தென்னிலங்கை நோயாளர்கள் பலருக்கு தொடர்ச்சியாக கண் சத்திர சிகிச்சைகள் செய்து அவர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ள யாழ் வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் டாக்டர் மலரவன் தொடர்பாக கொழும்பு ஊடகங்கள் அவரைப் புகழ்ந்து செய்திகளை வெளியிட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெசாக் காலப்பகுதியில், யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவிற்கு தென்னிலங்கை மக்கள் பலர், குறிப்பாக அநுராதபுரத்திலிருந்து பல கண் நோயாளர்கள் செல்வதாக நாம் முன்னர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். மேற்படி யாழ்ப்பாண வைத்தியசாலையின் விசேட கண் வைத்தியர் எம். மலரவன் அவர்களின் விசேட நடவடிக்கை ஒன்றின் காரணமாகவே தென்னிலங்கை கண்நோயாளர்கள் பலர் தங்கள் நோய்கள் தீர்ந்து மகிழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பல்வேறு கண் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் ஏழ்மையான 2000 பேருக்கு கண் சத்திர சிகிச்சை செய்யும் புண்ணியத்தை மேற்படி வைத்திய நிபுணர் ஆரம்பித்துள்ளதை அறிந்த சுகாதார அமைச்சு யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு பல தென்னிலங்கை கண் நோயாளர்களை அனுப்பி வைத்தது.
இந்த கண் வைத்தியர் மலரவன் யாழ்ப்பாணத்தில் நன்கு புகழ்பெற்ற ஒருவர் என்பதும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில், தென்னிலங்கை மக்களுக்கு பல சத்திரசிகிச்சைகளை ஆற்றினார் என்றவகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போன தமிழ் வைத்தியராக மலரவன் தற்போது தென்னிலங்கையில் பேசப்படுவதாக கொழும்பு சிங்கள செய்தி வெளியிட்டுள்ளது.
இம்முறை வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது முழுமையான நேரத்தையும் பல்வேறு கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 2000 நோயாளிகளுக்கு இலவசமாக சத்திரசிக்சை செய்யப்படவுள்ளது. மலரவனினால் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அதிகமானோர் தென்னிலங்கையில் விவசாயம் போன்ற வருமானம் குறைந்த தொழில்களைச் செய்து சீவிக்கும் சிங்கள விவசாயிகள் என்பது இங்கு குறிப்பிட்த்தக்கது.