திருமதி. வசந்தா நடராசன் B.A.,
416 332 0269
“ குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் – இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்”
இந்து சமயத்தின் அறுவகைச் சமயப் பிரிவுகளில் ஒன்றாக, கௌமாரம் காணப்படுகின்றது. கௌமாரத்தின் முழுமுதற் கடவுளாக முருகப்பெருமான் போற்றப்படுகின்றார். அண்டசராசரமெங்கும் வியாபித்து அருள்புரியும் பரம்பொருளை, அம்மை அப்பனாக மட்டுமன்றி, இளவலாகவும், குமரனாகவும் பண்டைய இந்துக்கள் கண்டு களித்தனர். குமரன், கார்த்திகேயன், சுப்ரமணியன், ஞானபண்டிதன், கந்தன், சேந்தன், சேயோன், கவின் எனப் பல பெயர்களிட்டு, முருகப்பெருமானைப் போற்றி வழிபட்டார்கள்.
முருகு, இளமை, அழகு, தெய்வத்தன்மை, மணம் என்பன ஒரு கருத்துடைய சொற்களாகக் காணப்படுகின்றன. இளமை என்பது எப்பொழுதும் மாறுபடாத சிறுபருவம். என்றென்றும் உண்மைப்பொருளாகிய சத் ஆகும். அழகு என்பது ஞானப் பிரகாச விளக்கமாகிய சித் ஆகும். தேன் என்பது, தானும் கெடாமல், தன்னோடு சேர்ந்தவைகளையும் கெட விடாமைபோல, என்றும் இன்பத்தை அளிக்கும் ஆனந்த சொரூபம்.
இத்தகைய சத், சித், ஆனந்த வடிவமாகிய பிரம்மமே முருகப்பெருமான். சோதிப் பொறியாகத் தோன்றிய முருகன், முதலில் ஆகாயம் முழுவதும் பரந்து, பின் வாயுவால் கொண்டு போகப்பட்டு, அதன்பின்னர் அக்னி என்னும் தேயுவால் தாங்கப்பெற்று, பின் கங்கையும், சரவணப்பொய்கையுமாகிய அப்புவில் மிதந்து, ஆறு தலைகளையும், பன்னிரு கைகளையுமுடைய திருவுருவமாகி, பூமியாகிய பிருதிவியில் பலவித ஆடல்களைப் புரிந்தாரென்பது புராண வரலாறு. முருகப் பெருமான், ஆகாயம் முதல் பஞ்சபூதங்களாக முறையே தோன்றினார் என்பதே இதன் பொருளாகும்.
முருகப்பெருமான் சர்வ வல்லமையுடையவர். அம்மையப்பனின் செல்லப் பிள்ளையான முருகன், மாங்கனியைப் பெற, மூத்தபிள்ளையான கணபதி அம்மையப்பரை வலம் வந்து, உலகத்துக்குள்ளே தானும் அடக்கம் என்ற தத்துவத்தை உணர்த்த, உலகையே சுற்றிவந்து தனக்குள்ளே உலகம் ஒடுங்கும் என்பதை விளக்கி அருளியவர் முருகன். ‘தன்னுள் எல்லாம், எல்லாவற்றுள்ளும் தான்’ என்னும் தத்துவமே கடவுட் கொள்கையாகக் காணப்படுகின்றது.
