(மன்னார் நிருபர்)
(17-05-2021)
மன்னார் ஹற்றன் நஸனல் வங்கியில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானம் வரையுமான வீதி ஒடுக்கம் குறைந்த அளவில் காணப்படுவதினால் குறித்த வீதியை அகலப்படுத்துவது தொடர்பாக உரிய தரப்பினரையும், பாதிக்கப்பட்ட மக்களையும் அழைத்து விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் திங்கட்கிழமை(17) காலை இடம் பெற்றதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஐ வேலைத்திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில், மன்னார் ஹற்றன் நஸனல் வங்கியில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானம் வரையுமான பகுதி ஒடுக்கம் குறைந்த அளவில் காணப்படுவதினால் குறித்த வீதியை அகலப்படுத்தி பாதுகாப்பான முறையில் மக்கள் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் திங்கட்கிழமை (17) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தோம்.
குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் , நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், உரிய திணைக்கள தலைவர்கள், வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், மற்றும் குறித்த வீதியை அகலப்படுத்தும் போது பாதீக்கப்படும் மக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து குறித்த கூட்டம் இடம் பெற்றது.
இதன் போது குறித்த பகுதியில் உள்ள சில மக்களின் வீட்டு மதில் உடைத்து மீண்டும் கட்ட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
-குறித்த மக்களுடன் கலந்துரையாடி ஒரு மாதத்தினுள் குறித்த பகுதியில் மதில்கள் உடைக்கப்பட்டு வீதி அகலப்படுத்தப்பட்டு மதில்கள் மீண்டும் கட்டப்பட்டு வீதியின் அளவுத்திட்டங்களுக்கு அமைவாக ஏற்பாடுகளை மேற்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரிய திணைக்கள தலைவர்களையும் இணைத்து குழு ஒன்று அமைக்கப்பட்டது.
-குறித்த குழு சரியான வழி முறைகளை மேற்கொண்டு எங்களிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் மீண்டும் ‘ஐ’ வேளைத்திட்டத்தினருடன் இதற்கான படத்தை மீண்டும் வரைந்து குறித்த வேளைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டது.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ‘ஐ’ வேலைத்திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்பட்டு காபட் வீதியாக மாற்றப்பட்டு வேளைத்திட்டம் இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த வீதி அமைக்கும் பணிகள் நிபந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என மக்களும் அதிகாரிகளுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த வீதியில் கழிவு நீர் வடிகான் மற்றும் நடை பாதை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டதோடு,உடைக்கப்படும் வீட்டு மதில்கள் மீண்டும் உரிய தரப்பினரால் அமைத்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.