முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறித்து கனடாவின் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தனது கண்டனத்தை பகிர்ந்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி நேற்று முன்தினம் அதிகாலை சேதமாக்கப்பட்டதுடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் காணாமல் போயுள்ளது.
இந்த அநீதியான செயலுக்கு எதிராக பல்வேறு தரப்பினர்களும் தமது கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தனது கண்டனத்தை சமூக ஊடகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் என்னும் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர் பின்வருமாறு தெரிவிக்கின்றார்.
“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்த தமிழ் தேசத்திற்கும் எமது மக்களுக்கும் மே மாதம் துக்கத்தை அனுஸ்டிப்பதோடு மறைந்தவர்களுக்காக பிரார்த்திக்கும் நேரமாகும்.
இந்நிலையில், இலங்கை ஆயுதப் படைகளை அங்கு அனுப்பி எம் மக்கள் இழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான உரிமையை தடுப்பதும் அங்கு நாட்டப்பெற்ற நினைவுதூபியை தகர்க்கும் செயற்பாடும் கண்டிக்கத்தக்கவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.