முருகனே தமிழ். தமிழே முருகன். முருகன் என்றும் மாறாத இளமை கொண்டவன். அவ்வாறே தமிழும் என்றும் இளமையுடையது. முருகவேளின் முகங்கள் ஆறு. தமிழில் இன எழுத்து ஆறு. வல்லினம் ஆறு. மெல்லினம் ஆறு. இடையினம் ஆறு. முருகன் என்ற எழுத்துக்களில், ஒவ்வொன்றும் மெய்யெழுத்தில் ஒவ்வோர் இனத்தைச் சார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழியில் உயிர் எழுத்தக்கள் பன்னிரண்டு. அவ்வாறே முருகப்பெருமானின் தோள்கள் பன்னிரண்டு. தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு. ஆறுமுகப்பெருமானின் திருக்கண்கள் பதினெட்டு. வேறு எந்த மொழியிலும் காணப்படாத ஆயுதஎழுத்து, தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து. இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்றும் மூன்று புள்ளிகளாகச் சேர்ந்து, ஆயுதமாக விளங்குகின்றது. இக்கருத்தினை
“ கண்ணிகர் மெய்யும் சென்னிக் கணநிக ரினத்தின் கூறும்
திண்ணமை தோள்க ளேபோல் திகழ்தரு முயிரும் வேறொன்
றெண்ணுதற் கரியதான எஃகமும் இயலிற் காட்டும்
புண்ணிய மனிக்கோன் செவ்வேள் பொற்பதத் தடிமையாகும்”
எனமுருகப்பெருமானின் சிறப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகன் கலியுகவரதன். கலியுகம் தீமைகளுக்கு ஆக்கம் அளிக்கும் யுகம். உறுதியைக் குலைத்து உண்மையை மறைக்கும் யுகம். இத்தகைய காலத்தில் இறையுணர்வை மனிதகுலத்திடம் பாதுகாப்பவன் முருகன். இத்தகை சிறப்புமிக்க முருகக் கடவுளுக்கு இந்தியாவிலும், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் கோயில்கள் அமைத்து வழிபாடு நடைபெறுகின்றது. இலங்கையில் குறிப்பாக மட்டக்களப்புத் தமிழகத்தில், மிகப் பழமையான வழிபாடாக முருக வழிபாடு காணப்படுகின்றது. பழமையும், பிரசித்தமுமடைய முருகவழிபாட்டுத் தலங்களை, திருப்படைக் கோயில்கள் என மட்டக்களப்பிலே கூறுவது வழக்கம். பண்டைய அரசின் மதிப்பும், மானியமும், சீர்வரிசைகளும் இக்கோயில்களுக்குக் கிடைத்துள்ளன.
திருப்படைக்கோயில்களோடு மேலும் பல முருகன் கோயில்கள், மட்டக்களப்பிலே பெரிதும் போற்றப்படுகின்றன. அனேகமான கோயில்களின் ஆரம்பம், வேடர்களோடு தொடர்புபட்டதாகக் காணப்படுகின்றது. இவ்வாறான கோயில்களுள், மட்டக்களப்பிலுள்ள ஆரையம்பதி கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். ஆரையம்பதி, மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள ஒரு பிரபலமான கிராமமாக, வளம் பொருந்தியதாக விளங்குகின்றது.
இக்கிராமம் மட்டக்களப்பு நகரின் தெற்கே, சுமார் நாலுமைல் தூரத்தில் அமைந்துள்ளது. ஆரையம்பதி என்ற பெயர் ஏற்பட்டமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வூரில் ஆரைப்பற்றைகள் அல்லது நீரோடைகள் வளைந்து வளைந்து சென்று, வாவியுட் கலப்பதால் இக்கிராமத்திற்கு, ஆரைப்பற்றை என்ற பெயர் எற்பட்டதென்பர். இவற்றொடு ஓடைகளில் ஆரல் மீன்கள் நிறைய வாழ்ந்த காரணத்தால், இவ்வாறான ஊர்ப் பெயர் ஏற்பட்டதெனவும் கூறுவர். வல்லாரையை ஆரல் எனவும் அழைப்பர். இக்கீரைவகை வளைந்து வளைந்து ஓடும் நீரோடைகளின் ஓரங்களில், முளைத்திருந்தமையால், இவ்வூருக்கு ஆரைப்பற்றை என்ற பெயருண்டாயிற்றென்பர். எதுவிதத்திலோ காரணப்பெயராக விளங்கிய ஆரைப்பற்றை என்ற பெயர் மருவி, நாளடைவில் ஆரையம்பதி ஆயிற்று. இவ்வாறான பதியிலே, ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் காணப்படுகின்றது.
தொடரும்….