21-05-2021 கதிரோட்டம்
இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ்; மக்களைப் போன்று மலையகத்திலும் தோட்டத் தொழிலாளர்கள் என்ற அழைக்கப்பெறும் தமிழ் மக்கள் பல ஆண்டு காலமாக பரம்பரையாக பரம்பரையாக வாழ்ந்து வருகின்றார்கள். ஆங்கிலேயர்களினால் தேயிலை மற்றும் றப்பர் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வதற்கென இந்தியாவிலிருந்து, இலங்கைக்கு எவ்வித விசாவுமன்றி அந்நாட்களில் கடல் மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் அழைத்து வரப்பட்ட மக்களின் நான்காவது அல்லது ஐந்தாவது பரம்பரையினர் அங்கு தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான தோட்டத் தொழிலாளிகளின் வரலாற்றை நாம் படிக்கும் போது, எமது கண்களிலேயே கண்ணீர் வடியுமளவிற்கு கஸ்டங்களும் கவலைகளும் நிறைந்த வாழ்வோட்டம் ஆகும். எவ்வித வசதிகளும் அற்ற ‘லயன்கள்’ என்றழைக்கப்படும் வதிவிடங்கள், மின்சார வெளிச்சமின்றி ஒரு அறைக்குள் ஒரு குடும்பம் வாழ்ந்த அந்த நாட்களில் அவர்கள் அடைந்த சிரமங்கள் அதிகம்.
இவ்வாறாக குறைந்த ஊதியம், ஓய்வற்ற வேலை, தோட்டத்துரை, கங்காணி, கணக்குப்பிள்ளை, கிளார்க்கர் என தங்கள் தோட்டத்து மேற்பார்வையாளர்களின் கட்டளைகளை தலை சுமந்த வண்ணம் தங்கள் இரத்தத்தைச் சிந்திய மக்களை கஸ்டங்களிலிருந்து மீட்டு வந்து நல்வாழ்வு தருகின்றோம் எ ன்று தாமாக முன்வந்தவர்களும் அவர்கள் மத்தியில் பிறந்த தொழிலாளிகளின் வாரிசுளும், ஏனைய கற்ற சில தலைவர்களுமே தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ஆனார்கள். “தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கி;னறோம்” என்று முன்வந்த பல தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்தாமல், தங்களதும், தங்கள் குடும்பத்தினதும், தங்கள் உறவினர்களினதும் வாழ்க்கையை உயர்த்துவதிலும், தங்களை மேற்தட்டு மக்களின் வாழ்க்கையை அடைந்தவர்களாக, அதனைப் பெற்றுக்கொள்வதற்கே பயன்படுத்தினார்கள் என்பதற்கு சான்றாக பல தொழிற்சங்கத் தலைவர்கள் விளங்கி வந்தார்கள், அத்துடன் இன்னும் பலர் உதாரணமாகத் திகழ்கின்றார்கள்.
ஆனால் சாதாரண தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா என்றால் அது நிச்சயமாக இடம்பெறவில்லை. இலங்கையில் எத்தனையோ தடவைகள் இனக்கலவரங்கள் இடம்பெற்றன. அவற்றில் தமிழ் பேசுகின்றவர்கள் என்ற வகையில் தோட்டத்தொழிலாளர்களும் ஆயிரக் கணக்கில் பாதிக்கப்பட்டார்கள். இடம் பெயர்ந்து சென்றார்கள். ஆனால் தொழிற்சங்கத் தலைவர்களான பல மலையகத் தமிழர்கள் இலங்கை காவல் துறையினரால் பாதுகாக்கப்பட்டார்கள். காரணம் அவர்களுக்கு அரசியல் செல்வாக்கும் அதன் வாயிலாகக் கிடைத்த பண பலம் அனைத்தும் இருந்தன. இது, மலையக மக்கள் மத்தியில் தோன்றியுள்ள வர்க்க முரண்பாடுகளை நன்கு வெளிச்சமிட்டு காட்டும் ஒரு பாடமாக விளங்குகின்றது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்காக, அவர்கள் மத்தியில் தொழிற் சங்க அமைப்பை முதலில் தோற்றுவித்தவர் கே. நடேசுஐயர் ஆவார். அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பை முதலில் தோற்றுவிக்க, தொடர்ந்து அது போலவே இலங்கை சமசமாசக்கட்சியானது அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தது.
