம ஹிரிபிட்டியாகம வித்தியாலயத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு, கொவிட்19 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன அதிர்ச்சியடைந்துள்ள்தாக எமது இலங்கைச் செய்தியாளர் அறிவித்துளளார். இந்த சம்பவம் பற்றி இலங்கையின் இபலோகம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்தது.கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாணவனுடைய தாயும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் யார் மூலம் இந்த நோய்த் தொற்று ஆரம்பித்தது என்பதை கண்டு பிடிக்க முடியாமல் உள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாணவன் பாடசாலை விடுமுறை வழங்கப்படும் வரை பாடசாலைக்கு சென்றுள்ளதால்,இவரது வகுப்பு மாணவர்கள் 19 பேரும், வகுப்பு ஆசிரியையும் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள இபலோகம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த மாணவர் உட்பட இபலோகம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரதேசத்தில் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இதுவரை 36 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில் 12 பேர் சிங்கள- தமிழ் புதுவருட தினத்திற்கு பின்னர் கண்டறியப்பட்டவர்கள் எனவும், இதில் நான்கு பேர் தற்போது வைத்தியசாலைகளில் இடப்பற்றாக் குறை காரணமாக வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.