இனி கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக பரிசோதனை மையங்களையோ, மருத்துவமனைகளையோ நாடிச் செல்ல வேண்டாம். வீட்டிலேயே சுயமாக பரிசோதனை மேற்கொண்டு, 15 நிமிடங்களில் முடிவு கிடைக்கக் கூடிய கொரோனா ஹோம் டெஸ்ட் கிட், அடுத்த வாரம் முதல் மருந்தகங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
புனேவைச் சேர்ந்த மை லேப் (Mylab Discovery Solutions) நிறுவனம் உருவாக்கியுள்ள CoviSelf எனும் வீட்டிலேயே சுயமாக கொரோனா பரிசோதனை செய்து முடிவு தெரிந்து கொள்ளக்கூடிய பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து இந்தியாவில் 7 லட்சம் மருந்தகங்களில் CoviSelf சுயபரிசோதனை கருவிகள் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என மைலேப் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த டெஸ்ட் கருவி ஒன்றின் விலை 250 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CoviSelf கருவியினை பயன்படுத்தி 2 நிமிடங்களில் பரிசோதனை செய்துவிடலாம் எனவும் 15 நிமிடங்களில் பரிசோதனை முடிவு தெரிந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கர்ப்பத்தை தெரிந்து கொள்ள பயன்படுத்தும் ஹோம் டெஸ்ட் கிட் அடிப்படையிலானது.
இந்த டெஸ்ட் கிட்டை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா பரிசோதனைக்கென பிரத்யேக லேப் டெக்னீசியன் தேவை இருக்காது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் இது விற்பனைக்கு கிடைக்கும். ஆன்லைன் வாயிலாகவும் இந்த டெஸ்ட் கிட்டை வாங்கிக் கொள்ள முடியும். இந்த கருவியின் மூலம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் பரிசோதனை கூடங்களின் நெருக்கடி குறைக்கப்படுகிறது.
மேலும் அதிகபட்ச சோதனைகளை மேற்கொண்டுவருவதால் பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பட்டு வரும் காலதாமதமும் இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. நாட்டில் சில இடங்களில் 72 மணி நேரம் வரை முடிவுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சோதனை கருவி ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
மேலும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மொபைல் செயலியின் மூலம் பரிசோதனை முடிவுகளை தாங்களே சுயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் இந்த தகவல்கள் அனைத்தும் ஐசிஎம்.ஆர் -ல் இணைந்த பாதுகாப்பான செர்வரின் மூலம் ஒருங்கிணைக்கப்படும் எனவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.