இலங்கை கடந்த சில வாரங்களாக பதட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கவனம் ‘கொழும்பு துறைமுக நகர சட்டத்தை பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் ‘கைங்கரியத்தில் ஈடுபட்டு தனது முழுச் சக்தியையும் சீனாவிற்காக செலவளித்ததால், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துச் சென்றதை கவனிக்கவில்லை. கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இலங்கையில் சில மருத்துவமனைகள் நோயாளிகளிற்கு சேவையை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
கடந்த வாரம் அரசமருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட பத்திரிகையாளர் அங்குள்ள நோயாளர்களின் நிலைமையை காண்பிக்கும் படங்களை வெளியிட்டதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் கரிசனைகள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட பத்திரிகையாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையி;ல் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையி;ல் கட்டில்கள் இன்மையால் பத்திரிகையாளர் நிலத்தில் இருக்கவேண்டிய நிலைமையேற்பட்டது,பல நோயாளிகள் நிலத்தில் மெத்தையில் அல்லது பாய்களில் உறங்குவதை காண்பிக்கும் படங்களை அவர் வெளியிட்டார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றவேளை இது குறித்து உரிய அதிகாரிகளிற்கு அறிவிப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச உறுதியளித்தார். இந்த நோயார்களிற்கு கட்டில் வசதிகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார். பின்னர் குறிப்பிட்ட பத்திரிகையாளர் மத்துகமவில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டார் .
ஆனால் நேற்று காலை பல நோயாளிகள பாணந்துறை மருத்துவமனையில் கட்டில்கள் அற்ற நிலையில் காணப்படுகின்றனர்.
இது குறித்து டெய்லி மிரர் பாணந்துறை வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியர் இந்திராணி கொடகண்டவை தொடர்புகொண்டு கேட்டவேளை அவர் தனது மருத்துவமனை நிலைமையை உரியவிதத்தில் கையாள்கின்றது என தெரிவித்தார்.
கொவிட் 19 நோயாளிகளிற்கு புதிய கட்டில்கள் குறித்து தங்களிற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் கொரோனா வைரசிற்கு எதிரான முன்னிலைவீரர்கள் என வர்ணிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் அதிகரித்துவரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாதவர்களாக காணப்படுகின்றனர் என அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார பணியாளர்கள் நோயாளர்களின் எண்ணிக்கையால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டனர், அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர், கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு நாட்டிற்கு உறுதியான தீர்வே அவசியம் என சங்கத்தின் தலைவர் சமந்த கோரல ஆராச்சி தெரிவித்தார்
கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு நாடெங்கும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட பயணத் தடையானது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த பயணத் தடை பொதுமக்களின் அவசர கருமங்களைக் கருத்திற் கொண்டு நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றிரவு 11 மணிக்கு மீண்டும் அமுலுக்குக் கொண்டு வரப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும், கடந்த 21 ஆம் திகதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட பயணத் தடையை இடையில் தளர்த்த வேண்டாமென்றும், அதனை தொடர்ச்சியாக இரு வாரங்களுக்குத் தொடருமாறும் மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த யோசனை தொடர்பான இறுதி முடிவு குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவித்தல் எதுவும் வெளியாகவில்லை.
நாட்டில் கொவிட்19 தொற்று பரவுகின்ற வேகம் மிகவும் அதிகமாக இருப்பதனாலும், நாளாந்த உயிரிழப்புகளும் படிப்படியாக அதிகரித்து வருவதனாலுமே பயணத் தடை நடைமுறையை இரு வாரங்களுக்காவது தொடருமாறு மருத்துவ, சுகாதாரத் தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. சமூக முடக்க நடைமுறையை தளர்த்துகின்ற வேளைகளில் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும், அவசிய கருமங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் பெருந்தொகையாக ஒன்றுகூடுவதனால் சமூகத் தொற்று உருவெடுப்பதற்கான அபாயம் ஏற்படலாம்.
எனவேதான் இன்றைய கொவிட் அலையானது மேலும் மோசமடைந்து செல்லாமல் தவிர்க்கும் நோக்குடன் இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. ஆனாலும் பயணத் தடை காரணமாக மக்கள் தொடர்ச்சியாக தத்தமது வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதிலும் பாதிப்புகள் எதிர்நோக்கப்படுகின்றன. மக்கள் எவ்வாறாயினும் தங்களது அவசிய கருமங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டியே உள்ளது.
