(மன்னார் நிருபர்)
(19-05-2021)
மன்னார் மாவட்ட இளைஞர்களின் முயற்சியினால் தயாரிக்கப்பட்ட 50 கட்டில்கள் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையின் கொரோனா சிகிச்சை பிரிவிற்கு வழங்கி வைக்க மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றிற்கு உள்ளாகும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடியவாறான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக 10 நாட்களில் 10 ஆயிரம் கட்டில்கள் எனும் செயல் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட இளைஞர்களின் முயற்சியினால் 50 கட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் புதன் கிழமை குறித்த கட்டில்களின் தரம் மற்றும் பயன்பாடு தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மற்றும் குழுவினர் நேரடியாக சென்று குறித்த கட்டில்களை பார்வையிட்டதோடு, மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையின் கொரோனா சிகிச்சை பிரிவிற்கு குறித்த கட்டில்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.