இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது முதலாவதாக ஒரு கூட்டுத் துக்கத்தை அழுது தீர்ப்பது. அது ஒரு கூட்டு சிகிச்சை. அது ஒரு கூட்டு குணமாக்கல் பொறிமுறை. அதற்கு பண்பாட்டு அம்சங்கள் அதிகம் உண்டு. துக்கத்தை தொடர்ந்தும் தேக்கி வைத்திருந்தால் அது கட்டுப்படுத்த முடியாத ஆவேசமாக பழிவாங்கும் உணர்ச்சியாக மாறும். எனவே அதனை வெளி வழிய விடவேண்டும். நினைவு கூர்தலானது கூட்டுத் துக்கத்தை குணப்படுத்தும் ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையும். இது முதலாவது.
இரண்டாவதாக,நினைவு கூர்தல் கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்ற வேண்டும். கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவ்வாறு நீதி கோரிய போராட்டத்தின் உந்து விசையாக அந்த ஆக்க சக்தி அமையும். எனவே ஈழத்தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தின் உணர்ச்சிகரமான ஆக்க சக்தியாக அக்கூட்டுத் துக்கத்தை மாற்ற வேண்டும். அதற்கு நினைவு கூர்தல் அவசியம்.
மூன்றாவதாக,நினைவு கூர்தல் தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டும். நினைவு கூர்தல் என்ற ஒரு பொதுப்புள்ளியில் பெரும்பாலான ஈழத் தமிழர்களை ஒன்று திரட்டலாம்.அது மட்டுமல்ல உலகத்தில் இருக்கும் தமிழ்ச் சமூகத்தை ஒன்று திரட்டலாம். நவீன தமிழ் வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் அதிக தொகை ஜனங்கள் கொல்லப்பட்டமை என்பது 2009 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில்தான். எனவே பெருந்தமிழ் பரப்பில் ஆகக் கூடிய தொகையினரை ஓர் உணர்ச்சி புள்ளியில் ஒன்றிணைப்பதற்கு நினைவு கூர்தல் அவசியம். அதன் மூலம் நீதிக்கான போராட்டத்தை அனைத்துலக மயப்படுத்தலாம். அனைத்துலக அபிப்பிராயத்தை கனியச் செய்வதற்கு அது அவசியம். இது மூன்றாவது
நாலாவதாக, இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது அல்லது இனப்படுகொலையை நினைவு கூர்வது என்பது அந்த இனப்படுகொலையின் கூட்டுக் காயங்களோடும் கூட்டு மனவடுக்களோடும் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவுவதுந்தான்.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2009க்குப்பின் ஆயுத மோதல்கள் கிடையாது. ஆனால் உளவியல் மோதல்கள் உண்டு. ஆகிரமிப்பு யுத்தமல்லாத வழிகளில் முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதுவிடயத்தில் ஒருபுறம் ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் ஆதரவும் அவசியம். இன்னொருபுறம் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காப்புக் கவசங்கள் உருவாக்கிக் கொள்வதும் அவசியம். அதற்கு தாயகம் – டயஸ்போரா – தமிழகம் ஆகிய மூன்று தரப்பும் இணைத்து ஒரு கூட்டுப் பொறிமுறையை உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் சிகிச்சைகளும் உதவி ஒத்தாசைகள் வழங்கப்பட வேண்டும்.அதற்கு ஒரு ஐக்கியப்பட்ட முயற்சி அவசியம். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் டயஸ்போராதான் தாயகத்திலுள்ள போரால் பாதிக்கப்பட்ட மக்கள் கணிசமான அளவுக்கு மீண்டெழ உதவியிருக்கிறது. தமிழ் டயஸ்போரா இல்லையென்றால் போரின் பாதிப்புகளில் இருந்து தாயகம் குறிப்பிடத்தக்க அளவுக்கு மீண்டு எழுந்திருக்கவே முடியாது. ஆனால் இது விடயத்தில் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் உதவிகள் பொருத்தமான ஒரு பொது கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்கப் படவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். தாயகத்துக்கு உதவும் புலம்பெயர்ந்த தன்னார்வ நிறுவனங்கள் அல்லது நபர்கள் தங்களுக்கு இடையே ஒரு பொதுக் கட்டமைப்பை இன்று வரையிலும் உருவாக்க முயற்சிக்கவில்லை. ஒவ்வொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் தன்னளவில் உதவிகளைச் செய்து அதனால் கிடைக்கக்கூடிய பாராட்டுக்களை எப்படிப் பெறலாம் என்று பெருமளவுக்கு சிந்திப்பதாக தெரிகிறது. ஆனால் இது விடயத்தில் தாயகத்துக்கு வழங்கப்படும் உதவிகள் வெறுமனே தானமோ அல்லது தொண்டோ மட்டும் அல்ல. அவற்றுக்கும் அப்பால் அந்த உதவிகளை தேசநிர்மாணம் என்ற அடிப்படையில் சிந்தித்து செய்யப்பட வேண்டும் இது மிக முக்கியம்.
