(மன்னார் நிருபர்)
(25-05-2021)
நானாட்டான் பிரதேசத்தில்,நானாட்டான் பிரதேசச் செயலகத்திற்கு முன் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
கால நிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட கடும் காற்று காரணமாக நானாட்டான் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை முதல் மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இவ்வாறான மின் துண்டிப்பு நேரத்தில் தனியாக இயந்திரம் வைத்து எரிபொருட்களை நிரப்பி வந்த எரிபொருள் நிலையத்தினர் இன்றைய அவசர கால நிலையில் அந்த முயற்சியை மேற்கொள்ளாத நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
பயணத் தடை காரணமாக சில நாட்கள் வீடுகளில் முடங்கிய மக்கள் இன்றைய தினம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வெளியில் வந்தனர்.
இந்த நிலையில் தமக்கு தேவையான எரி பொருளை கொள்வனவு செய்யவும் குறிப்பாக விவசாய மற்றும் தோட்டப் பயிர்களுக்கு தேவையான டீசல் மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் போன்றவற்றை பெற்றுக் கொள்ளவும் குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்தனர்.
எனினும் மின்சாரம் இல்லாத நிலையில் குறித்த நிலையத்தின் எரிபொருள் இயந்திரங்களை இயக்க முடியாத நிலை காணப்பட்டமையினால் மக்களுக்கு எரிபொருட்கள் வழங்கப்படவில்லை.
இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பியதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.