கவிஞர் தீபச்செல்வன்
கொரோனாவின் மறு அலைகள் இந்த உலகின் இயல்பையே குலைத்துப் போட்டிருக்கிறது. மனிதர்களின் பலி 3.34 மில்லியனைத் தாண்டி வேகமெடுக்கிறது. இந்தியாவில் தினமும் ஐந்தாயிரம் மரணங்கள் விழுகின்றன. இலங்கையிலும் இன்னும் சில நாட்களில் ஆயிரத்தை தொடும் மரணப் பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இலங்கை இப்போது முழுதாக முடங்கியிருக்கிறது. இந்த உலகமும் முடங்கித் துடிக்கிறது. இன்று இருப்பவர்கள் நாளை இல்லாமல் போகின்ற ஒரு நிச்சயமற்ற கொடுங்காலம் இதுவென நீள்கின்றது. இக் கொடுங்காலத்தில் போரில் அழிக்கப்பட்டவர்களின் நினைவுக் கல்லை காணாமல் ஆக்கியிருக்கிறது ஸ்ரீலங்கா அரசின் இனவழிப்பு இராணுவம்.
கொரோனாவை விடவும் கொடிய இராணுவம், ஸ்ரீலங்கா இராணுவம் என்பதை கடந்த வருடத்தின் இதே போல் ஒரு காலப் பகுதியில் எழுதியிருக்கிறேன். அதைத்தான் இப்போது ஸ்ரீலங்கா அரசும் அதன் படைகளும் நிரூபித்திருக்கின்றன. அதுவும் ஒரு மோ மாத காலத்தில்தான். மே மாதங்கள் என்பன கடந்த பல ஆண்டுகளாக துயரத்தை தரும் ஆண்டுகளாகவே இருக்கின்றது. 2009 மே மாத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. அதற்குப் பிந்தைய வருடங்கள் இலங்கையில் ஏதோ ஒரு வகையில் துயரமும் நெருக்கடிகளும் நீள்கின்றன. இலங்கை அரசும் அதன் படைகளும் ஒன்றரை லட்சம் மக்களை இல்லாமல் ஆக்கிய இனவழிப்புச் செயல்மீது எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் காலம் கடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில், ஒரு இனத்தின் உரிமைக்காக போராடிய ஈழத் தமிழ் இனம், இத் தேசத்தின் இயற்கைக்காகவும் உயிர்வளச் சமநிலைக்காகவும் போராடி, அதற்கு ஏற்ப நடைமுறை வாழ்வை வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இந்தக் கொடுங்காலத்திலும் ஈழத் தமிழர்கள் சந்தித்த இனவழிப்பிற்கான நினைவேந்தலை அமைதியான முறையில் முன்னெடுக்க உரித்துக் கொண்டவர்கள். எமது போராட்டத்தைப் போல இயற்கையையும் மண்ணையும் மனித உயிர்களை மாத்திரமின்றி இந்தச் சூழலின் அத்தனை உயிரிகளையும் வேறு எந்தப் போராட்டமும் நேசிக்கவில்லை. காடும் கடலும் நிலமும் புலிகளின் நிலத்தில்தான் பாதுகாக்கப்பட்டது என்று கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா அரச தலைவர்களே ஒப்புக்கொண்டனர்.
எனவே கொரோனா காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது எங்களுக்கு பல புரிதல்களை ஏற்படுத்த வேண்டிய ஒரு காலமாகும். ஒரு புறத்தில் நாம் இனவழிப்பின் நீதிக்காக போராடுகிறோம். அத்துடன் நினைவேந்தும் உரிமைக்காகவும் போராடுகிறோம். நினைவேந்தல் என்பது ஒரு பண்பாட்டு உரிமை. ஒரு இனத்தின், ஒரு சமூகத்தின் அந்த உரிமையை மறுக்க எவருக்கும் உரித்தில்லை. ஒரு இனத்தை பகுதியளவில் அழிப்பது இனவழிப்பு என்பதைப்போலவே, அந்த இனவழிப்பை நினைவேந்தல் செய்வதை தடுப்பதும் இனவழிப்பின் அல்லது இன ஒடுக்குமுறையின் பாற்பட்டதாகும். இலங்கையில் கொடூரமான இனவழிப்பு தொடர்கின்றது என்பதற்கு முள்ளிவாய்க்காலில் இப்போது நடந்ததும் ஒரு சாட்சியம்.
