நக்கீரன்
கோலாலம்பூர், மே 27:
இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலக நாடுகளில் பெரும்பாலானவை அமெரிக்காவையும் ரஷ்யாவையும் மையமிட்டு இரு அணிகளாகப் பிரிந்திருந்தன. ஆனால், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவோ இந்த இரு அணிகளையும் சாராமல், பஞ்சசீல கொள்கையையும் அணிசேரா கொள்கையையும் முன்வைத்து, மூன்றாம் உலக நாடுகள் என்ற தனி அமைப்பை அணிசேரா நாடுகள் என்ற பெயரில் ஏற்படுத்தினார்.
இதனால் உலக அரங்கில் நேருவின் புகழ் பரவியது. பன்னாட்டு அரங்கில் இந்தியாவின் பெருமையும் நேருவின் ஆளுமையும் பேசுபொருளானதைக் கண்டு அண்டை நாடான சீனாவிற்கு மனம் பொறுமியது. இந்த நிலையில், திபெத் விவகாரத்திலும் தலாய் லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்த வகையிலும் நேருவின்மீது தீராத வஞ்சத்தை வளர்த்தது சீனா.
எப்படியாவது நேருவிற்கு கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பரபரப்பால் உந்தப்பட்ட சீனா, மிகவும் வஞ்சகமாக திட்டமிட்டு இந்தியாமீது திடீரென்று போர் தொடுத்தது. அதற்குப் பின் நேருவின் அரசியல் வாழ்வில் இறங்குமுகம் ஆரம்பமானது.
நேரு பிரதமர் ஆனதில் இருந்தே மலாயா-சிங்கப்பூர் அரசியல் நிலை குறித்து கவனம் செலுத்தி வந்தார். அதற்குக் காரணம் நேதாஜி. மலேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து இந்திய சமுதாயத்தை அரசாங்கத்தில் பிரதிநிதிக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ்(ம.இ.கா.) என்னும் அரசியல் இயக்கத்திற்கும் நேருவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்ப வசதியெல்லாம் அந்த அளவிற்கு வளர்ச்சி கண்டிராதபோதும், அன்றைய மலேசியாவின் அரசியல், சமூக சூழலெல்லாம் உடனுக்குடன் இந்தியாவில் பிரதிபலித்தன.
குறிப்பாக, இளம் வயதிலேயே தொழிற்சங்கத் தலைவர்களாக உருவாகி மலாயாவாழ் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த எஸ்.ஏ.கணபதி தூக்கில் இடப்பட்டது, வீரசேனன் படுகொலை செய்யப்பட்டதெல்லாம் அன்றைய இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் வலுவாக பிரதிபலித்தன.
கணபதிக்காக தமிழக ஏடுகளில் தலையங்கம் தீட்டப்பட்டது; சிறப்புச் செய்திகளும் வெளியிடப்பட்டன. 1947-இல் இந்தியா விடுதலை அடைந்தபின் மலாயாவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு சுதந்திர வேட்கை பெருக்கெடுத்தது. கூடவே, அரசியல் மறுமலர்ச்சியும் மெல்ல முகிழ்ந்தது.
அதனடிப்படையில்தான் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியும் உதயமானது. இதன் ஆதாரமாகவும் ஆணி வேராகவும் இருந்தவர் பண்டித ஜவஹர்லால் நேருதான். பேராக் மாநிலத்தில் உள்ள அரச நகரான கோல கங்சாரில் தோன்றிய ஜான் திவி, கல்விமானாகவும் சமூகப் பற்றாளராகவும் விளங்கினார். அதேவேளை, மலாயாவின் சுதந்திரத்திலும் அதீத அக்கறைக் கொண்டிருந்ததால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் விடுதலை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டினார். அத்துடன் நேருவுடனும் தொடர்பு ஏற்பட்டது.
