ஒன்ராறியோ அரசாங்கம் மாநில முதன்மை சுகாதார அதிகாரியுடன் கலந்தாலோசித்ததன் அடிப்படையில் மாநிலத்தினை பாதுகாப்பான முறையில் மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான மூன்று படிநிலைகள் அடங்கிய திட்டமொன்றினை வெளியிட்டுள்ளது. இத்திட்டமானது, மாநில அளவிலான தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் விகிதாசாரம் மற்றும் பொது சுகாதார கட்டமைப்பினால் வழங்கப்படும் தரவுகளில் காணப்படும் முன்னேற்றநிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும். மேற்படி தரவுகளின் அடிப்படையில், மே 22, 2021 முதல் ஒன்ராறியோ அரசாங்கம் மேலும் பல வெளியரங்க பொழுதுபோக்கு இடங்களை சில கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது.
மாநிலத்தை மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான இத்திட்டம் பொது சுகாதார விதிமுறைகளின் வழிகாட்டுதலுக்கமைய மூன்று படிநிலைகளைக் கொண்டதாக அமையும். அவையாவன:
முதற் படிநிலை: நோய்ப்பரம்பல் ஆபத்து குறைவாக இருக்கும் கூட்டநெரிசல் அற்ற வெளிப்புற செயற்பாடுகளையும் சில்லறை விற்பனைகளையும் சில கட்டுப்பாடுகளுடன் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கல். இதில் வெளியரங்குகளில் 10 பேர் வரை ஒன்றுகூட அனுமதித்தல், வெளிப்புற உணவருந்தும் இடங்களில் ஒரு மேசைக்கு 4 பேர் வரை அமர்ந்து உணவருந்த அனுமதித்தல், அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்களில் அவற்றின் உள்ளடக்கத் திறனின் 15 வீதம் வரையான நபர்களை அனுமதித்தல் போன்றவை அடங்கும்.
இரண்டாம் படிநிலை: வெளியரங்கில் ஒன்றுகூடும் தொகையினை மேலும் அதிகரிப்பதுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் முகக்கவசம் அணிந்தவாறு உள்ளரங்குகளில் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குதல். இதன்படி, 25 பேர் வரையான வெளியரங்க ஒன்றுகூடல்களுக்கு அனுமதியளித்தல், விளையாட்டுகள் மற்றும் போட்டி நிகழ்வுகள், இரவு வெளித்தங்கல் முகாங்கள், முகக்கவசம் அணிந்தவாறும் அதன் உள்ளடக்கத்திறன் விதிகளுக்கு அமையுமாறும் அழகு மற்றும் உடல்நலம் பேணும் நிலையங்களைத் திறக்க அனுமதித்தல், கட்டடத்தின் உள்ளடகத்தத் திறனின் 15 வீதம் வரையான மக்கள் ஒன்றுகூடுவதற்கு மத வழிபாடுகள், சடங்குகள், விழாக்களை அனுமதித்தல்.
மூன்றாம் படிநிலை: கட்டுப்பாடுகளுடன்கூடிய அதேவேளையில், தொடர்ந்து முகக்கவசம் அணிந்திருக்க முடியாத, அதிகளவில் மக்கள் ஒன்றுகூடும் உள்ளக நிலையங்களை திறப்பதற்கு அனுமதித்தல். இதில் உள்ளரங்க விளையாட்டு, பொழுதுபோக்கு, உடற்பயிற்சி நிலையங்கள் அடங்கும். அத்துடன் உள்ளரங்க உணவகங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், நூலகங்கள், கேளிக்கை மற்றும் சூதாட்ட நிலையங்கள் அவற்றின் உள்ளடக்கத்திறனின் வரையறைக்கு ஏற்றவாறு அனுமதி வழங்கப்படும்.
ஒவ்வொரு படிநிலைகளும் 21 நாட்களைக் கொண்டதாகவும் மாநிலத்தினை அடுத்த படிநிலைக்கு நகர்த்துவதற்கான பொது சுகாதார தரவுகளை மதிப்பீடு செய்யும் காலமாகவும் அமையும். 21 நாட்களின் முடிவில் கிடைக்கப்பெறும் தரவுகளின்படி குறிப்பிட்ட சதவீதமான மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, பொது சுகாதார தரவுகளில் முன்னேற்றம் காணப்படும் பட்சத்தில் மாநிலம் அடுத்த படிநிலைக்கு நகர்த்தப்படும்.
இதன்படி, முதற்படி நிலையில் பெரியவர்களில் 60 சதவீதம் வரையானோருக்கு முதலாவது சொட்டு தடுப்பூசி போடப்பட்டிருத்தல், இரண்டாம் படிநிலையில் பெரியவர்களில் 70 சதவீதம் வரையானவர்களுக்கு முதலாவது சொட்டு தடுப்பூசியும், 20 சதவீதம் வரையானோருக்கு இரண்டாவது சொட்டு தடுப்பூசியும் போடப்பட்டிருத்தல், மூன்றாம் படிநிலையில் 70 முதல் 80 சதவீதம் வரையான பெரியவர்களுக்கு முதலாவது சொட்டு தடுப்பூசியும், 25 சதவீதம் வரையாவனர்களுக்கு இரண்டாவது சொட்டு தடுப்பூசியும் போடப்பட்டிருத்தல்.
முழுமையாக மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர் முகக்கவசம் அணிதல், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுதல், போன்றவற்றுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் தொடர்ந்தும் பொது சுகாதார விதிமுறைகள், ஒன்ராறியோ பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் ஏனைய சுகாதார நிபுணத்துவம் வாய்ந்த வல்லுனர்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளும்.