முள்ளிவாய்கால் மண்ணில் கால் வைக்கின்ற போது நெஞ்சம் கனத்துவிடும். எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறியவர்களின் உயிர் மூச்சு விதைக்கப்பட்ட நிலம் அது. லட்சம் சனங்கள் தங்கள் வாழ்வின் கனவை மண்ணோடு மண்ணாக்கிய சிதைமேடு அது. அங்கே இதுவரை நாட்களும் இனவழிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு தீபம் ஏற்ற ஒரு தூபி காணப்பட்டது. அத்துடன் இம்முறை இனவழிப்பு நினைவேந்தல் பிரகடனம் ஒன்றை கற்களில் பொறித்து நிறுவும் முயற்சியை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு முன்னெடுத்திருந்தது. அதனை இந்த வந்த வாரம் நிறுவுகின்ற முயற்சி நடந்த போது இராணுவத்தின் வந்து அங்கே கலகம் விளைவித்தனர்.
நினைவேந்தல் பிரகடனம் பொறிக்கப்பட்ட 2ஆயிரம் தொன் நிறையுடைய கல்லை இரவோடு இரவாக காணாமல் ஆக்கியுள்ளனர். இலங்கைத் தீவில் மனிதர்கள் பல இலட்சம் பேரை, அடையாளம் இல்லாமல் காணாமல் ஆக்கக்கூடியவர்கள் இருக்கையில் இந்தக் கல்லை யார் காணாமல் ஆக்கினர் அல்லது திருடினர் என்பது உலகில் உள்ள எவருக்கும் புரியும். அத்துடன் அங்கே கடந்த பல வருடங்களாக காணப்பட்ட நினைவுத் தூபியையும் இடித்தழித்துள்ளனர். அதனை யார் செய்தனர் என்பதற்கும் அங்கே ஆழ ஊன்றியிருந்த சப்பாத்துக்கால்கள் உணர்த்துகின்றன. கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுத் தூபியையும் கொன்றுள்ளனர். இது தான் சிங்கள அரசின் இன நல்லிணக்க வெளிப்பாடு.
அண்மையில் கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநிலத்தின் சட்டமன்றத்தில் தமிழ் இனப்படுகொலையை நினைவேந்தும் வாரத்தை அனுஷ்டிப்பதற்கான அனுமதி சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அம் மாநில தமிழ் சட்மன்ற உறுப்பினர்கள் இருவர் முன் வைத்த தீர்மானத்திற்கு 124 உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர். அத்துடன் தமிழ் மக்களுக்கு நடந்த இனவழிப்பு தொடர்பாகவும் தற்போது தொடர்கின்ற இனஒடுக்குமுறைகள் பற்றியும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் ஆண்டுதோறும் அங்கே நினைவேந்தலை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கொதித்துப் போயிருந்த நிலையில் தான் முள்ளிவாய்க்காலில் மீண்டும் இனவழிப்பின் கொடூரத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், நினைவுத் தூபி அழிக்கப்பட்ட போது அதன் எதிர்வினை, தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் கடுமையான எதிர்ப்பலையாக புரட்சியாக உருவெடுத்தது. உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த மக்கள் பிரதிநிதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். இறுதியில் ஸ்ரீலங்கா அரசு அதில் தமக்கு தொடர்பில்லை என கூற வேண்டிய நிலைக்கு ஆளாகியதுடன் வலுவான புதிய நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது முள்ளிவாய்காலில் நடந்த சம்பவத்தையும் நாம் அப்படியே எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுத் தலைவர்களின் கனவத்திற்கும் உலகின் கவனத்திற்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும். அதன் வழியாக நினைவேந்தல் உரிமையை ஈழத் தமிழினத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவுத் தூபியும் சிங்கள தேசத்திற்கும் அதன் அரசுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தவில்லை. கண்ணீர் விடவும் கதறி அழவும் ஆறுதல் கொண்டு வாழ்வை மீளக் கட்டி எழுப்பவுமான ஒரு காலமும் இடமும் குறியீடுமே. அதனை அழிப்பதன் வாயிலாக தமிழ் மக்களி கவலையையும் கோவத்தையும் இன்னுமின்னும் பெருக்க ஸ்ரீலங்கா அரசு முனைகின்றது. ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக் காயத்தை பெருப்பிக்க முயல்கின்றது. இனவழிப்பில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபியையே, அதுவும் கொரோனாப் பேரிடர் காலத்திலேயே, இவ்வாறு கொடூரமாக அழிப்பவர்களுடன் எவ்வாறு தமிழ் மக்கள் இணைந்து வாழ்வது என்ற கசப்பான உண்மையும் இங்கே புலப்படுத்தப்பட்டிருக்கிறது.