1950களில் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கம் தோற்றம் பெற்றது. தொண்டமான் ஏனைய எல்லா அமைப்புகளையும் விட மலையக மக்களுடைய தேசிய உணர்வை திறமையாகப் பயன்படுத்தினார். அத்தோடு தனது தொழிற்சங்க அமைப்பைப் பெரிதாகக் கட்டியமைத்து பணபலம் நிரம்பிய ஒரு தொழிற் சங்க சாம்ராஜ்யமாக்கினார். அதனால் அவரை மேற் தட்டு வர்க்கத்தின் ஒரு பிரதிநிதியாக காலம் மாற்றியது. மாறி மாறி வரும் அரசாங்கங்களில் அங்கம் வகித்து அமைச்சர் பதவிகளை வகித்து ஒரு தொழிற்சங்கத் தலைவராக மட்டுமன்றி இலங்கையின் ஒரு பெரிய செல்வந்தராக வாழ்ந்து உயிர் நீத்தார். அவர் விட்டுச் சென்ற ‘செல்வாக்கும்”செல்வமும்: வாக்கு பலமும் அவரது வாரிசுக்களை காப்பாற்றி நின்றன.
அதனைத் தொடர்ந்து தற்போது வரை மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்களின் வரலாற்றை எழுதுவதுதான் இன்றைய எமது கதிரோட்டத்தின் நோக்கமல்ல. ஆனால் அன்று பாதிக்கப்பெற்ற தோட்டத் தொழிலாளர்கள் இன்றும்; பாதிப்படைகின்றார்கள்.
ஆனால் அவர்களை கண்டு கொள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்கள் பக்கம் தலை காட்டுவதே இல்லை என்பது அங்கு யதார்த்தமாகவே தோன்றும் ஒரு காட்சியாகும்.
வடக்கின் தமிழ்த் தலைவர்கள் போலவே மலையகத் தலைவர்களும் தங்கள் நலம் பேணுவதிலும், குடும்ப நலத்திலும் அக்கறையாக உள்ளார்கள். ஆளும் அரசாங்கம் பக்கத்திற்கு தலை சாய்த்து உல்லாசக் கதிரைகளில் சாய்ந்து கொள்கின்றார்கள்.
இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அவற்றை பட்டியலிடுவது சாதாரணமான விடயமல்ல. ஆனால் அவ்வப்போது மலையக மக்களைப் பாதிக்கும் பல விடயங்களில் தொடர்புடைய பல நண்பர்களின் கருத்துப்படி, அங்கு பாதிக்கப்படும் மலையக மக்களுக்கு அரசியல் தலைவர்களோ அன்றி தொழிற்சங்கத் தலைவர்களோ உதவிகள் தேவைப்படும் போது அவர்கள் மத்தியில் தோன்றுபவர்களாக இல்லை என்றே தெரிகின்றது.
சுpல வாரங்களுக்கு முன்னர் மலையகத்தின் சில பகுதிகளில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உதவிகளை வழங்கும் படி பல்வேறு இடங்களில் உள்ள சாதாரண மக்களின் உதவிகளை நாடுகின்றார்கள். “உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களோ அன்றி தொழிற்சங்கத் தலைவர்களோ உங்களுக்கு உதவிகள் வழங்குவதற்கு வருவதில்லையா?” என்று கேட்டால் பெரும்பாலும் “இல்லை” என்றே பதில் வருகின்றது.
தங்கள் உடலை வருத்தி வேலை செய்த தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப் பணத்தால் செல்வந்தச் சங்கங்களாக விளங்கும் தொழிற்சங்கங்களின் குடைகளின் கீழ் குளிர் காயும் தொழிற்சங்கத் தலைவர்கள், அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக வரவும், பின்னர் அமைச்சர்கள் ஆகவும் விரும்புகின்றார்களே தவிர தங்களுக்கு ஏணிப்படிகளாக விளங்கிய தொழிலாளர்கள் பற்றியும் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்களா என்றே கேட்கின்றோம். மேலும் மலையகத் தொழிலாளர்களின் சிறு சிறு கஸ்டங்களையாவது போக்கும் புண்ணியவான்களாக நீங்கள் காட்சி தரவேண்டும் என்பதையே இந்த வாரத்தில் அவர்களிடத்தில் வலியுறுத்த விரும்புகின்றோம்.