சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த முல்லைத்தீவு இன்று-திங்கட்கிழமை அனுமதியளித்தது.
இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து தமிழ் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அன்றன் புண்ணியநாதன், நடராஜா காண்டீபன், சுகாஸ் கனகரட்னம் மற்றும் சின்னராசா தனஞ்செயன் தெரிவித்த கருத்துக்களை இங்கு கேட்கலாம்.
இலங்கையில் போர்க் காலத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் விதமாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்த பொலிசார் தீவிரமாக முயல்கின்றனர்.
முள்ளிவாய்க்காலில் 18ஆம் திகதி நினைவேந்தலை நடத்துவதற்குத் தடையில்லை என்று முல்லைத் தீவு நீதிமன்றம் திங்கட்கிழமை அறிவித்தது. அதேவேளை பயங்கரவாதத்தைத் தூண்டாத வகையில் சுகாதார நடைமுறைகளை பேணி நினைவேந்தல் நிகழ்வைச் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து அங்கு ஏற்பாட்டாளர்கள் சென்ற போது, நீதிமன்ற உத்தரவு தமக்குக் கிடைக்கவில்லை என்று கூறிய பொலிசார் அவர்களை அங்கு அனுமதிக்கவில்லை.
ஆனால் மாலையில் திடீரென்று முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பொலிசார் அறிவித்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியில் செயற்படும் ஆடைத் தொழிற்சாலையில் 261 பேருக்கு கோவி-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அந்த மூன்று பகுதிகளிலும் திங்கட்கிழமை இரவு 11 மணி தொடக்கம் முழு முடக்கம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தொழிற்சாலையில் இவ்வளவு பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது பல சந்தேகங்களை எழுப்புகிறது என்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.