சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்)
இலங்கையில் மஹிந்த ரஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவரை, சர்வதேச சட்டங்களை எழுதவுள்ள ஐ நா குழுவுக்கு தேர்தெடுப்பதைத் தடுத்து நிறுத்த உலகளாவிய வேண்டுகோள் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்ட ஆணையத்திற்கான 34 உறுப்பினர்கள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஐ நா அறிவித்துள்ளது. அவர்கள் எதிர்வரும் 2023 ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஐந்து வருடங்களுக்கு பதவி வகிப்பார்கள். அந்த குழுவிலிருக்கும் 34 உறுப்பினர்களில் எட்டு பேர் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த எட்டு இடங்களுக்கு பத்து பேர் போட்டியிலுள்ளனர்.
இலங்கை தமது சார்பில் அந்த ஆணையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட மொஹான் பீரீஸை நியமித்துள்ளது.
அந்த நியமனத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டாம் என்று உலக நாடுகளை உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டுச் செயல்திட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகியவை கேட்டுக் கொண்டுள்ளன. “சர்வதேச அமைப்புகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைக் குலைப்பதற்கு பெரியளவில் அவர் முயன்றார்“ என்று அந்த நியமனத்தை இவ்விரு அமைப்புகளும் சாடியுள்ளன.
நாட்டின் தலைமை சட்ட அதிகாரியாக அவர் செயற்பட்ட காலத்தில், “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது, கொலை, சித்திரவதை மற்றும் பாலியல் வன்செயல்களைச் செய்தவர்களை சட்டத்தின் முன்னர் நிறுத்த வேண்டிய அவரது பணியில் தோல்வியடைந்தார்“ என்று அந்த அமைப்புகள் கூறுகின்றன.
“ஐ நாவின் சர்வதேச சட்ட ஆணையம் பன்னாட்டுச் சட்டங்களை முறைப்படுத்துகிறது. அண்மையில் அந்த ஆணையம் சட்டவிரோதச் செயல்களைச் செய்பவர்களைப் பாதுகாப்பது, மனித குலத்திற்கு எதிரான குற்றஙக்ளை செய்பவர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்கு எதிராக சில செயற்பாடுகளை அண்மையில் செய்தது, மேலும் அப்படியான செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைக்காக நாடுகடத்துவது தொடர்பிலும் சில முன்னெடுப்புகளைச் செய்திருந்தது. உலகளவில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்று கருதுபவர்களும் சட்டவாளர்களும் இந்த நபருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஐ நா பொதுச் சபையிலுள்ள உறுப்பு நாடுகளை வலியுறுத்த வேண்டும்“ என்று ஐடிஜேபியின் செயல் இயக்குநர் யாஸ்மின் சூக்கா கோரியுள்ளார்.
“பீரிஸின் கண்காணிப்பின்கீழ், பாரதூரமான பன்னாட்டுக் குற்றங்களை இலங்கைப் பாதுகாப்பு படையினர் புரிந்தனர் என்றாலும் யாரும் நீதியின் முன்னர் நிறுத்தப்படவில்லை. ஐ நாவுக்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதே திகைக்க வைக்கும் வகையில் இருந்தது. இலங்கை சட்டத்தை மதிப்பதில்லை, நீதி கிடைக்காமல் அல்லாடும் ஆயிரக்கணக்கானவர்களின் முகத்தில் அறைந்தது போல இருந்தது என்று அவரது அந்த நியமனத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மொஹான் பீரிஸ் குறித்து ஜேடிஎஸ் அமைப்பின் ரோஹித பாஷன அபேவர்த்தனவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“இலங்கையில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டது, காணாமல் ஆக்கப்பட்டது. கொல்லப்பட்டது, கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது அல்லது பணிகளைச் செய்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்டது ஆகியவை நடைபெற்ற போது இவர் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவரது செயற்பாடு மற்றும் அவரது அரசு ஆகியவை செய்த தவற்றை மூடி மறைக்க முயன்ற இவரது நியமனத்திற்கு எதிராக உலகம் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும்“ என்று அவர் கூறியுள்ளார்.
, “அந்தச் செய்தியாளர்கள் இலங்கையில் அரச தரப்பால் முன்னெடுக்கப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து காத்திரமான ஆதாரங்களை வெளியிட்டு பன்னாட்டுச் சட்ட தலையீடு என்று எழுதியவர்கள். உள்நாட்டில் நீதியை மறுத்த அப்படியான ஒரு நபரை சரவதேச சட்டங்கள் குறித்த முடிவுகளை மேற்கொள்ளும் குழுவிற்கு நியமிப்பது ஆட்டுக் குட்டியை ஓநாயிடம் ஒப்படைப்பதற்குச் சமம்“ என்றும்பாஷன அபேவர்த்தன மேலும் தெரிவித்தார்.
ஐ நா பொதுச் சபை மொஹான் பீரிஸுக்கு எதிராக ஏன் வாக்களிக்க வேண்டும் என்று ஐடிஜேபி மற்றும் ஜேடிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே வாசிக்கலாம்.