டயஸ்போராவிலிருந்து தாயகத்துக்கு வழங்கப்படும் எந்த ஒரு உதவியும் தேசத்தை நிர்மாணிப்பது என்ற அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும் வழங்கப்பட வேண்டும். தனிப்பட்ட நபர்கள் தனிப்பட்ட உறவினர்களுக்கோ தெரிந்தவர்களுக்கோ வழங்குவது என்பது வேறு. நிறுவனமயப்பட்ட உதவிகள் வேறு.முதலில் தேசத்தை நிர்மாணிப்பது என்ற அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு வேண்டிய நீண்டகால மற்றும் குறுங்கால திட்டங்கள் வகுக்கப்பட்டு அந்த அடிப்படையில்தான் தாயகத்தை நோக்கி உதவிகள் பாய்ச்சப்பட வேண்டும்.இல்லையென்றால் அந்த உதவிகள் பின்வரும் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.
முதலாவதாக, உதவி வழங்குவோர் தங்களை கொடையாளிகள் ஆகவும் உதவிபெறுவோரை பயனாளிகள் அல்லது கையேந்திகளாகவும் பார்க்கும் ஒரு மனோநிலை வளரும்.
இரண்டாவதாக சரியான புள்ளிவிவரங்கள் இன்றி உதவி வழங்கப்படும் போது ஏற்கனவே உதவி பெற்றவரே திரும்பத்திரும்ப உதவி பெறும் ஒரு நிலைமை தோன்றும். இதனால் சில சமயம் தேவையானவருக்கு உதவி கிடைக்காமலும் போகும்.
மூன்றாவதாக சரியான பொருளாதாரத் திட்டங்களின்றி வழங்கப்படும் உதவிகள் தாயகத்தில் கையேந்தும் சமூகத்தை உருவாக்கி விடும். இவ்வாறு கையேந்தும் சமூகமானது புலம்பெயர்ந்த தமிழ்த்தரப்பிலிருந்து கிடைக்கும் உதவிகளை எப்படிப் பெறலாம் எப்படி ஒருவருக்கு தெரியாமல் மற்றவரிடமிருந்து உதவியைப் பெறலாம் என்று சிந்தித்து உழைப்பின்றி வெளியாருக்காகக் காத்திருக்கும் ஒரு போக்கை வளர்த்துவிடும்.
இந்த மூன்று தீய விளைவுகளையும் கவனத்திலெடுத்து டயஸ்போராவிலிருந்து தாயகத்துக்கு உதவி வழங்கும் அமைப்புக்களும் தனிநபர்களும் தங்களுக்கிடையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும். அப்படி ஒரு பொதுக்கட்டமைப்பு இல்லாத ஒரு வெற்றிடத்தில் சரியான ஒரு பொதுப் புள்ளிவிவரமும் பொருத்தமான ஒரு பொதுவான திட்டமிடலும் இல்லையென்றால் ஒரு நிறுவனம் உதவி வழங்கிய நபருக்கு மற்றொரு நிறுவனமும் உதவி வழங்க நேரிடும். இது கடந்த ஆண்டு covid-19 முதலாவது தொற்று அலையின் போது அவதானிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்தும் நபர்களிடமிருந்தும் கட்சிகளிடமிருந்தும் ஒரே குடும்பம் உதவிகளை பெற்றதன் விளைவாக பல வீடுகளில் கோதுமை மா அளவுக்கு மிஞ்சித் தேங்கி வண்டு பிடித்தது. ஏனைய உணவுப் பொருட்களும் வீணாகத் தேங்கி புழுப் பிடித்தன; வண்டுபிடித்தன என்று பல குடும்பத் தலைவர்கள்,தலைவிகள் கூறக்கேட்டிருக்கிறேன்.
உதவிகளை ஒரு பொதுப் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் ஒரு பொதுத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என்பதற்கு இது மிகப் பிந்திய பெரிய உதாரணம் ஆகும். இந்த அடிப்படையில் தமிழ் புலம் பெயர்ந்த சமூகத்தின் உதவி எனப்படுவது தனிநபர் தன்னார்வ நடவடிக்கையாக மட்டும் சுருங்கக் கூடாது. அல்லது சில நிறுவனங்களின் தன்னார்வ நடவடிக்கையாக,தொண்டு நடவடிக்கையாக மட்டும் சுருங்கக் கூடாது.மாறாக அது ஒரு தேசத்தை கட்டியெழுப்புதல் என்ற பரந்தகன்ற திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவேண்டும்.அது ஒரு தேசியக் கடமை.
