சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்)
இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச சமூகமும் புலம்பெயர்ந்த மக்களும் மேலும் காத்திரமாகப் பங்காற்ற வேண்டும் என்று உண்மை மற்றும் சமாதானத்திற்கான சர்வதேச செயல்திட்டத்தின் செயல் இயக்குநர் யஸ்மின் சூக்கா கானொளி மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்டிருக்கும் அந்த செய்தியில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்து நெருக்கடி மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வேளையில் இந்தப் பாரிய கடமையை புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
ஆண்டுக்கு ஒருமுறை போரில் உயிரிழந்தவர்களை முள்ளிவாய்க்காலில் நினைவுகூர்வதற்கு அரச படைகள் ஏற்படுத்திய தடைகளை மிகவும் வேதனையுடன் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்பிற்குரியவர்களுக்காக துக்கம் அனுசரிப்பதை மறுப்பது ஒரு குற்றமாகும் என்றும், அத்தகையச் செயல் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையைக் காட்டுகின்றன என்றும் தனது செய்தியில் யஸ்மின் சூக்கா கூறியுள்ளார்.
இலங்கையில் போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் உள்நாட்டில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது அதற்கான வழிமுறைகள் தோல்வியடைந்த நிலையில் அந்தப் பொறுப்பு சர்வதேச சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களின் கைகளில் இப்போது தங்கியுள்ளது என்று அவரது செய்தி குறிப்புணர்த்துகிறது.
புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்பவர்கள் தத்தமது நாடுகளிலுள்ள சட்ட வழிமுறைகள் ஊடாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க அனைத்து வழிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்கிறார் யஸ்மின் சூக்கா.