சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்)
எச்சரிக்கை: இது இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு தமிழர் தரப்புகளுடன் இடம்பெற்ற உரையாடல்களின் அடிப்படையில் எழுதப்படும் ஒரு பகுப்பாய்வு கட்டுரையாகும்.
நீத்தார் நினைவு நாளை அனுசரிப்பது மதங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை கடந்த மறுக்க முடியாத உரிமையாகும். தலைமுறைகளைக் கடந்து அனுசரிக்கப்படும் இந்த நினைவுகள் காலப் போக்கில் வரலாற்றுப் பதிவுகளாக மாறுகின்றன.
இன்றளவும் கிராம தேவதைகள் மற்றும் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருந்துவரும் ஐயனார், கருப்பண்ணசாமி, மாடசாமி, காத்தவராயன் போன்றோரை வழிபடுவதும் அவ்வகையில் சமூக மற்றும் குடும்ப நலன்களுக்காக வாழ்ந்து உயிர்த் தியாகம் செய்தவர்களே என்று ஆய்வுகளும் செவிவழி இலக்கியங்களும் கூறுகின்றன.
தனி நபர் இழப்புகள் அடிப்படையில் ஒரு குடும்பத்தைச் சார்ந்ததாகும். விதண்டாவாதத்திற்கு வேண்டுமானால் இதை மறுக்கலாம். ஆனால் யதார்த்தம் அதுவே. ஒரு பொது நோக்கத்திற்காக சமூகத்தில் சிலர் உயிர்த் தியாகம் செய்தால் அதை ஒரு அரசோ அல்லது தன்னார்வலர்களோ அல்லது உயிர் நீத்தவர்கள் கொண்டிருந்த கொள்கையில் பற்றுள்ளவர்களோ அனுசரிப்பதும் ஏற்புடையதே.
இதற்கு ஒரு உதாரணமாக- தமிழ் நாட்டில் அனுசரிக்கப்படும் `மொழிப் போர் தியாகிகள் நினைவு நாளை` குறிப்பிடலாம்.
ஆனால் இலங்கையில் நடைபெற்ற கொடூரமான உள்நாட்டுப் போரில்,அரச படைகள் முன்னெடுத்த மிக மோசமான தாக்குதல்கள், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி அதை நம்பி வந்த மக்களின் உயிரைக் காப்பாற்றத் தவறியது என்று பல வழிகளில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அது மறுக்க முடியாதது. மீண்டும் சொல்கிறேன் அது மறுக்க முடியாதது.
அதேவேளை போரில் ஈடுபட்டிருந்த மறுதரப்பின் செயல்பாடுகளையும் அதனால் தேவையில்லாமல் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் மறுக்க முடியாது. போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் சில விட்டுக் கொடுப்புகளை செய்திருக்கலாம், போர் உத்திகள் மற்றும் தந்திரோபாயங்களை மாற்றி அமைத்திருக்கலாம், அப்படிச் செய்திருந்தால் தமிழ் மக்கள் கொல்லப்படுவது-இரு தரப்பாலும்-குறைந்திருக்கும் எனும் வாதங்களிலும் சில நியாயங்கள் இருப்பதாக இப்போது பலர் கூறுகின்றனர்.
இரு தரப்பும் இறுதிக்கட்ட போரின் போது விட்டுக் கொடுப்புகளை செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் `சிவந்த மண்ணாக` மாறியிருக்காது. ஆனால் அது காலத்திற்கும் `வலி சுமக்கும் மண்ணாக` இன்று காட்சியளிக்கிறது. அந்த மண்ணைக் காட்டிலும் கூடுதல் வலியையும் வடுக்களையும் சுமந்து நிற்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ளனர்.
இன்று முள்ளிவாய்க்கால் ஒரு நினைவிட பூமி என்பதைக் காட்டிலும் பல் தரப்பினர் தமது ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்ள நகர்வுகளை முன்னெடுக்கும் ஆடுகளமாக மாறியுள்ளது.
ஆம் முள்ளிவாய்க்கால் மண் இன்று பலரது ஆடுகளம்.
சகிப்புத் தன்மை சற்றும் இல்லாத அரசு ஒருபுறமும், “தன்மானம் மற்றும் தாயக விடுதலைக்காக உயிரிழந்தோரை“ வைத்து இலாபம் தேட முற்படும் சிலர் ஒருபுறமும், தமது அடிப்படை நியமங்களிலிருந்து சற்று விலகி நினைவேந்தல் நிகழ்வைக் கையகப்படுத்துகிறார்கள் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மத குருமார்கள் ஒருபுறமும், “பிண அரசியல்“ செய்யும் அரசியல்வாதிகள் ஒருபுறமும் என்று பல்வேறு தரப்புகள் தமது வலிமையை காட்டும் ஒரு இடமாக மாறியுள்ளது அந்த `சிவந்த மண்`.