அதன் அடைப்படையில்தான் இந்திய தேசிய காங்கிரஸின் சாயலில், அதன் ஒரு கிளையாகவே அன்றைய மலாயா இந்தியர் காங்கிரஸ்(மஇகா) தோற்றுவிக்கப்பட்டது. மஇகா-வின் முதல் தலைவராக ஜான் திவிக்கு அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கியவரே நேருதான். அப்பொழுது, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக நேருதான் விளங்கினார்.
அப்படிப்பட்ட மஇகா, தற்பொழுது 70 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், இன்றைய தலைவர்கள் அதன் தொடக்ககால வரலாற்றை எண்ணிப் பார்க்கின்றனரா என்பது தெரியவில்லை. மஇகா-வின் பத்தாவது தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், 2024ஆம் ஆண்டு வரைக்குமான அடுத்த தவணைக்கும் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அனைவரையும் அடுத்து வரும் 15-ஆவது பொதுத் தேர்தல் குறித்த பதற்றமும் அச்சமும் தொற்றிக் கொண்டுள்ள நிலையில், மஇகா என்னும் ஆலமரத்திற்கு விதைபோட்ட நேருவை இன்றைய காலக்கட்டத்தில் எண்ணிப் பார்ப்பார்களா என்பது ஐயமே!
பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் தலைவர், பிரதமர், பகுத்தறிவாளர், சமதரும(சோசலிச)வாதி என்றெல்லாம் பல்வகையாலும் சிறந்து விளங்கிய நேரு, அரசியல் அடிப்படையில் ஏராளமான தவறையும் குளறுபடிகளையும் செய்தார்.
காஷ்மீரில் பிரிவினைவாதம் இன்றளவும் தொடர்வதற்கு அவர்தான் காரணம்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சியை முதன்முதலாக அரசியல் சாசனத்தின் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி கேரளத்தில் களைத்தவரும் இவர்தான்.
தமிழக அரசியலைப் பொருத்தமட்டில், காமராசரைக் கொண்டாடிய நேரு, அண்ணாவை மிகவும் வெறுத்தார். அறிஞர் அண்ணாவைப் பற்றி இளப்பமாக எண்ணி இருந்த நேரு, அண்ணா இந்திய நாடாளுமன்ற மேலவையில் கன்னி உரை நிகழ்த்தியபோது, அவருக்கான நேரம் முடிந்ததும் அன்றைய மேலவைத் தலைவர், பேச்சை நிறுத்திக் கொள்ளும்படி மணி ஒலித்தபோது அதைத் தடுத்த நேரு, அண்ணா பேசி முடிக்கும்வரை இடையூறு செய்ய வேண்டாம் என்று தகவல் தெரிவித்துவிட்டு, உடனே தன்னுடைய அறைக்குச் சென்று அண்ணாவின் கருத்தாழமிக்க ஆங்கில சொற்பொழிவை இமைகொட்டாமல் கேட்டாராம் நேரு.
அண்ணா பேசி முடித்ததும், தான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று தன்னுடைய உதவியாளரிடம் உடனே சொல்லி அனுப்பினார் நேரு. அண்ணாவைத் தேடி வந்த அவரின் உதவியாளருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பேசி முடித்ததும் சென்னைக்குத் திரும்ப புதுடில்லி விமான நிலையத்திற்கு விரைந்துவிட்டார் அண்ணா என்பதை அறிந்த நேரு, நேரத்தை அண்ணா எப்படி அளந்து பயன்படுத்துகிறார் என்பதை அறிந்து மேலும் வியப்பில் ஆழ்ந்தாராம்.
ஆசிய சோதி என்றும் சாமாதான புறா என்றும் அழைக்கப்பட்ட நேருவின் பிறந்த நாளைப் போலவே அவரின் நினைவு நாளும் வரலாற்றில் நிலைபெற்றிருக்கும்.
1889 நவம்பர் 14-ஆம் நாளில் பிறந்த நேரு, 1964 மேத் திங்கள் 27-ஆம் நாளில் இந்த உலக வாழ்வைத் துறந்தார்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24