ஓன்றாரியோ மாகாணத்தில் “வீட்டிலேயே தங்கியிருங்கள்” என்ற முடக்கத்திற்கான அறிவிப்பை நேற்று வியாழக்கிழமை மாலை இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் அறிவிப்பை விடுத்த ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மிகவும் முக்கியமான கருத்தாக, மாணவர்கள் இந்த முடக்கம் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதால், சிறிது காலத்திற்குஇணையவழி ஊடாக தங்கள் கல்வியைத் தொடரலாம் என்று அறிவித்தார்.
ஓன்றாரியோ மாகாணத்தின் சட்டசபையில் இந்த அறவிப்பை விடுத்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு அமைகின்றன.
“பாடசாலைக் கற்றல் முறைகளுக்கு ஏற்பட்டு தற்காலிக நிலைமை பல பெற்றோருக்கு ஒரு முக்கியமான கவலையாக உள்ளது,” என்று தெரிவித்த முதல்வர் அவர்கள் “ஒருபுறம், சில மருத்துவர்கள் பள்ளிகளைத் திறக்க விரும்புவதாகக் கூறுகிறார்கள். மறுபுறம், எங்களால் இப்போது அதைச் செய்ய முடியாது என்று ஆசிரியர் தொழிற் சங்கங்கள் கூறுகின்றன.
எங்களுக்கு ஒருமித்த கருத்து தேவைப்படும்போது முன்னோக்கி செல்லும் சிறந்த பாதையை ஏற்றுக்கொள்ளும் வகையில் பொது சுகாதார மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதையே நாங்கள் தற்போது செய்கின்றோம்.
அவர் மேலும் கூறுகையில், “தற்போதைக்கு, நாம் இணையவழி ஊடான கற்றலைத் தொடர வேண்டும். முடிந்தவரை அதிகமான ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தடுப்பூசி போட இந்த நேரத்தை நாங்கள் பயன்படுத்துவோம். துற்போதைய திட்டத்தின் படி இப்போது 12 முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் மே 31 முதல் முதலாவது தடுப்பூசியை பெறுவதற்கு உரித்தவர்கள் ஆகின்றார்கள்.
இந்த நிலையில் , ஒன்ராறியோவின் தொடக்க ஆசிரியர்களின் தொழிற்சங்கம் மற்றும் ஒன்ராறியோ ஆங்கில கத்தோலிக்க ஆசிரியர்கள் சங்கம் ஆகிய இரண்டு தொழிற்சங்களும் ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் தங்களுக்கு எந்தவிதமான மாற்றங்கள்; பற்றி அரசாங்கம் அறிவிக்கவில்லை என்றும், அத்துடன் இன்றுவரை மாகாண முதல்வரோ அன்றி மாகாண கல்வி அமைச்சரோ தங்களுடன் இணைந்து திட்டங்களை வகுக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
“இந்த தொற்றுநோய்களின் பாதிப்பு நிறைந்த காலப்பகுதியில் போது எங்கள் பாடசாலைகள் எவ்வாறு பாதுகாப்பாகவும் திறமையாகவும் செயல்பட முடியும் என்பது தொடர்பாக இந்த அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த எங்கள் சங்கம் இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக முயற்சித்து வந்திருக்கின்றது. எவ்வாறாயினும், ஒவ்வொரு கட்டத்திலும் எமது சங்கங்களும் நாங்கள் மறுக்கப்பட்டுள்ளோம், ”என்று கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் தலைவர் லிஸ் ஸ்டூவர்ட் கூறினார் ஊடகவியலாளர்களிடம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் ஸ்ரீபன் லெட்சே தற்போது ஒன்றாரியோ மாகணணத்தின் பாடசாலைக் கற்றல் முறைகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தற்போதை முடக்க காலத்தில் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளிலும் சுத்தமான காற்றை மாணவர்களுக்கு வழங்குதல் மற்றும் நோய்த் தொற்று தொடர்பான பாதிப்புகளிலிருந்து மாணவர்களை மீட்டெடுக்கும் வழிகள் தொடர்பான பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மாணவர்கள் மீளவும் வகுப்பறைக் கல்விக்கு திரும்பும் போது பெற்றோர்களோ அல்லது ஆசிரியர்களோ அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.