அனைவருக்கும் தமது செயல்பாடே நியாயமாகத் தோன்றும். அதையொட்டியே அவர்களின் வாதங்களும் அமையும்.
இதிலுள்ள வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பாற்பட்டு கடந்த ஓரிரு நாட்களில் அங்கு நடந்த விஷயங்களை பார்த்தால் இந்த `ஆடுபுலி ஆட்டத்திலுள்ள` நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொள்ள முடியும்.
கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. அங்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தமிழ் தரப்பு முன்னெடுக்க-அவர்கள் எதைச் செய்தாலும் அதைத் தடுக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கில் செயல்படும் பாதுகாப்புப் படைகள்-வழக்கம் போல அதை எதிர்த்ததும் நடைபெற்றது. ஆனால் இம்முறை இரு தரப்பிலும் சற்று உக்கிரம் கூடியிருந்தது.
தமிழர் தரப்பு அங்கு தீபம் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த தூபியை புதுப்பித்து ஏற்பாடுகளைச் செய்வதோடு மட்டுமின்றி சில வாசகங்களை செதுக்கியிருந்த இராட்சத கற்பாறை ஒன்றை அங்கு நிரந்தர நினைவுச் சின்னமாக வைக்கும் நடவடிக்கையில் கத்தோலிக்க மத குருமார்கள் தலைமையிலான குழுவொன்று இறங்கியது.
ஆனால் அந்தக் காணி யாருக்குச் சொந்தம்?
மிக முக்கியமான இந்தக் கேள்விக்கு இதை முன்னெடுத்த தரப்பிலிருந்து பதிலில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எமக்கு உரிமையில்லையா என்கிற கோஷத்தையே முன் வைத்தது.
தனியார் காணியில் அதன் உரிமையாளர் சட்டத்திற்கு உட்பட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அது தவறில்லை அதை யாரும் தடுக்கவும் முடியாது. ஆனால் போரிலும் போர்க்காலத்திலும் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவு கூர்வதற்கு உரிமையிருக்கும் அதேவேளை, அரசுக்குச் சொந்தமான காணியில் விரும்பியபடி நினைவுச் சின்னங்களை அமைக்க முடியுமா என்கிற கேள்விக்கு இது வரை காத்திரமான பதிலில்லை.
அரச தரப்பிலிருந்து உயிரிழந்தவர்களை உங்கள் வீடுகளில் நினைவு கொண்டு அஞ்சலி செலுத்துவதற்குத் தடையில்லை என்று கூறியுள்ளது. அவர்களுக்கு ஆட்கள் கூடுவதைத் தடை செய்வதற்கு இம்முறை ‘கொடிய கொரோனா’ ஒரு உபாயமாக அமைந்து விட்டது. கொரோனோ தொற்று இல்லையென்றால் இராணுவம் வேறு காரணங்களை கண்டுபிடித்திருக்கும். அவர்களுடைய ஒரே நோக்கம்-தமிழர்கள் எதையும் செய்யக் கூடாது, செய்ய முடியாது, செய்வதற்கு அனுமதி அளிக்கப்படாது, மூச்சு விடுவதைக் கூட முன் கூட்டியே அனுமதி பெற்றே செய்ய வேண்டும் என்பதே.
இதேவேளை இந்த வாரத்தின் முற்பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய பூமியான குருந்தூர்மலைப் பகுதியில், பௌத்த பிக்குமார் 29 பேர் வந்து அங்கு புதிய விகாரை ஒன்றை நிறுவுவதற்கான முன்னேற்பாடாக இராணுவத்தின் உதவியுடன் இரவு முழுவதும் ‘பிரித் ஓதியுள்ளனர்’. அந்த நிகழ்வில் அரசு கூறியுள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் ஏதும் பின்பற்றப்பட்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அவர்களுக்கு எவ்விதமான சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பொருந்தாது என்பது போல நடந்து கொண்டனர். கோரோனா பிக்குகளையும், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கும் இராணுவத்தினரையும் தாக்காது என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் கண்ணுக்குத் தெரியாத அந்தக் கிருமி ஆண்டிக்கும் அரசனுக்கும் வித்தியாசம் பார்ப்பதில்லை.
