ஒன்ராறியோவின் ஆளுநர், மாண்புமிகு எலிசபெத் டவுட்ஸ்வெல் அவர்கள் கையெழுத்திட்டு இதற்கான அரச ஒப்புதலை வழங்கி ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு அறிவியியல் கிழமையை அதிகாரபூர்வமாக்கினார்.
எனவே, சட்டமூலம் 104 இன்று முதல் தமிழின அழிப்பு அறிவியல் கிழமை என்ற அரச ஒப்புதல் பெற்ற ஒரு நினைவேந்தல் மற்றும் விழிப்புணர்வு வாரமாக மாறியுள்ளது.
இது தமிழின அழிப்பினை நினைவுகூர்வதற்கான ஒரு குறியீட்டு வாரமாகும். இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தமிழின அழிப்பு தொடர்பான அறிவூட்டும் வாரமாக விளங்கும். மேற்படி வாரத்தில் ஒன்ராறியோ மக்கள் அனைவரும் தமிழின அழிப்புப் பற்றியும், உலகில் நடைபெற்ற ஏனைய இன அழிப்புகள் பற்றிய வரலாற்றினை அறிந்துகொள்ளவும், இன அழிப்புகள் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும் ஊக்குவிக்கப்படுவர்.
தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்துவரும் பாதிப்புகளையும் உளவியல் தாக்கங்களையும் புரிந்துகொண்டு, தமிழின அழிப்பு நடைபெற்றுள்ளதை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களுக்கும், எனது சக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
விஜய் தணிகாசலம், சட்டமன்ற உறுப்பினர்,
ஸ்காபரோ – றூஜ் பார்க.