அரசாங்கமோ அல்லது அரசாங்கத்தின் ஏனைய உபகரணங்களோ இது விடயத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை போதுமான அளவுக்கு செய்திருக்கவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஒரு உதாரணத்தை இங்கு கூறலாம். கழுத்துக்கு கீழ் அல்லது இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவிகள் அற்ப தொகைதான். மாறாக புலம்பெயர்ந்த தமிழ்த்தரப்புகளால் வழங்கப்படும் உதவிகளே அதிகமானவை. அந்த உதவிகள்தான் மாற்றுத்திறனாளிகளான பாதிக்கப்பட்ட மக்களை இன்றுவரை நிமிர்த்தி வைத்திருக்கின்றன. எனவே இதுவிடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரு பொருத்தமான பொதுக்கட்டமைப்புக்குப் போகவேண்டும். அந்த பொதுக்கட்டமைப்பு தேசத்தை நிர்மாணித்தல் என்ற அடிப்படையில் தகவல்களை திரட்ட வேண்டும், திட்டங்களை வகுக்க வேண்டும், உதவிகளை வழங்கவேண்டும். இது மிகவும் அவசரமானது, அவசியமானது.
அதே சமயம் இந்தஇடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் தரப்புகளில் இருந்து கிடைக்கும் உதவிகள் ஒருபுறம் தாயகத்தில் போரினால் பாதிக்கப் பட்டவர்களை நிமிர்த்துகின்றன. இன்னொருபுறம் அதே உதவிகளை காரணமாகக் காட்டியே அண்மை மாதங்களாக சிலர் கைது செய்யப்பட்டுமிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர் தரப்பில் இருந்து கிடைக்கும் வாழ்வாதார உதவிகள் யாரிடமிருந்து வந்தன என்று கேட்டு கைது செய்யப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டவர்கள் உண்டு. எனவே புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பிலிருந்து தாயகத்துக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் ஒரு முக்கியமான முன்
நிபந்தனையைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. தாயகத்தில் எவையெல்லாம் தடை செய்யப்பட்டிருக்கின்றனவோ அவை அனைத்தையும் கவனத்தில் எடுத்து புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் தங்களுடைய நிறுவனங்களையும் கொடிகளையும் அதற்கு ஏற்றாற்போல அமைத்துக் கொள்ளவேண்டும். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனை அரசாங்கம் உற்றுக்கவனித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தாயகத்தோடு தொடர்புடைய தொண்டு நிறுவனங்களை நடத்துகிறவர்கள் அல்லது தாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கருதுபவர்கள் இதுவிடயத்தில் அரசாங்கத்தின் சட்டத்தடைகளுக்கு அகப்படாத விதத்தில் செயல்பட வேண்டியிருக்கிறது.
இதுவிடயத்தில் அனைத்துலக சட்டங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்புக்களை அவர்கள் உருவாக்க வேண்டும். உதாரணமாக ஒரு தமிழ் வங்கியை உருவாக்கலாம். அந்த வங்கியானது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த வட்டிக்கு அல்லது வட்டி இல்லாமல் முதலீடு செய்வதற்கு உதவிகளை வழங்கலாம். முஸ்லிம் வந்கிகளைப்போல.இரண்டாவதாக ஒரு அனைத்துலக தொண்டு நிறுவனத்தை உருவாக்கி தாயகத்திலுள்ள தொண்டு நிறுவனங்களோடு இணைந்து நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கலாம்.
இவ்வாறாக உலகப்பரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கட்டமைப்புக்களை உருவாக்கி அவற்றின் மூலம் தாயகத்துக்கு உதவும்போது தாயகத்தில் இருப்பவர்கள் நெருக்கடிக்குள்ளாகும் நிலைமைகள் அனேகமாகக் குறையும். நிதி சிந்தப்படுவதும் தடுக்கப்படும்.குறிப்பாக கடைசியாக வந்த ஐநா தீர்மானத்தின் பின் அரசாங்கம் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களையும் நபர்களையும் தடைப்பட்டியலில் சேர்ந்திருக்கிறது. இது தாயகத்துக்கும் புலம்பெயந்த சமூகத்துக்குமான குருதிச் சுற்றோட்டத்தைத் தடுக்கும் நோக்கிலானது. எனவே, தாயகத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவருக்கு வெளியில் இருந்து கிடைக்கும் உதவியும் ஆபத்தாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இறந்தவர்களுக்கும் இறந்தவர்களில் தங்கியிருந்தவர்களுக்கும் நீதி கிடைப்பது என்பது அதன் முழுமையான பொருளில் இதுதான்.நினைவுகூர்தல் என்பது இந்த இடத்தில்தான் முழுமையடைகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அல்லது உயிரிழந்தவர்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்.அதற்கு முன் அவர்களுக்கு பசியாற வேண்டும். காயங்களுக்கு மருந்து கிடைக்க வேண்டும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்ப தேவையான அடிப்படை வசதிகள் கொடுக்கப்படவேண்டும். தேசத்துக்காக சிலுவை சுமந்ததால் அவர்கள் தனித்து விடப்படவில்லை தேசமே அவர்களோடு நிற்கிறது என்பதனை உணர்த்த வேண்டிய பொறுப்பு இனப்படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்த எல்லாருக்கும் உண்டு. இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது இங்கேதான் முழுமையடைகிறது. இறந்தவர்களின் ஆத்மா இந்த இடத்தில்தான் சாந்தியும் அடையும்.