மேலும் ஒரு கொரோனா சிகிச்சை நிலையம் ஆரம்பிக்க ஏற்பாடு
(மன்னார் நிருபர்)
(25-05-2021)
மன்னார் மாவட்டத்தில் தற்போது பெண்களுக்கான கொரோனா சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் மேலும் 400 கட்டில்கள் போடக்கூடிய வகையில் மேலும் ஒரு கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் சுகாதார துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் தற்போதைய நிலமை தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை(25) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான்,சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேசச் செயலாளர்கள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள்,திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
கொரோனாவின் தற்போதைய நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பாகவும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பது தொடர்பாகவும் துறை சார்ந்த திணைக்கள தலைவர்களோடு முப்படையினரும் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றோம்.
தற்போதைய சூழ்நிலையில் எங்களுடைய மாவட்டத்தில் நோயாளர்களுக்கு என ஏற்படுத்த இருக்கின்ற தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் 80 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
அவர்களில் 15 பேர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.ஏனையவர்கள் வவுனியா , கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கையின் படி அதிகமானோர் இந்த வாரம் தங்களுடைய சிகிச்சை நிறைவு செய்து தங்களுடைய வீடுகளுக்குச் செல்ல உள்ளனர்.
மேலும் நாங்கள் இன்னும் 400 கட்டில்கள் போடக்கூடிய வையில் மேலும் ஒரு சிகிச்சை நிலையத்தை நாங்கள் ஒழுங்குபடுத்திக் கொண்டு இருக்கின்றோம்.
இன்னும் இரண்டு வாரங்களில் நாங்கள் அதனையும் செயல் படுத்தப்பட கூடியதாக இருக்கும்.
எங்களுடைய மாவட்டத்திலிருந்து அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில் வெளி மாவட்டத்திற்கு மீன் ,மரக்கறி ,நெல் ,அரிசி , போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கும் கொண்டு வருவதற்கும் அவர்களுக்கு அனுமதி பத்திரத்தை வழங்கி வருகின்றோம்.
அதனடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் நடமாடும் சேவையின் மூலம் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து இருக்கின்றோம்.
அரசின் கோரிக்கைக்கு அரமவாக கிராமங்கள் தோறும் ‘கொரொனா’ தொடர்பான கிராமிய குழுக்கள் அமைத்து அதன் மூலம் கிராமங்களில் இந்த கொரோனா காலப்பகுதிகளில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்யவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கின்றோம்.
இதனை பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவலகர்கள் தலைமை தாங்கி நடாத்துவார்கள்.
அவர்கள் மூலம் அந்த கிராமங்களில் இருந்து வரும் பிரச்சனைகளை நாங்கள் தீர்ப்பதற்கு தயார் நிலையில் இருக்கின்றோம்.
தற்போது மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 73 குடும்பங்களும் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 23 குடுமு;பங்களும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 80 குடும்பங்களும் , நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களும் , மடு பிரதேச செயலாளர் பிரிவில் 3 குடும்பங்களும் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்களின் வருமானம் குறைந்த குடும்பங்களாக , அரச உத்தியோகத்தர்கள் இல்லாமல் உயர் வருமானங்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான உலர் உணவு விநியோகம் எங்களுடைய பிரதேச செயலகங்கள் மூலம் வழங்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.