பயணத் தடை தளர்த்தப்படுகின்ற வேளைகளில் மக்கள் அவசிய கருமங்களுக்காக மாத்திரம் வீட்டை விட்டு வெளியே வந்து, சமூக இடைவெளியை கண்டிப்பாகக் கடைப்பிடித்தபடி நடந்து கொள்வார்களால் கொவிட் தொற்று மேலும் தீவிரமடைகின்ற அபாய நிலைமையை பெருமளவில் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் இன்றைய கொரோனா பேரிடர் காலத்தில் கூட கடைத் தெருக்களில் மக்கள் முண்டியடிப்பதையே காண முடிகின்றது.
சமூக இடைவெளி எவ்வாறு கடைப்பிடிக்கப்பட வேண்டும், அதற்கான அவசியம் யாது, கொவிட் எவ்வாறு ஒருவரில் இருந்து மற்றவருக்கு தொற்றிக் கொள்கின்றது போன்றவை தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி இல்லாத நிலைமையையே இன்றும் கூட பரவலாக அவதானிக்க முடிகின்றது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சேவையில் ஈடுபட்டிருந்த குறுந்தூர புகையிரதங்களில் மக்கள் நெருக்கமாக நின்றபடி பயணம் செய்ததை காணக் கூடியதாக இருந்தது. சமூக இடைவெளி எவ்வாறு அலட்சியப்படுத்தப்படுகின்றது என்பதற்கு இதனை விட உதாரணம் தேவையில்லை.
இலங்கையில் முன்னர் உருவெடுத்த கொரோனாவின் முதலாம், இரண்டாம் அலைகளைப் போன்றதல்ல இன்று உருவாகியிருக்கின்ற மூன்றாவது அலை என்பதை மக்கள் ஒவ்வொருவருமே முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனாவின் திரிபடைந்த வைரஸ்களாக உலகில் நான்கு வகைகள் உலகெங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று வகை வைரஸ்கள் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.
மேற்படி திரிபடைந்த வைரஸ்கள் முன்னைய அலைகளை உருவாக்கிய வைரஸ் போன்ற இயல்புடையவை அல்ல. இன்றைய திரிபடைந்த வைரஸ் வகைகள் சற்று வீரியம் மிக்கவையாகும். அத்துடன் முன்னைய வைரஸ்களைப் பார்க்கிலும் மிக இலகுவாகவும், வேகமாகவும் பரவக் கூடிய இயல்பைக் கொண்டுள்ளன. எனவேதான் இன்றைய மூன்றாம் அலையின் தாக்கமானது மிகவும் பாரதூரமானதாக உள்ளது. நாளாந்தம் மிகக் கூடுதலான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி செல்கின்றது.
கொவிட் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக தடுப்பூசி ஏற்றிக் கொள்வது மிகவும் அவசியமென்று உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்கள் மக்களுக்கு தொடர்ச்சியாக அறிவுரை கூறி வருகின்றனர். தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டாலும் கூட, அவர்களுக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டு விடாது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும். எனவே கொவிட் தடுப்பூசி என்பது மிகவும் இன்றியமையாததாகும்.
அது ஒருபுறமிருக்க, சமூகத்தில் இருந்து கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி மட்டும் ஒரு தீர்வாக அமைந்து விடப் போவதில்லை. ஏனெனில் வயதின் அடிப்படையில் நாட்டிலுள்ள அனைவருமே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை. இளவயதினருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான அங்கீகாரத்தை உலக சுகாதார நிறுவனம் இன்னுமே வழங்கவில்லை.
எனவே தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் ஏனையோரைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளனர். தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் கொரோனா தொற்றின் காவியாக செயற்பட்டு விடக் கூடாது. இந்நிலைமைகளைப் பார்க்கின்ற போது, தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களும் கூட வழமையான சுகாதார நடைமுறைகளைப் பேணியபடி தொடர்ந்தும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே உண்மையாகும்.
மேலும் இலங்கையில் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்தால் இலங்கை அரசானது பொருளாதார ரீதியிலும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் மருத்துவ சேவைகள் வழங்கும் ரீதியிலும் மேலும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.