(26-05-2021)
மன்னார் மாவட்டத்தில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை காலை முதல் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக தற்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் மன்னார் மாவட்டத்தில் எற்பட்ட கடும் காற்று காரணமாக பல இடங்களில் சீரற்ற மின் வினியோகம் இடம் பெற்று வருகின்றது.
இவ் விடையம் தொடர்பாக மன்னார் மின்சார சபைக்கு 023-2222150 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய போதும் வட மாகாணத்திற்கு பொறுப்பான யாழ் அலுவலகத்தின் பிரதான தொலைபேசி இலக்கமான 021-2024444 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தமது முறைப்பாட்டை தெரிவிக்குமாறு தெரிவிக்கின்றனர்.
எனினும் மன்னாரில் இருந்து பல தடவைகள் குறித்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தினாலும், குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என மன்னாரில் பாதீக்கப்பட்ட மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மன்னார் மின்சார சபையில் கடமையாற்றும் பலர் தென் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் விடுமுறையில் வீடு சென்றமையினால் உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும், வட மாகாணத்திற்கு பொறுப்பான இலங்கை மின்சார சபையின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போதும் குறித்த தொலைபேசி இலக்கம் உரிய முறையில் செயல் படாமை குறித்து மன்னார் மாவட்ட மின் பாவனையாளர்கள் விசம் தெரிவித்துள்ளனர்.