தமிழுக்கும், சமூகத்துக்கும் பணியாற்றிய எமது பெரியார்களின் உருவச்சிலைகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் ,செங்கலடி, கொக்கட்டிச் சோலை ஆகிய இடங்களில் உள்ள பிரதான சந்திகளில் அமைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்படுமென்று இராஜாங்க அமைச்சர்எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு_ வாழைச்சேனை சுற்று வளைவு சந்தியில் சுவாமி விபுலானந்தரின் உருவச் சிலை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் அண்மையில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நிறைவேற்றி வைத்துள்ளார். இந்நிகழ்வில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அவருக்கான பாமாலையும் இசைக்கப்பட்டது.
“சுவாமி விபுலானந்தர் உலகப் புகழ் பெற்ற ஒரு தமிழ்ப் பெரியார், உலகின் முதலாவது தமிழ்ப் பேராசிரியர், கிழக்கு மண் ரூடவ்ன்றெடுத்த இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் கைவரப் பெற்ற முத்தமிழ் வித்தகர் ஆவார் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தமது உரையில் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது; “அன்னாரின் உருவச் சிலையை இவ்விடத்தில் திறந்து வைப்பதன் மூலம் பெருமையடைகின்றேன். இவ்விடத்தில் இச்சிலையை நிறுவ எமது முற்போக்கு உறவுகள் முன்னெடுத்த போது பல விமர்சனங்களும் சவால்களும் எதிர்நோக்கப்பட்டன. ஒரு சிலர் அவரை மதவாதியாகவும், இனவாதியாகவும் சித்தரித்தனர். அவர்களுக்கு சுவாமி விபுலானந்தர் என்பவர் யார் என்ற தெளிவின்மையே இதற்கான காரணமாகும்.
அவர் இனத்தை, மதத்தை கடந்த தமிழ்ப் பெரியார் ஆவார். எமது முற்போக்கு தமிழர் கழகம் கலை,பண்பாட்டு பாசறையாகும். எமது மாவட்டத்தில் தமிழுக்கும், சமூகத்திற்கும் சேவை செய்த பெரியார்களை நினைவு கூரும் வகையில் திருவுருவச் சிலைகளை நிறுவுகின்ற பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். மிக விரைவில் கிரான், செங்கலடி,மற்றும் கொக்கட்டிச் சோலை ஆகிய இடங்களில் உள்ள முச்சந்திகளில் அவற்றை நிறுவ உள்ளோம். இவ்வாறு இராஜங்க அமைச்சர் தெரிவித்தார்.