சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்)
இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் நாளுக்கு நாள் கூடுதலான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு அல்லாடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அதிலும் குறிப்பாக தமிழர்களின் தாயகமாக வடக்கு-கிழக்குப் பகுதியில் இந்த நோய்த்தொற்றின் பரவல் தீவிரமாக இருப்பதால் சிறுபான்மை மக்கள் கடும் அச்சத்திலுள்ளனர். வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டமும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் மூன்று பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பகுதிகளிலும் இராணுவத்தினர் பொதுமக்களுக்கு கூடுதல் நெருக்கடிகளைக் கொடுத்து அவர்கள் தமது வாழ்வாதாரங்களுக்காகச் செல்வதை அனுமதிக்க மறுக்கின்றனர்.
நாட்டில் தடுப்பூசிக்கும் தட்டுப்படு நிலவுவதால் மக்கள் இந்தக் கொடிய நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்து கொள்ள மிகவும் போராடி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா இலங்கைக்கு ஐந்து லட்சம் டோஸ் மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியது. ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனகாவான் உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்டால் இவை தயாரிக்கப்பட்டன.
அதன் மூலம் 150,000 முன்கள சுகாதார பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 115,000 இராணுவ மற்றும் பொலிசாருக்கு கொழும்பு மற்றும் அதன் சுற்றாடலிலுள்ள ஆறு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் என்று அரசு அப்போது அறிவித்தது இதையடுத்து தொடர்ந்து தடுப்பூசியை நன்கொடையாகப் பெற்றுக் கொள்வதற்கோ அல்லது சந்தையில் வாங்குவதற்கோ அரசு பெரியளவில் முயற்சிகளை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“சீனா இருக்கும்வரை பயமேன்“ என்கிற எண்ணமே அரசில் நிலைப்பாடாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. அதற்கேற்ப கடந்த புதன்கிழமை மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் தடுப்பூசி சீனாவிலிருந்து நன்கொடையாக வந்து சேர்ந்துள்ளது.
எனினும் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப தடுப்பூசி கிடைப்பதிலுள்ள சிரமங்கள் காரணமாக தனியார் துறையினர் அதை இறக்குமதி செய்யும் கோரிக்கையை முன்வைத்தனர். அப்படியான கோரிக்கையை அஸ்ட்ராசெனகா மறுத்துவிட்டது.
கொடிய கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் தனியார் துறையின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உலகின் முன்னணி தடுப்பூசி உற்பத்தி நிறுனவங்களில் ஒன்றான அஸ்ட்ரசெனகா இலங்கை அரசாங்கத்திற்கு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அஸ்ட்ராசெனகாவின், ஆசியாவிற்கான பொது விவகார உதவி பணிப்பாளர் ஜோஸ்பர் மெயின்ஸ், இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராசெனகா தயாரித்த கொரோனா தடுப்பூசியை சந்தைப்படுத்த பல தனியார் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் இலங்கை அரசுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதை தாங்கள் அறிந்துகொண்டுள்ளதால் தான் இந்த கடிதத்தை அனுப்புவதாக ஜோஸ்பர் மெயின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த தொற்றுநோயை விரைவில் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கும் சர்வதேச சுகாதார நிறுவனங்களுக்கும் தடுப்பூசியை வழங்குவதே தற்போது எங்கள் நோக்கமான காணப்படுகின்றது என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறோம்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த தடுப்பூசியை தற்போது தனியார் துறைக்கு வழங்கவோ, விநியோகிக்கவோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென, அஸ்ட்ராசெனகாவின் ஆசியாவிற்கான பொது விவகார உதவி பணிப்பாளர் ஜோஸ்பர் மெயின்ஸ், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் துறை குறித்த தடுப்பூசியை விநியோகிப்பதாக வெளியாகும் விளம்பரத்தையும் அந்த நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது.
அவர் தனது கடிதத்தில் “அஸ்ட்ராசெனகாவைத் தவிர வேறு எந்தவொரு வர்த்தக நிறுவனமும், தனியார் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை மேற்கொண்டால், அது போலியான தடுப்பூசியாக இருக்க வாய்ப்புள்ளது, இதுபோன்ற சந்தர்ப்பத்தில் குறித்த தடுப்பூசியை நிராகரிக்க வேண்டுமென்பதோடு, அது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
கோவாக்ஸ் திட்டம், யுனிசெப் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா ஆகியவை மாத்திரமே இலங்கைக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் மார்ச் மாதம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறையையும் அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களிலிருந்து கொரோனா தொற்று அதிகமாக பதிவாகி வருவதால், உழைக்கும் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதே அடுத்த முன்னுரிமை நடவடிக்கையாக இருக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹானா சுட்டிக்காட்டியிருந்தார்.
“இலங்கையில் பெரும்பாலான கொரோனா தொற்றாளர்கள் தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களில், குறிப்பாக ஆடைத் தொழிற்சாலையில் பதிவாகின்றன. எங்கள் அடுத்த
முன்னுரிமை உழைக்கும் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதாக இருக்க வேண்டும். தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஒப்புதலுக்கு உட்பட்டு தனியார் துறை தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.” என அவர் தெரிவித்திருந்தார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் வைத்திய நிபுணர்கள் ஆகியோரை புறந்தள்ளி இராணுவத்திடம் கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசியைச் செலுத்துவதிலும் அரசு பாரபட்சம் காட்டுகிறது என உள்ளூர் ஆர்வலர்கள் ஆதாரபூர்வ தகவல்களுடன் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.