பிக்குமாரும் இராணுவமும் எதைச் செய்தாலும் அது சரி என்கிற ஒரு நிலையே நாட்டில் நிலவுகிறது. மிகவும் ஆபத்தான அந்த நிலைப்பாடு பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் அது நாட்டுக்கு நல்லது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் `கிணற்றைக் கானோம்` என்று கூறுவது போலுள்ளது முள்ளிவாய்க்காலில் `கல்லைக் கானோம்` என்பது. சர்ச்சைக்குரிய வாசகங்களைக் கொண்ட அந்த ராட்சத கல் முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு வந்திறங்கிய போது அங்கிருந்தவர்கள் அதை ஏற்பாடு செய்த பொதுக் கட்டமைப்புக்கு தலைமையேற்பதாகக் கூறப்படும் கத்தோலிக்க குருமார்களும், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் மட்டுமே அங்கிருந்தனர். அந்தக் கல்லை இறக்குவது குறித்த சூடான வாக்குவாதங்கள் புதன்கிழமை இரவு இடம்பெற்ற பிறகு வியாழக்கிழமை காலை வந்து சட்டப்படி அதை எதிர்கொள்ளலாம் என்ற நிலையில் சென்ற ஏற்பாட்டாளர்கள் காலையில் வந்து பார்த்த போது கல்லைக் காணவில்லை.
வழக்கம் போல இராணுவம் `கல்லைக் காணோம்` என்பதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்கிற பல்லவியைப் பாடியது. அப்படியானால் அந்தக் கல் எங்கே? அது தானா உருண்டோடி கடலில் சங்கமித்து விட்டதா அல்லது வெட்டியெடுக்கப்பட்ட மலையில் போய் ஒட்டிக் கொண்டதா? யாமரியோம் பராபரமே!
இலங்கை அரசும் இராணுவமும் கடந்த காலங்களிலிருந்து பாடங்களை கற்று கொண்டதாகத் தெரியவில்லை. போர் முடிந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் `இனி நாட்டில் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு வாய்ப்பே இல்லை` என்று கூறும் அரசு, ஆண்டுக்கு ஒரு நாள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களை நினைவு கூர்ந்து ஒரு பொது இடத்தில் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்த அனுமதிக்கலாமே. அதில் அவர்களுக்கும் என்ன பிரச்சனை இருக்க முடியும். அவர்கள் தாமாக முன்வந்து அஞ்சலியை பிரச்சனையின்றி செய்யுங்கள் அதற்கு வேண்டிய அனுசரணைகள், பாதுகாப்புகளை நாங்கள் தருகிறோம் என்று கூறலாமே! அதைவிட்டு வரிந்துகட்டிக் கொண்டு நிற்பதால் மனக்கசப்பு மேலும் வளருமே தவிர இணக்கப்பாடு ஏற்படாது.
கடந்த பிப்ரவரி மாதம் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பயணத்திற்கு தமிழர் தரப்பு கொடுத்த விளம்பரத்தை தவிர இராணுவத் தரப்பு தமது கடும்போக்கு நிலைப்பாடு காரணமாகக் கொடுத்த எதிர்மறையான விளம்பரமே அதன் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. அதை அரசும் இராணுவமும் கண்டும் காணாமலும் விட்டிருந்தால் மழைக்கு இடையே அந்த நிகழ்வே பிசுபிசுத்துப் போயிருக்கும் என்று கூறும் தமிழர்களும் உள்ளனர்.
அதேபோன்று தமிழர் தரப்புக்கு உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதே முக்கியம், குறிப்பாக கொரோனோ காலத்தில் அதை வீட்டிலேயே குடும்பத்துடன் அமைதியாக கடைப்பிடிக்க முடியும். அல்லது ஆலயங்களுக்குச் சென்று அங்கு வழிபாடு செய்து தமது மனதை சாந்தப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக அரசியல் இலாபத்திற்காகவும் சுயநலனுக்காகவும் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுத்துச் செல்வது குறித்த கேள்விகளும் எழுகின்றன.
நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க பௌத்தர்களின் மிக முக்கியமான `வெசாக் திருவிழாவையே` இம்முறை பொதுவெளியில் கொண்டாடுவதை நிறுத்தியுள்ளது இலங்கை அரசு. அப்படியிருக்கும் போது ஏன் தமிழர்கள் தரப்பும் அதே நிலைப்பாட்டை எடுத்து வீடுகளிலோ அல்லது சிறு குழுவாகச் சென்று ஆலயங்களிலோ அஞ்சலிகளைச் செலுத்தக் கூடாது என்கிற கேள்விகளிலும் நியாயம் இருக்கிறது.
“அந்த பெட்ரொமாக்ஸ் லைட்டே வேண்டும்“ என்று தற்போதைய சூழலில் சிலர் வரிந்து கட்டிக் கொண்டு அடம் பிடிப்பது ஏற்புடையதாக இல்லை.அதேவேளை `விட்டுக் கொடுப்பார் கெட்டுப் போவதில்லை` என்பதை அரச தரப்பு உணர்வதில் தவறேதும் இல்லை.
போர் முடிந்துவிட்டது என்பதை இருதரப்பும் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அந்தத் தெளிவு வந்துவிட்டால் பிரச்சனைகள் தானாக விலகிவிடும்.